ஜீப் மோதி மாணவி பலி எதிரொலி
தாளவாடி டிவைன் பள்ளி அங்கீகாரம் அதிரடி ரத்து
கருத்துகள்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தாலுகா தாளவாடியில் உள்ள டிவைன் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில் 7,1,13 அன்று பாதிரியார்கள் டேவிட், லூர்துசாமி ஆகியோர் ஜீப் ஓட்டிப் பழகினர். அப்போது சிறப்பு வகுப்பு முடித்து நடந்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி சந்தியா(15) மீது ஜீப் மோதியுள்ளது. இதில் அந்த மாணவி அதே இடத்தில் பலியானார். குஷ்மா (15) என்ற இன்னொரு மாணவி படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அந்தப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை வெடித்ததால் தாளவாடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 61 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், டிவைன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி நிர்வாகத்துக்கு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் (சென்னை) கடிதம் எழுதினார். பள்ளி வேலைநேரத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு உரிய முக்கியத் துவம் அளிக்காமல் மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது, பள்ளி வளாகத்தில் உரிய அனுமதியின்றி பள்ளிக்கு சம்பந்தப்படாத வெளியாட்களை வாகனம் ஓட்ட அனுமதித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்தது பற்றி அதில் விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பள்ளி தாளாளர் அளித்த விளக்கத்தை பரிசீலித்த நிலையில் டிவைன் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தற்காலிக அங்கீகாரத்தை ரத்து செய்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். எனினும் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் 31,5,13 வரை இருக்கும் என்றும் 1,6,13 முதல் அங்கீகார ஆணை திரும்பப்பெறப்படுகிறது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் தாள வாடி மலைப்பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வரும் 10ம் தேதி மற்ற பள்ளிகளை போல இந்தபள்ளி திறக்கப்படாவிட்டால் இங்கு படிக்கும் மாணவ மாணவிகளின் கதி கேள்விக்குறியாக உள்ளது
.
No comments:
Post a Comment