பள்ளியை பூட்டி சென்ற தலைமை ஆசிரியை: குழந்தைகளை மீட்டனர் மக்கள்தேனி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாறுதலாகி, பணியில் சேர தலைமை ஆசிரியர் வந்தபோது, பள்ளியை தலைமை ஆசிரியை பூட்டிச் சென்றதால், பல மணி நேரம் வெளியில் காத்திருந்தார். பூட்டிய பள்ளிக்குள் சிக்கிய சத்துணவு பணியாளர்கள் மற்றும் குழந்தைகளை, ஏணி வைத்து அப்பகுதி மக்கள் மீட்டனர்.
மேல்மணலார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக இருந்தவர் ஜெகநாதன். இவருக்கு அண்மையில் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில், கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் உத்தரவு கிடைத்தது. இந்த உத்தரவுடன், நேற்று பகல், 12:30 மணிக்கு, பணியில் சேர வந்துள்ளார். அப்போது, பள்ளியின் முன்பக்க கேட்டிற்கு பூட்டு போடப்பட்டிருந்தது. சத்துணவு பெண் பணியாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர், பூட்டிய பள்ளிக்குள் சிக்கிக் கொண்டனர். "எங்களை வெளியில் திறந்து விடுங்கள்' என, அவர்கள் சத்தம் போட்டனர். கூடலூர் தெற்கு போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பள்ளிக்குள் இருந்தவர்களை ஏணி வைத்து, வெளியே கொண்டு வந்தனர். உள்ளே இருப்பது கூட தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டதாக அவர்கள் புலம்பினர்.
பணியில் சேர வந்த தலைமை ஆசிரியர் ஜெகநாதன் கூறியதாவது: நான் இங்கு பணியில் சேர வருவது தெரிந்தும், இங்கு பணியாற்றிய தலைமை ஆசிரியை மெர்சி, வேண்டுமென்றே, சத்துணவு பணியாளர்களையும், குழந்தைகளையும் உள்ளே வைத்து பூட்டிச் சென்றுள்ளார். இது குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை ஆசிரியை மெர்சி கூறியதாவது: இவர், பணியில் சேர வருவது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியாது. இன்று (நேற்று) காலை, ஏற்கனவே இரண்டு உதவியாசிரியர்கள் புதிதாக இங்கு பணியில் சேர்ந்தனர். இவர்களின் விவரங்களை தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றிருந்தேன். பள்ளிக்குள் சத்துணவு பணியாளர்கள் இருந்தது, எனக்கு தெரியாது. இவ்வாறு, அவர் கூறினார். நேற்று மாலை, 3:00 மணிக்கு, சாவி கொடுத்தனுப்பிய பின், பள்ளி திறக்கப்பட்டு, புதிய தலைமை ஆசிரியர் ஜெகநாதன் பணியில் சேர்ந்தார்.
No comments:
Post a Comment