ஆங்கில வழி வகுப்புகளை விரிவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: வைகோ
By dn, சென்னை
First Published : 16 May 2013 02:25 AM IST
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை விரிவாக்கம் செய்யும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார். இது தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.
கடந்த கல்வியாண்டில் 320 அரசுப் பள்ளிகளில், முதல் மற்றும் 6-ஆம் வகுப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மொத்தம் 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு 22,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் பயிற்சி மொழிக்கும் பெரும் கேடு செய்யும்.
இதை எதிர்க்கும் அனைவரும் ஆங்கில மொழிக்கோ, ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொள்வதற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதையும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
காந்தி முதல் அண்ணா வரை தாய்மொழியில் கல்வி பயில்வதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.
தாய்மொழியை முதல் பயில்மொழியாகக் கொள்வதும் அதையே அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்று மொழியாகக் கொள்வதும்தான் உலக நடப்பு.
இரண்டாம் மொழியாக வேறொரு அயல் மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெறலாம். நம்மைப் பொருத்தவரை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்போம், கசடறக் கற்போம் என்றுதான் சொல்கிறோம்.
எனவே, தமிழக அரசு ஆங்கில வழி வகுப்புகளை விரிவாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment