இடைநிலை கல்வியில் மாணவிகள் வருகை குறைவு-19-07-2012
காரைக்குடி: அரசுப் பள்ளிகளில் ஆரம்ப நிலையில் மாணவிகள் வருகை அதிகமாகவும், இடைநிலையில் குறைவாகவும் இருக்கிறது என, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் சுரேஷ் கூறினார்.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, சென்னை ஐ.ஐ.டி., கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலையில் இருந்து நிபுணர் குழுக்களை, மத்திய அரசு நியமித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி., சார்பில் பேராசிரியர்கள் சுரேஷ், மிலிந்த் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகபட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று, காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து பேராசிரியர் சுரேஷ் கூறியதாவது: நாடு முழுவதும் 48 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசுப் பள்ளிகளில், கற்றல் முறை சிறப்பாக உள்ளது. தற்போது, ஆசிரியர்- மாணவர் இடைவெளி குறைந்து வருகிறது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மாணவிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆறாம் வகுப்புக்கு மேல் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தில் முன்பு, குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்தனர்; தற்போது குறைந்துள்ளனது.
ஆங்கில, கணித அறிவு குறைந்து வருகிறது. இதைத் தவிர்க்க பரிந்துரை செய்வோம். பள்ளிகளில் ஜாதி வேறுபாடுகளை களைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில், பள்ளிகள் பராமரிப்புக்கு, இந்த ஆண்டு, ஒரு கோடி 78 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment