தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள், குறைகளை எடுத்துக் கூறி நிவர்த்தி காண வேலைநாள்களில் கல்வி அலுவலர்களது அலுவலகங்களுக்கு வந்து செல்வதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்தும், ஆசிரியர்களது குறையை உடன் தீர்த்து வைக்கும் நோக்கிலும் சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை தமிழக அரசானது அறிவித்தது. கடந்த 2.11.2012-இல் பள்ளிக் கல்வித்துறை செயலர் அ.சபிதா மூலம் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
மாதந்தோறும் முதல் சனிக்கிழமைகளில் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெறும். 2ஆவது சனிக்கிழமைகளில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்காக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெறும்.
இந்த இரு முகாம்களிலும் தீர்வு கிடைக்காத மனுக்களுக்கு 3ஆவது சனிக்கிழமைகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் தீர்வு காணலாம். இங்கும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் 4ஆவது சனிக்கிழமை அந்தந்த கல்வி இயக்குநர் அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் தீர்வு காணலாம்.
ஆசிரியர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என ஆசிரியரல்லாத பணியாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடு்த்து வந்தனர்.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகம் ஆகியவற்றில் மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரை பணிபுரியும் ஊழியர்களும் இந்த சிறப்பு குறைதீர் முகாம் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இவர்களது கோரிக்கையின்படி கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமல்லாது பள்ளிகளில் துப்புரவு, குடிநீர், காவல், அலுவலக நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களையும் உள்ளடக்கியதாக குறைதீர் முகாம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஏற்கெனவே உள்ளதைப் போன்று சனிக்கிழமைகளில் நடைபெறும் குறைதீர்
முகாமில் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். பண பலன், பணிப் பலன், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்டவற்றில் குறைகள் இருந்தால் மனுக்கள் வழங்கி தீர்வு காணலாம். பணப் பலன்கள் குறித்த மனுக்கள் மீது முகாம் இடத்திலேயே உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலர் அ.சபிதா பிறப்பித்துள்ளார்.
அலுவலகங்களில் சிறப்புப் பதிவேடு!
சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தின்படி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள், தொடக்க, பள்ளிக் கல்வி இயக்ககங்களில் பதிவேடுகள் தயார் செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதிவேட்டில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளரது பெயர், பணிபுரியும் இடம், கோரிக்கை மனு வழங்கிய நாள், கோரிக்கை விவரம், தீர்வு செய்திருந்தால் அதன் விவரம் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை உயர் அலுவலர்களின் ஆய்வுக்குள்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment