ஜி.மீனாட்சி மற்றும் மோ.கணேசன்
தமிழகத்தில் இயங்கி வரும் நர்சரி வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரையுள்ள 12,500 பள்ளிகளும் தர வரிசைப்படுத்தப்படவுள்ளன. இதற்காக அரசு பல்வேறு வரையறைகளை நிர்ணயித்துள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதம், வகுப்பறைகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் சம்பளம், விளையாட்டு மைதானம், படிப்பு நீங்கலாக, மாணவர்களின் இதர திறமைகள், பள்ளி நூலகங்களில் இருக்கும் தகுதியான நூல்களின் எண்ணிக்கை, பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் வசதிகள், கல்வி மற்றும் பள்ளிகளின் செயல்பாட்டிலுள்ள வெளிப்படைத் தன்மை போன்ற வரையறைகளை கருத்தில்கொண்டு பள்ளிகளுக்கான தரம் நிர்ணயிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் நர்சரி வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரையுள்ள 12,500 பள்ளிகளும் தர வரிசைப்படுத்தப்படவுள்ளன. இதற்காக அரசு பல்வேறு வரையறைகளை நிர்ணயித்துள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதம், வகுப்பறைகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் சம்பளம், விளையாட்டு மைதானம், படிப்பு நீங்கலாக, மாணவர்களின் இதர திறமைகள், பள்ளி நூலகங்களில் இருக்கும் தகுதியான நூல்களின் எண்ணிக்கை, பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் வசதிகள், கல்வி மற்றும் பள்ளிகளின் செயல்பாட்டிலுள்ள வெளிப்படைத் தன்மை போன்ற வரையறைகளை கருத்தில்கொண்டு பள்ளிகளுக்கான தரம் நிர்ணயிக்கப்படவுள்ளது.
மிகவும் தரமான பள்ளிகளுக்கு 76 முதல் 100 புள்ளிகள் வழங்கப்பட்டு ‘ஏ’ கிரேடு அளிக்கப்படும். 51 முதல் 75 வரை புள்ளிகள் பெறும் பள்ளிகளுக்கு ‘பி’ கிரேடு கொடுக்கப்படும். 25 முதல் 50 வரை புள்ளிகள் பெறும் பள்ளிகளுக்கு ‘சி’ கிரேடும், 26 புள்ளிகளுக்கு கீழுள்ள பள்ளிகளுக்கு ‘டி’ கிரேடும் வழங்கப்படும்.
பள்ளிக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக அரசு 2009-ல், பள்ளிகளுக்கு வழங்கிய கேள்வித்தாள்களில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும் என்று தெரிகிறது.
பள்ளிகளை தரவரிசைப்படுத்துவது சரியா? இதனால் யாருக்குப் பயன்? அப்படி தரவரிசைப்படுத்தினால், பள்ளிகள் சரிவர செயல்பட முடியுமா? மாணவர்களின் கல்வித் தரம் உயருமா?
இதுகுறித்து கல்வியாளர்களும், தனியார் மற்றும் அரசுப் பள்ளி நிர்வாகிகளும், தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் என்ன நினைக்கிறார்கள்?
‘ஆயிஷா’ நடராஜன் (எழுத்தாளர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்): மாணவர்களுக்கு ரேங்கிங் கூடாது, மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு ரேங்க் போட்டு பிரிக்கக்கூடாது என்று சொல்லி வரும் அரசு, தற்போது பள்ளிகளுக்கு தர வரிசை கொடுக்க முன்வந்திருப்பது வியப்பாக இருக்கிறது. பள்ளிகளுக்கு கிரேடிங் போடுவதால், எந்த வகையில் கல்வி வளர்ச்சிக்கு உதவ முடியும்? இது எதிர்மறையான விளைவுகளையல்லவா ஏற்படுத்தும்?
ஒரு பள்ளியில் கட்டடம் சரியில்லை, ஆய்வுக்கூடம் சரியில்லை, மைதானம் இல்லை என்று சொல்வதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஒரு பள்ளியின் தரம், அதன் ஆசிரியர்களைப் பொருத்தே நிர்ணயிக்கப்படவேண்டும். தகுதியும், திறமையும் வாய்ந்த எத்தனையோ ஆசிரியர்களால்தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடிகிறது. எந்தப் பள்ளியில் மாணவர்களின் திறமை பட்டை தீட்டப்படுகிறதோ, அந்தப் பள்ளியே சிறந்த பள்ளி.
நகர்ப்புறங்களில் ஒரு சில தனியார் பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சியைக் காட்டுகிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி அளித்து 40 சதவீதம் தேர்ச்சியைக் காட்டினாலேயே, அது பெரிய விஷயமல்லவா? பெற்றோருடன் கூடமாட வேலைக்குச் சென்றுவிட்டு, பின்னர் பள்ளிக்கூடம் வருகிற குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவதும், அந்தக் குழந்தையை தேர்ச்சி பெற வைப்பதும் கிராமப்புற பள்ளி ஆசிரியருக்குப் பெரிதும் சவாலான விஷயம். இப்படிப்பட்ட பள்ளியை, நகர்ப்புறப் பள்ளியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?
ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் எத்தனை என்ற அடிப்படையிலும், அந்தப் பள்ளியிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கின்றனவா? கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும் ஆராய்ந்து பார்த்து கிரேடு வழங்கலாம்.
மக்கள்தொகை பெருக்கம் மிகுந்த இந்தியாவில், விளையாட்டு மைதானம் போன்ற விசாலமான இட வசதியுடன்கூடிய பள்ளிகளை எதிர்பார்ப்பது கடினம். அப்படிப்பட்ட பள்ளிகளை இனங்கண்டு அரசே, அவர்களுக்கான விளையாட்டு மைதானங்களை ஒதுக்கலாம். பள்ளிக்கு அருகே இருக்கும் அரசுப் பூங்கா அல்லது மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை குறிப்பிட்ட பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பேற்படுத்தித் தரலாம்.
பாலாஜி சம்பத் (கல்வி ஆர்வலர்): பள்ளிகளுக்கு மதிப்பீடு கொடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால், எதை வைத்து மதிப்பீடு செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம். எந்தெந்தப் பள்ளிகளுக்கு ரேட்டிங் கொடுக்கப்படும் என்பதையும் அரசு தெளிவுபடுத்தவேண்டும். தனியார் பள்ளிகளுக்கு ரேட்டிங் அளிப்பதுடன், அரசுப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ரேட்டிங் கொடுக்க வேண்டும்.
அரசால் இயக்கப்படும் பள்ளிகளில் அரசு விதித்துள்ள அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளனவா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அத்துடன் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தை அரசுப் பள்ளிகளுக்கும் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகளுடன், தனியார் பள்ளிகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முடியும். ஆசிரியர்களின் சம்பளத்தை வைத்து ரேட்டிங் போடக்கூடாது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் சம்பளம் அதிகம். தனியார் பள்ளிகளில் குறைவு. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்துக்கு ஏற்ப, தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தையும் அதிகமாக்க வேண்டும் என்றால், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டி வரும்.
அரசுப் பள்ளியில் நல்ல விளையாட்டு மைதானம் இருக்கிறது, அங்கு ஆசிரியர்களின் சம்பளம் அதிகம் போன்ற காரணங்களுக்காக எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கற்பிக்கப்படும் கல்வியில் தரம் இருக்கிறதா? பாடங்களை சரளமாக வாசிக்கும் திறன், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு இருக்கிறதா? மாணவர்களின் கல்வித் தரம் எப்படியிருக்கிறது? படைப்பாக்கத்திறன் அவர்களுக்குள் இருக்கிறதா போன்ற அனைத்தையும் கருத்தில்கொண்டுதான் மதிப்பீடு செய்ய வேண்டும்.
மாணவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பீட்டையும், பள்ளியின் அடிப்படை வசதிகள், ஆசிரியர் சம்பளம் போன்றவற்றுக்கு 20 சதவீத மதிப்பீட்டையும் அளித்தால்தான் அது ஒரு சிறந்த மதிப்பீடாக இருக்க முடியும்.
ஜெகன்னாதன் (தனியார் பள்ளி முதல்வர், தேனி): பள்ளிகளுக்கு கிரேடிங் சிஸ்டம் தேவையில்லை. இப்படி கிரேடிங் சிஸ்டம் வைத்துவிட்டால், சிறந்த மாணவர்களை மட்டுமே, ‘ஏ’ கிரேடு வாங்கிய பள்ளிகள் சேர்த்துக்கொள்ளும். காரணம் அவர்களது, ‘ஏ’ கிரேடினை தக்க வைத்துக்கொள்ள இந்தப் பாணியைப் பின்பற்றும். இது சுமாராக படிக்கக்கூடிய, ஓரளவிற்கு சிறப்பாக படிக்கக்கூடிய மாணவர்களைப் பாதிக்கும். தரம் குறைந்த பள்ளியில்தான் படிக்கிறோமா என்ற தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.
ஸ்ரீதர் (அரசுப் பள்ளி தலைமையாசிரியர், சென்னை):பள்ளிகளுக்கு இடையே ரேங்கிங் முறை வந்தால், அது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். சில பள்ளிகளில் நல்ல மாணவர்கள் இருப்பார்கள், ஆனால் பள்ளிக்கூடத்திற்குரிய வசதிகளில் சில இருக்காது. இப்படி திறமையான மாணவர்கள் இருந்தும், அடிப்படை வசதிகள் இல்லாமல் போனால் அந்தப் பள்ளியை, ‘சி’ கிரேடு என்றோ, ‘பி’ கிரேடு என்றோ ஒதுக்கிவைத்தால், அது மாணவர்களின் படிப்புத் திறனை பாதிக்கலாம். நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கும் நகர்ப்புறத்திற்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகள் மேலும் மேலும் அதிகமாகும். இதனால், ஆசிரியர்களிடையே தாழ்வு மனப்பான்மை, பள்ளியின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையின்மை உள்பட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
துரைசாமி (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், மொடக்குறிச்சி): இப்படி ஒரு சிஸ்டம் பள்ளிகளிடையே கொண்டு வந்தால் அது நல்லதுதான். சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தும், அங்குள்ள ஆசிரியர்கள் ஏனோதானோவென்று இருப்பார்கள். மாணவர்களுக்காக எதையும் செய்யமாட்டார்கள். ஆனால், சில பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் நலனிற்காகப் பல விஷயங்களை செய்கிறார்கள், போராடுகிறார்கள். இந்த சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், உன்னத ஆசிரியர்களின் உழைப்பு வெளிப்படும். மாணவர்களின் திறன் மேம்படும். ‘டி’, ‘சி’, ‘பி’ கிரேடு பெற்ற பள்ளிகள் ‘ஏ’ கிரேடு பெறுவதற்கு முயற்சிக்கும். முன்னேற வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்ற உந்துதல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும்.
சென்னை மாநகராட்சிப் பள்ளித் தலைமையாசிரியர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை): இந்த சிஸ்டம் சரியானதுதான் என்றாலும், இதை வைத்து ஒவ்வொரு பள்ளிக்கும் பிராண்ட் முத்திரை குத்திவிடக் கூடாது. அப்படி பிராண்ட் முத்திரை ஒரு பள்ளிக்கு அமைந்து விட்டால், அது மறைமுகமாக பணச்சேகரிப்பிற்கு வழிவகுத்து விடும். ‘ஏ’ கிரேடு பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அதீதப் பணம் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிடும். அடிப்படை வசதிகளை வைத்து பள்ளிகளை தரம் பிரித்தல் நலம் பயக்கும் என்பதை மறுக்க முடியாது. இதனால், ஒவ்வொரு பள்ளியும் தங்களது மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், படிப்புக்கேற்ற வசதிகளை செய்து தரும்போது அது நன்மையைத்தான் விளைவிக்கும். ஒவ்வொரு பள்ளியும் போட்டிபோட்டுக்கொண்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்துவிடும்.
ஆனால், தேர்ச்சி விகிதத்தை வைத்து மதிப்பிட்டால் மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ‘சி’ கிரேடு, ‘டி’ கிரேடு போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ‘நாம் தரம் குறைந்த பள்ளியில் படிக்கிறோம்’ என்றும், அங்கே பணிபுரியும் ஆசிரியர்களிடமும் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், அது கல்வி பயில்வோருக்கு நன்மையைத் தராது.
எம்.கே.சாந்தாராம் (மருத்துவர், சேத்துப்பட்டு): பள்ளிகளுக்கு ரேங்கிங் சிஸ்டம் வரவேற்கக்கூடிய ஒன்றுதான். அப்போதுதான் மக்களுக்கு எந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய, தரமான கல்வி கிடைக்கிறது என்பது தெரியும். பின்னடைவில் இருக்கிற பள்ளிகளும் ‘ஏ’ கிரேடு பெறுவதற்கு முயற்சிக்கும். இதனால், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்மைதான் ஏற்படும். ஆனால், இந்த கிரேடுகளை பள்ளிகள் வாங்குவதற்கு தவறான வழிகளில் ஈடுபடுவதற்கும், இதை வைத்து அரசியல்வாதிகள், அதிகாரிகள் பணம் பண்ணுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
வேலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இந்த சிஸ்டம் நல்லதுதான். ஆனால், கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. இப்படி அடிப்படை வசதிகளை வைத்து தரம் பிரிப்பதால் பள்ளிகளிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும். ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களது பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். அப்படி உயர்ந்தால், தங்களது தரமும் உயரும் என்ற நம்பிக்கை வரும். அது சிறந்த பலனைத் தரும் என எதிர்பார்க்கலாம். கிரேடு குறைந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும். ஆனால், அந்தக் கிராமத்தில் ஒரே ஒரு பள்ளிதான் இருக்கிறது. ஆனால் அது ‘டி’ கிரேடில்தான் இருக்கிறது. அப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற நிலை வந்தால், தரம் குறைந்த பள்ளியில் படிக்கிறோம் என்ற மனநிலைக்கு மாணவர்கள் தள்ளபட்டுவிடக் கூடாது.
க. உமா (தாம்பரம்): என்னுடைய பிள்ளைகளை இங்குள்ள தனியார் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன். கிரேடு முறையில் பள்ளிகள் வகைப்படுத்தப்பட்டால், கிரேடிற்கு தகுந்தாற்போல பெற்றோர்களிடம், மறைமுகமாக அதிகப் பணம் வசூலிக்க ஆரம்பித்து விடும் அபாயம் இருக்கிறது. எனது மகன்கள் படிக்கும் பள்ளியில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. ஆனால், படிப்பு தரமாக இருக்கிறது. இதே பகுதியில் மற்றொரு பள்ளியில் மிகப்பெரிய மைதானம் இருக்கிறது. ஆனால், கல்வி தரமாக இல்லை. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பதுதான் நகரப்பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் நிலை. இவற்றையெல்லாம் ஒருங்குபடுத்தி, கிரேடிங் சிஸ்டம் கொண்டு வந்தால் அது நன்மையைத் தரும்.
தேனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் செயலாளர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை): இது முற்றிலும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை நசுக்கும் வேலை. ஏற்கெனவே சமச்சீர் கல்வித்திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து, மெட்ரிக்குலேஷன் பாடங்களில் இதனைப் புகுத்தினார்கள். இப்போது கிரேடிங் முறையைக் கொண்டுவந்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசு குறைக்கப் பார்க்கிறது.
வீ. மோகன் ராஜி (சேலம்): பள்ளிகளிடையே கிரேடிங் சிஸ்டத்தை கொண்டு வரும் திட்டத்தோடு, மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஆசிரியர்களையும் தரம்பிரிக்க வேண்டும். இதனால், தரம் குறைந்த ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொண்டு, மாணவர்களை நல்ல முறையில் தயார் செய்வர். அனுபவத்திற்குப் பதிலாக, ஆசிரியரின் திறமைக்குத் தகுந்தாற்போல சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
பொன். விமலா (திருச்சி): எனது மகள் தனியார் பள்ளியில்தான் படிக்கிறாள். இப்பள்ளியில் எல்லா வசதியும் இருக்கிறது. இதற்கு நான் கொடுக்கும் விலையும் அதிகம். கிரேடிங் சிஸ்டம் கொண்டுவந்து, சில ஆண்டுகளுக்குள் அனைத்துப் பள்ளிகளும் ‘ஏ’ கிரேடை அடைந்து விட்டால், அரசுப் பள்ளியிலேயே எனது மகளை சேர்த்துவிடுவேன்.
No comments:
Post a Comment