நடப்பாண்டில் 1,000 புதிய ஆசிரியர் பணியிடங்கள்
By dn, சென்னை
First Published : 16 May 2013 12:12 AM IST
பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதன் மூலம், தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 1,000 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப் பேரவை விதி 110-இன் கீழ், முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மக்கள் தொகை 300 பேர் கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஒரு தொடக்கப்பள்ளி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 54 குடியிருப்புப் பகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த 54 குடியிருப்புப் பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும். அந்தப் பள்ளிகளுக்கு தேவைக்கேற்ப ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
உயர்நிலைப் பள்ளிகளைப் பொருத்தவரையில், 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும் மாணவர்கள் நலன் கருதி, நடப்புக் கல்வியாண்டில் மாநில நிதியிலிருந்தே 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
இந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர் நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
மொத்தம் 1,000 பணியிடங்கள்: நடப்பு கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 100 தலைமையாசிரியர் பணியிடங்களும், பள்ளிக்கு ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடம் வீதம் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 1,000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
6,081 குழந்தைகள்: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிநிமித்தம் இடம்பெயர்ந்து தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் தங்களது குடும்பங்களுடன் தாற்காலிகமாக குடியேறுகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்த 6 ஆயிரத்து 81 தொழிலாளர்களின் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் குழந்தைகளுக்கு கல்வி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நல்ல நோக்கத்துடன் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளிக்கும் திட்டம் என்ற புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும். இதன்படி, இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலே உள்ள பள்ளிகளில் முறையாகச் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு அவர்களின் தாய்மொழியும் கற்பிக்கப்படும்.
விளையாட்டுப் போட்டிக்கு உதவி: பள்ளி மாணவர்களை தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கவும், அவர்களுக்கு உதவி புரியும் வகையில் முதல் முறையாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.
மத்திய-மாநில அரசுகளின் உதவியுடன் 44 பெண்கள் விடுதிகள் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டும், அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. சாதகமான பதில் வரவில்லை. எனவே, ஒவ்வொரு விடுதியிலும் 100 பெண்கள் தங்கக் கூடிய 44 பெண்கள் விடுதிகள் கட்டப்படும். இதற்குத் தேவையான கூடுதல் நிதியான ரூ.31.46 கோடி மாநில அரசின் நிதியில் இருந்து உடனடியாக ஒதுக்கப்படும்.
கிராமப்புற மாணவர்களுக்கு பயன் அளிக்கக் கூடிய மாதிரி பள்ளிகளை தரமுடன் உடனடியாக கட்ட ரூ.38.44 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழ்நாடு பாடநூல் கழக பெயர் மாற்றம்
மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் விலையில்லாத பொருள்களை கொள்முதல் செய்யும் மையமாக தமிழ்நாடு பாடநூல் கழகம் விளங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் விலையில்லாத பொருள்கள் தரமானதாகவும், குறித்த காலத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் வெவ்வேறு இயக்ககங்கள் கல்வி சார்ந்த பணிகளில் தனிக்கவனம் செலுத்தி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில், மாணவ, மாணவியருக்காக வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்து விநியோகிக்கும் பணி இனி வருங்காலங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு வழங்கப்படும்.
மேலும், தமிழ்நாடு பாடநூல் கழகம் கொள்முதல் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட ஏதுவாக, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
No comments:
Post a Comment