கலந்தாய்வில் ஆணை பெற்ற ஆசிரியர்கள் உடனே பணியில் சேர உத்தரவு-30-06-2012
சேலம்: தொடக்கக் கல்வித் துறை நடத்திய பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வில் ஆணை பெற்ற ஆசிரியர்களை, நேற்று மாலைக்குள் புதிய இடத்தில் பொறுப்பேற்க, இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதனால், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
தமிழக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு, அந்தந்த மாவட்டங்களில், ஜூன் 27ம் தேதி துவங்கியது.அன்று காலை, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வும்; மதியம், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் இருந்து, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஜூன் 28ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலும், மதியம், இடைநிலை ஆசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வும்; நேற்று காலை, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல், மதியம், இடைநிலை ஆசிரியர்களில் இருந்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு, பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை பெற்ற ஆசிரியர்கள், ஜூன் 29ம் தேதி மாலைக்குள், பழைய பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. நேற்று, இம்மாதத்தின் கடைசி வேலை நாள் மற்றும் சம்பள விவகாரத்தில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, இந்த உத்தரவு வெளியிட்டிருப்பதாக கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை வரை கலந்தாய்வு நடந்ததால், அதில் ஆணை பெற்ற தலைமை ஆசிரியர்கள், உடனடியாக பள்ளிக்குச் சென்று, புதிய பணியிடத்தை ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment