!
எல்லுச்சாமி கார்த்திக் (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)
இந்தக் கணினி யுகத்தில் இப்போதெல்லாம் பேனாவின் பயன்பாடு கையெழுத்துப்போட மட்டுமே என்றாகி விட்டது. ஆனால், அந்தக் கவலையை மாற்றி எழுத வந்து விட்டது ஒரு புதிய பேனா.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Falk Wolsky மற்றும் Mandy Wolsky என்ற தம்பதி, பிழையில்லாமல் எழுத கற்றுத் தரும் பேனாவை உருவாக்கி, அதற்கு Lernstift என்று பெயரும் சூட்டியுள்ளனர். ஜெர்மன் மொழியில் Lernstift என்றால், எழுதக் கற்றுக் கொள்வது என்று பொருள்.
தங்கள் மகன் பிழையில்லாமல் வார்த்தைகளை எழுதுவதற்கு சிரமப்பட்டதைக் கண்டு வருந்தியபோது, பிழையிருந்தால் சுட்டிக்காட்டுகிற பேனாவை உருவாக்க வேண்டும் எனத் தோன்றியதாம் இத்தம்பதிக்கு.
பிழையிருந்தால் அது எப்படி சுட்டிக்காட்டும்?
இந்தப் பேனாவை கொண்டு எழுதும்போது, வார்த்தைப் பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ இருந்தால், அதனுள் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சென்சார்கள் அதைக் கண்டுணர்ந்து எழுதுபவர்களின் விரல்களுக்கு அதிர்வுறு அலைகளின் (VIBRATION WAVES) மூலம் சுட்டிக்காட்டும் தன்மையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அதிர்வுறு அலைகளின் எச்சரிக்கையால், எழுதுபவர்கள் தாம் எழுதியிருப்பதில் பிழையுள்ளது என்பதை அறிந்து, அவர்கள் செய்த பிழையை அவர்களே திருத்திக்கொள்ள உதவுகிறது இந்தப் பேனா.
பொதுவாக சிலரின் கையெழுத்து தெளிவாக இருக்காது. ஆனால், பிழையில்லாமல் எழுதுவார்கள், அதுவே ஒரு சிலருக்கு கையெழுத்து தெளிவாக இருந்தும் வார்த்தைகளை பிழைகளுடன் எழுதுவார்கள். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் Lernstift பேனாவிலுள்ள முறைகள் (MODE) பெரிதும் உதவுகின்றன. இதிலுள்ள CALLIGRAPHY முறையை/மோடை தேர்வு செய்து எழுதும்போது, எழுத்துக்களின் வடிவங்கள் தெளிவில்லாமல் இருந்தால், எழுதுபவர்களுக்கு ஒரு முறை அதிர்வுற்று சுட்டிக்காட்டும் தன்மையுடனும், ORTHOGRAPHY முறையை/மோடை தேர்வு செய்து எழுதும்போது வார்த்தைகளில் பிழையிருந்தால் ஒருமுறை அதிர்வுற்றும், இலக்கணப் பிழையிருந்தால் இரண்டு முறை அதிர்வுற்றும் தவறுகளை சுட்டிக்காட்டும்.
முதல் பதிப்பில் (VERSION1) பிழைகளை மட்டும் சுட்டிகாட்டும் இந்தப் பேனாவின் இரண்டாம் பதிப்பில் (VERSION2) WI-FI, Bluetooth போன்ற டிஜிட்டல் சமாச்சாரங்களை சேர்க்க உள்ளார்களாம். இதன் மூலம் நாம் இந்தப் பேனாவைக் கொண்டு எழுதும் அனைத்தையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்ளும் வசதியைக் கொண்ட மென்பொருள் ஒன்றையும் உருவாக்கி வருகிறார்களாம். வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் பேனாவிற்கான முன்பதிவு தற்போது இந்நிறுவனத்தின் இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. இதைப் பெற விரும்புபவர்கள் அந்த லிங்கை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். விலை சுமார் 3,000 முதல் 6,000 ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிச்சயமாக இந்தப் பேனா, மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடத்தும் பெரும் வரவேற்பைப் பெறுவது உறுதி.
No comments:
Post a Comment