SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, May 31, 2013

AN ANALYSIS ON ENGLISH MEDIUM SECTIONS

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு சரியா?
ஜி.மீனாட்சி

வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் சட்டப்பேரவையில் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களின் கருத்துகள் இதோ...

எஸ்.எஸ்.ராஜகோபாலன் (கல்வியாளர்): தமிழ்நாட்டில் 1978-ஆம் ஆண்டு வரை 99 சதவீத மாணவர்கள் பொதுப் பள்ளிகளிலும், 98 சதவீத மாணவர்கள் தாய்மொழிவழிக் கல்வி வழியாகவும் படித்து வந்தனர். கல்விக்கான தனது நிதிச் சுமையைக் குறைத்துக் கொள்ள அரசு, தனியார் கல்விக்கூடங்களை பட்டி தொட்டியெல்லாம் தொடங்க அனுமதி அளித்தது. புதிய பள்ளிகள், ஆங்கிலவழி மெட்ரிக் பள்ளிகள் அத்துடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதிலும், புதிய பணி இடங்களை நிரப்புவதிலும் அரசு அக்கறை செலுத்தவில்லை. பொதுத் தேர்வு முடிவுகளே ஒரு பள்ளியின் தரத்தைக் குறிக்கும் என்ற தவறான எண்ணத்தால் தனியார் பள்ளிகள் கல்வியியல், உளவியல் கோட்பாடுகளுக்கு முரண்பட்டு மனன முறைக் கல்வியை வளர்த்தன. ஆங்கிலவழிக் கல்வியே சிறந்தது என்று மக்கள் எண்ணும் நிலை உண்டாயிற்று. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி புகுத்தப்படும் என்ற அரசின் அறிவிக்கை பிற்போக்குத்தனமானது. ஆங்கிலவழிக் கல்வி காரணமாகப் பெருமளவில் மாணவர் பள்ளியினின்று விலகவும் நேரிடும். தமிழிற்கும், தமிழர் நலனிற்கும் பாதிப்பை உண்டாக்கும். அரசுப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நியமித்து தரமான கல்வி அளிக்கவே அரசு முற்பட வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் மாநில பொதுச் செயலர்): அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்றுதான் அரசு அறிவித்துள்ளதே தவிர, அதற்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? ஆங்கில மொழி ஆசிரியர்கள் எத்தனை பேர் நியமிக்கப்படுவார்கள்? என்பது குறித்தெல்லாம் அரசு எதையும் சொல்லவில்லை.  கோத்தாரி கமிஷன், முத்துக்குமரன் கமிஷன், யஷ்பால் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு நிபுணர் குழுக்களும் தாய்மொழி வழிக் கல்வியையே அங்கீகரித்துள்ளன. தேசிய கல்வித் திட்டத்தைத் தழுவி கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு கல்வித் திட்டத்திலும் (2009) பயிற்று மொழி தாய்மொழியாகத்தான் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்காண்டிநேவியன் நாடுகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள். ஆங்கில வழியில் கற்பிப்பதன் மூலம் மாணவர்களிடையே எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது. எதையும் புரிந்து படித்தால்தான் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதற்கு தாய்மொழியே சிறந்தது. ஆங்கில மொழியில் சொல்லிக் கொடுக்கும்போது, மாணவர்கள் மனப்பாடம் செய்துதான் படிக்க வேண்டி வரும். திருப்பூரில் 500 குழந்தைகள் படிக்கும் தாய் தமிழ்ப் பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை கட்டணம் செலுத்தி பெற்றோர் படிக்க வைக்கிறார்கள். எந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வேண்டும் என்று கேட்பதில்லை. தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்றுக் கொடுக்கவேண்டும். வேண்டுமானால், ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்கலாம்.

