வீட்டுப்பாடம் எழுதாத மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியை ரூ.1,000 இழப்பீடு வழங்க வேண்டும் மனித உரிமை கமிஷன் உத்தரவு
சென்னை
வீட்டுப்பாடம் எழுதாதற்காக மாணவனின் கன்னத்தை கிள்ளி காயத்தை ஏற்படுத்திய இந்தி ஆசிரியை ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது
கன்னத்தில் காயம்
சென்னை ராயப்பேட்டை ஜே.ஜே.கான் ரோட்டை சேர்ந்தவர் ஏ.மெஹரூனிசா. இவர், தமிழ்நாடு மாநில மனித உரிமை கமிஷனில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
சென்னை மயிலாப்பூரில் உள்ள கேசரி உயர்நிலைப்பள்ளியில், 2006–2007 கல்வியாண்டில் என் மகன் ஆரிப் இக்பால் 7–ம் வகுப்பு படித்தான். அப்போது, வீட்டு பாடம் எழுதவில்லை என்பதற்காக என் மகனின் கன்னத்தை இந்தி ஆசிரியை டி.ரமா கவுரி கிள்ளியதில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தேன். இந்த புகார் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விசாரணைக்கு வந்த என் கணவரை தலைமை ஆசிரியர் சீனிவாசராவ் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்று விட்டோம்.
இந்தி ஆசிரியர் விளக்கம்
ஆனால், புகார் கொடுத்ததை மனதில் வைத்துக்கொண்டு என் மகனை 7–ம் வகுப்பு இறுதி தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி வழங்கவில்லை. தலைமை ஆசிரியர் சீனிவாசராவும், இந்தி ஆசிரியர் ரமாகவுரியும் தனிப்பட்ட பகையினால் என் மகனை தோல்வி அடைய செய்துள்ளனர். இவர்களது நடவடிக்கை மனித உரிமை மீறிய செயலாகும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்தி ஆசிரியை ரமாகவுரி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தன் மீது மாணவன் ஆரிப் இக்பால் தந்தை போலீசில் கிரிமினல் புகார் கொடுத்துள்ளதாகவும், அந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், எனவே ஒரே காரணத்துக்கு இருவிதமான விசாரணை நடத்த முடியாது’ என்றும் கூறியிருந்தார்.
மீண்டும் விசாரணை
இதையடுத்து, மெஹரூனிசா கொடுத்த புகாரை தள்ளுபடி செய்து மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மெஹரூனிசா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மெஹரூனிசாவின் புகாரை மீண்டும் விசாரிக்க மனித உரிமை கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இதனடிப்படையில், இந்த புகாரை மாநில மனித உரிமை கமிஷன் தலைவர் (பொறுப்பு) நீதிபதி கே.பாஸ்கரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மாணவன் ஆரீப் இக்பாலை முன்விரோதம் காரணமாக 7–ம் வகுப்பில் தோல்வி அடைய செய்ததாக ஆசிரியர்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை ஏற்க முடியாது. விடைத்தாள் உள்ளிட்ட ஆவணங்களை பார்க்கும்போது, மாணவன் சரிவர தேர்வு எழுதவில்லை என்று தெளிவாகிறது.
இழப்பீடு வழங்க வேண்டும்
ஆனால், வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று மாணவனின் கன்னத்தை கிள்ளி, காயத்தை ஏற்படுத்தியதாக இந்தி ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த மாணவனுக்கு ஆசிரியர் ரமா கவுரி, ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை ஆசிரியர் ரமா கவுரி சம்பளத்தில் இருந்து வசூலித்து, மாணவனின் தாய் மெஹரூனிசாவிடம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment