ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?
திற்பரப்பு: அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தும் அரசின் அறிவிப்பு பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உலகை சிறு கிராமம் போல் ஆக்கிவிட்டது. இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில், ஆங்கில அறிவு மிக முக்கியமானது ஆகும். வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் அறிவு களஞ்சியங்களை, ஆங்கிலம் அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நம்மால் எடுத்துக் கொள்ள முடியும்.
மேலும், ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே, பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆங்கில அறிவு இல்லாமல், உலகத்தோடு ஒட்ட வாழ்வது என்பது அரிதான செயலாகி விட்டது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளும் தற்போது ஆங்கில கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருவதை கண்கூடாக காணலாம்.
ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அறிந்து, ஏழை பெற்றோர்களும் மிகவும் கஷ்டப்பட்டு ஆங்கில வழி கல்வியை பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, படிக்க வைத்து வருகின்றனர். இதனால், தனியார் ஆங்கிலப்பள்ளிகள் வளர்ச்சியை நோக்கி பயணிக்க, அரசு பள்ளிகள் நாளுக்கு நாள் நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைய துவங்கியுள்ளது. ஆனால், தங்கள் வசதியையும் மீறி, ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி, தங்கள் குழந்தைகளை பலரும் படிக்க வைத்து வருகிறார்கள். இதனை, ஆங்கில மோகம் என கூறி சிலர் கொச்சைப்படுத்தினாலும், ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை எவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை.
தற்போது, பல அரசு பள்ளிகள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு பள்ளிகளின் நிலை மற்றும் ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு, கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வியை துவங்கியது.
தற்போது, தேவைப்படும் அனைத்து பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி துவங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, வருவாயில் பின் தங்கிய நிலையில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளனர். இதன்மூலம், அரசு பள்ளிகளின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் என்பது உண்மை.
ஆனால், ஆங்கில வழி கல்வியை மிகவும் தரமான முறையில் பயிற்றுவிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர். எனவே, ஆங்கில வழி கல்வியை துவங்கும் முன், தகுதி பெற்ற ஆசிரியர்களை இனம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆங்கில வழி கல்வியில், மாணவர்கள் பாடங்களை ஆங்கில வழியில் கற்பதை விட, ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்ற தகுதியை பெற வேண்டும் என்பது தான் கட்டாய தேவையாகிறது. ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் கொண்ட ஆழமான மொழி அறிவு மிக முக்கியம்.
தனியார் ஆங்கில வழி பள்ளிகளில், மாணவர்களுக்கு இதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதே தகுதியில் அரசு பள்ளி மாணவர்களும் கல்வி கற்றால் மட்டுமே, அரசின் நோக்கம் முழுமையடையும்.
"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது போல, ஆங்கில வழி கல்வி என்பது முக்கியமல்ல. அதன் முழு பலன் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், சிறப்பான ஆங்கில அறிவு பெற்று, அனைத்து சவால்களையும் சமாளிக்கும் திறனைப் பெறவேண்டும்.
இல்லாத பட்சத்தில் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு, தற்போது அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் திறமையும், தகுதியும் உள்ளவர்களுக்கு அரசு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும்.
துவக்கப்பள்ளி முடிக்கும் அரசுப்பள்ளி மாணவன், ஆங்கிலத்தில் சிறப்பாக, சரளமாக பேசும் திறன் உள்ளவனாக வெளியே வர வேண்டும். அதற்கான தகுதியுடைய ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருக்க வேண்டும்.
கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதற்கான திட்டங்களை தீட்டி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஏழை மாணவனும் ஏற்றம் பெறும் அரசின் இத்திட்டம், முழுமையாக வெற்றி பெறும் நிலை கல்வித்துறையிடம் உள்ளது.
இந்த சிறப்பான வாய்ப்பை நழுவ விடாமல், முழு வெற்றியை பெறச்செய்து, நம் எதிர்கால சந்ததியினர் உயர வழிவகுப்போம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
No comments:
Post a Comment