என். ஹரிபிரசாத்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த இலவசப் பயிற்சியை ஆன்லைன் வழியாக வழங்குகிறது மத்திய அரசு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில், மத்திய அரசு, ஆன்லைனில் அந்தச் சட்டம் குறித்த சான்றிதழ் பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) ம்2005ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் அரசுடைய செயல்பாடுகளைப் பற்றியும், அரசு அதிகாரிகளின் அலுவல் பற்றிய தகவல்களையும், இச்சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசின் சில துறைகளில் மட்டும் இச்சட்டத்தைப் பயன்படுத்த சில வரம்புகளும் விதிவிலக்கும் உள்ளன.
இந்த இலவச ஆன்லைன் பயிற்சி, 7 நாட்கள் மற்றும் 15 நாட்கள் என இரண்டு வகைகள் உள்ளன. 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 கேள்விகள் கேட்கப்படும். அந்தக் கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை அளித்தால் மட்டுமே அடுத்த பிரிவிற்குச் செல்ல முடியும். மேலும், இந்த 7 நாட்கள் கொண்ட பயிற்சியில் வெற்றி பெற்றால் மட்டுமே, 15 நாட்கள் கொண்ட பயிற்சியில் சேர முடியும்.
இந்தப் பயிற்சியில் சேர்வதற்காக சில தகுதிகள் இருக்கின்றன. பயிற்சியில் சேரும் ஆண்/பெண் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தப் பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால், அதனைப் படித்து புரிந்துகொள்ளும் அளவு, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
தகவல் உரிமைச் சட்டத்தின் இலவச ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், அதனுடைய தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர், பதிவு செய்தவர்களுக்கென கடவுச்சொல் (password) மற்றும் பயனாளர் ஐ.டி. (user id) குறித்த தகவல்கள் மெயிலில் தெரிவிக்கப்படும். அந்த விவரங்களைக் கொண்டு ஆன்லைன் பயிற்சித் தளத்தில் நுழைந்தால், பயிற்சியை தொடங்கலாம்.
மேலும் இந்தப் பயிற்சியைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பார்க்கலாம். http://rtiocc.cgg.gov.in
No comments:
Post a Comment