கிராமத்தில் சுமார் 900 மரக்கன்றுகள் நட்டு 9 ஆண்டுகளாக வளர்க்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள்
By JEYAKUMAR.K, ஸ்ரீவில்லிபுத்தூர்
First Published : 07 April 2013 01:03 PM IST
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 9 ஆண்டுக்கு மேலாக ஆண்டு தோறும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. முழுவதும் தலித் மாணவ மாணவியர் படிக்கும் இப் பள்ளியில் ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் ஆசிரியர்களின் முயற்சியால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு ஆண்டு குழந்தைகள் தினத்தன்று பள்ளியில் படிக்கும் அனைத்து 175 மாணவ மாணவியருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்த மரக்கன்றுகளை சரிவர பராமரித்து வளர்க்கும் மாணவ மாணவியருக்கு பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அனைதது மாணவ மாணவியருக்கும் ஒரு தேக்கு மற்றும் ஒரு வேம்பு கன்று வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட மொத்த மரக்கன்றுகளின் எண்ணிக்கை 450 ஆகும்.மரக்கன்றுகளை வழங்கி ஆசிரியை என்.ரெங்கலதா பேசுகையில் கூறியதாவது:
புவி வெப்பமடைவதைத் தவிர்க்க ஒவ்வொரு நாடும் பல திட்டங்களைச் செயல்படுத்தி தங்கள் பகுதிகளில் வெப்பத்தின் அளவைக் குறைக்க கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றன. இந்தியாவில் இத்தகைய புவிவெப்பத்தைக் குறைக்க உதவும் திட்டங்களை, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்டத்திரங்களான இன்றைய மாணவர்களிடம் வழங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று எண்ணி இத்திட்டத்தை தொடங்கினோம். இந்த கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் நல்ல பலனை கொடுத்துள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.ஆண்டு தோறும் வழங்கப்படும் மரக்கன்றுகளில் பாதியையாவது மாணவர்கள் வளர்த்தாலே போதும், அந்தந்தப் பகுதிகள் செழிப்பாகிவிடும். ஆனால் இங்கு காந்திநகர், நரையன்குளம் மற்றும் ஒத்தப்பட்டியிலிருந்து வந்து படிக்கும் அனைத்து மாணவர்களும் இதை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வளர்க்கிறார்கள்.
அரசு எத்தனைதான் திட்டங்களைக் கொண்டு வந்து மரக்கன்றுகளை வளர்க்க நடவடிக்கை எடு்ததாலும், ஆசிரியர்கள் நினைத்தால் தாங்கள் பணிபுரியும் கிராமப்பகுதியை எந்தவித விளம்பரமும் இன்றி, செலவு இல்லாமல் செழிப்பாக்கி புவி வெப்பமடைவதை தங்களால் இயன்ற அளவு நிச்சயமாக குறைக்க முடியும் என்றார் அவர்.

No comments:
Post a Comment