‘ஆயிஷா’ நடராஜன் (எழுத்தாளர்): அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் சுமார் 30 சதவீதக் குழந்தைகள் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளுக்குத் தாவிவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதனால், நமது தமிழக அரசுக்கு தொடக்கப் பள்ளிக் கல்வி பற்றி ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அரசு அதிகாரிகள், நகரின் முக்கியப் பிரமுகர்களின் குழந்தைகள் இப்போதும் அரசுப் பள்ளிகளில்தான் படித்து வருகிறார்கள். உள்ளூர் அமைப்புகளின் ஆதரவுடன், அங்கெல்லாம் அரசுப் பள்ளிகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. சென்னை போன்ற ஒரு சில மாவட்டங்களில்தான், வறுமைக் கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கும் நிலை உள்ளது.  அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வர எண்ணியிருக்கும் அரசு, மெட்ரிக்குலேஷன், நர்சரி மற்றும் தனியார் பள்ளிகளில் இரண்டு பிரிவுகளிலாவது கட்டாயமாக தமிழ்ப் பிரிவை ஆரம்பிக்கட்டுமே! ஏன் செய்யவில்லை? இப்போதே, தமிழ் பேசாத ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிவிட்டோம். தாய்மொழியில் கல்வி கற்பிக்காவிட்டால், இந்த நிலை இன்னமும் மோசமடையும். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு முறை (சி.சி.ஏ.), செயல்வழிக் கற்றல் போன்றவை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. சமச்சீர் கல்வியென்றால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறை வேண்டும் என்பதுதானே? அரசு, முதலில் அந்த முறையை அமல்படுத்தட்டும்.

சோ.இராமு (அரசுப் பள்ளி ஆசிரியர், செம்பட்டி): அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே. ஆங்கிலப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கவேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாக இருக்கிறது. என்ன விலை கொடுத்து  வேண்டுமானாலும் ஆங்கிலக் கல்வியை தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்பதற்காக செலவைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், ஆங்கில வழிப் பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இலவசக் கல்வி, கல்வி உதவித்தொகை, சத்துணவு  மட்டுமல்லாமல் இலவச பேக், செருப்பு என்று சுமார் 12 பொருட்களை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது. அப்படியும் மாணவர் சேர்க்கை போதுமான அளவில் இல்லை. எனவே, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வந்தால் மாணவர் சேர்க்கை நிச்சயம் உயரும்.

ஆர்.ஜானகி (பெற்றோர்):  என் மகள் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். தாய் மொழியில் படிப்பதால், பாடங்களை எளிதில் புரிந்துகொள்கிறாள். அவள் பெரிய வகுப்புகளுக்குப் போகும்போது, அவளே விருப்பப்பட்டால், ஆங்கில வழிப் பிரிவில் சேர்த்துவிடுவோம். ஒரு குறிப்பிட்ட வயதுவரை தாய் மொழியில் கல்வி கற்பிப்பதுதான் குழந்தைகளுக்கு நல்லது. பெரியவர்களானதும், ஆங்கில வழியில் சேர்த்துவிடலாம்.

எஸ்.சதாசிவம் (பெற்றோர்) :  அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டால், என் பிள்ளைகளை நிச்சயம் அதில்தான் சேர்ப்பேன். ஆங்கிலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு, இந்தச் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் காணப்படுகிறது. மேற்படிப்புக்கு ஆங்கில மொழி அவசியம் என்பதால், அதை ஆரம்பப் பள்ளி முதலே கற்பிக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி
கீதா

சரண்டர்!

ச. தமிழ்செல்வன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

தேவைப்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகள் துவங்கப்படும். இதனால், ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்’ இவ்வாறு தமிழக கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பயில்வதற்கு உரிய வசதிகள் செய்துகொடுப்பதை எதிர்ப்பதற்கில்லை. ஆனால், அனைத்துப் பாடங்களையும் புரிந்துகொள்வதற்கான பயிற்றுமொழியே ஆங்கிலமாகத்தான் இருக்கும் என்பது அறிவியல்பூர்வமற்றது. பாடங்களைப் புரிந்து பயில்வதற்கு வழிசெய்யாமல், வெறும் மனப்பாட முறையை வளர்க்கிற இந்த நடவடிக்கையால் உண்மையில் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரும் கேடுதான் விளையும்.

ஏற்கெனவே தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆங்கிலவழிக் கல்வியின் பெயரால் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களின் இயற்கையான புரிதல் திறனை அழித்துள்ளன. தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்ப்பதற்காக என்ற பெயரில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, பயிற்றுமொழி தொடர்பான தனியார் நிர்வாகங்களின் மூர்க்கத்தனத்தை நியாயப்படுத்துவதாகவே இருக்கிறது.

உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், மக்கள் நலக் கல்வி இயக்கங்கள் தாய்மொழிவழிப் பயிற்சியே சுயமான சிந்தனை வளர்ச்சிக்கும் சரியான புரிதலோடு கூடிய கல்வி மேம்பாட்டிற்கும் ஏற்றது என்கிற அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தாய்மொழி அல்லாத வேறு மொழி வழியாகப் பயில்வது, திறமையான அடிமைகளை உருவாக்குமேயன்றி சுயமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களையோ, கண்டுபிடிப்பாளர்களையோ உருவாக்காது.

உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப, நவீன அடிமைகளை உருவாக்குவதற்கு ஏற்பவே அதன் கல்வி மற்றும் மொழிக் கொள்கைகள் வார்க்கப்படுகின்றன. அந்தக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு மாறாக, இவ்வாறு அரசுப்பள்ளிகளிலேயே ஆங்கிலப் பயிற்றுமொழியைத் திணிப்பது என்பது அவற்றின்முன் சரணடைகிற செயலாகவே இருக்கிறது."



சம வாய்ப்பு!

டாக்டர். உமா
உதவிப் பேராசிரியை, இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம், புதுதில்லி

தமிழக அரசின் இந்த சமீபத்திய முடிவு, வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தங்களுக்கு விருப்பமான மீடியத்தை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு,  தற்போது குறிப்பட்ட சதவிகித மாணவர்களுக்கு மட்டுமே உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு, தாங்கள் விரும்பிய மீடியத்தை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை எல்லா மாணவர்களுக்கும் சமமாக அளித்துள்ளது. தங்கள் குழந்தையை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கலாமா, தமிழ் மீடியத்திலா என்கிற தேர்வும் (choice) பெற்றோர்களுக்கு கிடைத்துள்ளது. அதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

தற்போது பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சினை, பள்ளிக் கல்வி முழுவதும் தமிழிலேயே படித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவர்களால் பாடத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்களோடு இயல்பாகப் பழக முடிவதில்லை. ஒருவித தாழ்வு மனப்பான்மையுடனேயே இருக்கிறார்கள்.

ஆங்கிலம்தான் சிறந்த மொழி என்பதற்காகவோ, அதில் படித்தால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காகவோ மட்டுமே ஆங்கிலத்தை சிபாரிசு செய்வதில்லை. உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் அலுவல் மொழி அது. அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றை எப்படித் தமிழில் கற்றுத் தர முடியும். அதற்கான சொற்றொடர்கள் தமிழில் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அவை அனைத்தும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் வழக்கத்தில் இல்லை. நடைமுறையில் எளிமையாக, பரிச்சயமாக உள்ள ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு அறிவியலைக் கற்றுக் கொடுத்தால்தான் மாணவர்களால் புரிந்துகொள்ள இயலும். அப்படிப் படித்துவிட்டு கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள், தன்னம்பிக்கையுடன் கல்லூரிப் பாடத்தை கற்றுக் கொள்ள முடிகிறது.

ஆங்கில மீடியம் படித்த மாணவர்களுக்கு இணையான நிலைக்கு தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் வருவதற்கு பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் சில தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் ஆங்கிலத்தில் சொல்வதை ஓரளவு புரிந்துகொண்டாலும் அதை  எழுதுவதற்கோ, திரும்பச் சொல்வதற்கோ அவர்களால் முடிவதில்லை. ஆரம்பக் கல்வியே ஆங்கிலத்தில் படித்துவிட்டால், இந்த நடைமுறைச் சிக்கல்களை மிக எளிதாகத் தவிர்த்துவிட முடியும். உலகமயமாக்கல் என்பது தமிழக அரசோ, மத்திய அரசோ தீர்மானிக்கும் விஷயம் கிடையாது. இது சர்வதேச அளவில் நடக்கும் மாற்றம். மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நம்மைத் தயார் செய்து கொண்டால்தான் அவர்களோடு போட்டி போட முடியும். இல்லை, நான் இப்படியேதான் இருப்பேன் என்று சொன்னால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.

தமிழக அரசின் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு, மாணவர்களின் மொழித் திறனை வளர்க்கத் தேவையானதைச் செய்ய வேண்டும். இதற்காக ஆரம்பப் பள்ளிகளில் மொழியை (தமிழ், ஆங்கிலம் இரண்டும்) கற்றுக் கொடுக்கப் போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசை வற்புறுத்த வேண்டும். நம்முடைய கருத்துக்கள், விவாதங்கள், சிந்தனைகள் அனைத்தும் தற்போதுள்ள உலகமயமாக்கல் சூழலில் நம் குழந்தைகளுக்கு அறிவான, தன்னம்பிக்கை தரக்கூடிய, தரம் வாய்ந்த கல்வியை தருவது எப்படி என்பதை நோக்கியே இருக்க வேண்டும்."

No comments: