கல்வி அலுவலர்களுக்கான மாநில ஆலோசனைக் கூட்டம்
By திருச்சி,
First Published : 02 June 2013 02:01 AM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படவுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தொடர்பாக கல்வி அலுவலர்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் பிஷப் ஹீபர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2,881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1) நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூலை மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மே 31-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 17-ம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் (முறையே முதல் மற்றும் இரண்டாம் தாள்) நடைபெறவுள்ளன.
சிறப்பு ஆசிரியர்களுக்கான நேரடி நியமனங்களும் விரைவில் நடைபெறவுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்ய பல்வேறு நிலைகளில் நடைபெறவுள்ள இத்தேர்வுகளை சிறப்பாக நடத்துவது, விண்ணப்பம் விநியோகம், விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பவது, தேர்வு மையங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் மூலம் விநியோகிப்பது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் ஜி. அறிவொளி, இணை இயக்குநர் சேதுராம வர்மா, துணை இயக்குநர் பூபதி மற்றும் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 32 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் 62 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment