அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா நிறைவேறியது
By dn, சென்னை
First Published : 17 May 2013 04:46 AM IST
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை பிற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக நடத்துவதற்கான சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை நிறைவேறியது. மேலும் சில முக்கிய மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
அண்ணாமலைப் பல்கலைக்கழத்தை பிற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக நடத்தும் வகையில் அதற்கான சட்ட மசோதாவை, உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.பழனியப்பன் தாக்கல் செய்தார். இந்த மசோதா வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்த மசோதாவுக்கு இடதுசாரிக் கட்சிகள் வரவேற்புத் தெரிவித்தன. அதேசமயம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அந்த மசோதாவை தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசியது:-
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு கடந்த 98-ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையில் பல்வேறு காலகட்டங்களில் பல கோடி ரூபாய் மானியங்களாக அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 96-ஆம் ஆண்டு நிலவரப்படி, பல்கலைக்கழகத்தின் பணியாளர்களாக 3 ஆயிரத்து 46 பேர் இருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 12 ஆயிரத்து 352 பேர் பணியாற்றுகின்றனர்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை பாதுகாக்கும் திட்டமாகும். தொலைதூரக் கல்வி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். அங்கு, ஆட்சிமன்றக் குழு (சிண்டிகேட்) அமைக்கப்பட்டுள்ளது. செனட் (பேரவைக் குழு) அமைக்கப்படவில்லை என உறுப்பினர்கள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்துக்கான பாடத் திட்டங்களை வகுப்பதற்கு கல்விக் குழு தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு பாடத் திட்டங்களை வகுத்து, ஆட்சிமன்றக் குழுவுக்கு அனுப்பும். அந்தக் குழு பாடத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும். இதே போன்ற நடைமுறை கடந்த காலங்களில் வேறு பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டுள்ளது. சிறப்பான சட்ட மசோதா என பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேறியது.
மேலும் 11 மசோதாக்கள்: தமிழ்நாடு மாநில சொத்துவரி வாரிய சட்ட மசோதா, தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்துக்கான நிதியை ரூ.5.25 லட்சமாக உயர்த்துவது, தமிழ்நாடு கேளிக்கைகள் வரி மசோதா, தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட 11 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
அதில் முக்கிய மசோதாவான மாநில சொத்துவரி வாரிய சட்ட மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். வரி விதிப்பு மற்றும் வசூலிப்பு முறைகளில் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையை அந்த மசோதா பறிப்பதாக கருத்துத் தெரிவித்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் குழுத் தலைவர் அ.சௌந்தரராஜன்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வரிகள் சீரமைப்பு மற்றும் அவற்றை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சொத்து வரி வாரியம் அமைக்கப்படுவதாக அவர் பதிலளித்தார். இதன்பின், அந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
No comments:
Post a Comment