இதுகூட முடியாதா என்ன?
By ஆசிரியர்
First Published : 17 January 2015 01:36 AM IST
வாசிப்புத் திறன் என்பது, இரண்டாம் வகுப்புப் புத்தகத்தை ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறார் எவ்வாறு வாசிக்கிறார்கள் என்பதைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு, கற்றல் நிலைமை குறித்த ஆண்டு அறிக்கையில் (அ.ந.உ.த.) தமிழ்நாட்டில் சிறார்களின் வாசிப்புத் திறன் 32 விழுக்காட்டிலிருந்து 47 விழுக்காடாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த ஆய்வு, இந்தியாவின் 577 மாவட்டங்களில் 34,000 வீடுகளில் உள்ள குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு.
இந்தியா முழுவதிலும் சராசரி அளவு 48 விழுக்காடாக இருக்கிறது. அதாவது, சென்ற ஆண்டைக் காட்டிலும் ஒரு விழுக்காடு கூடுதல். இந்த ஆய்வின்படி, வாசிப்புத் திறனில் முதல் இரு இடங்களில் இருப்பவை ஹிமாசலப் பிரதேசமும் (75.2), ஹரியாணாவும் (68.1).
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 15 விழுக்காடு அதிகரித்துள்ளதற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும், முக்கியமான காரணம், செயல்வழிக் கற்றல் திட்டத்தை தொடக்கப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியதுதான். வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டு, குழந்தைகளுக்குப் பள்ளியில் ஒரு வீட்டுச் சூழலையும், நெகிழ்வான மனநிலை தருகிற கற்றல் கருவிகளையும் வைத்து, மாணவர்களுக்கு கற்றுத் தர முற்பட்டிருப்பதே, சிறார்களுக்கு கல்வியை விரைந்து உள்வாங்கிக் கொள்ள உதவியிருக்கிறது. அதேவேளை, இந்தக் குழந்தைகளால் ஆங்கிலத்தைப் படிக்க இயலவில்லை என்பதையும், கடந்த ஆண்டைவிட நிலைமை கீழே இறங்கியிருக்கிறதே தவிர, முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த ஆய்வு சொல்கிறது.
ஒரு மொழியைக் கற்றல் என்பது, பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய மூன்றையும் ஒருவரால் செயல்படுத்த முடிந்தபோதுதான் முழுமை பெறுகிறது. இது ஆங்கிலமா, தமிழா அல்லது வேறு மொழியா என்ற வேறுபாடு இல்லை. இந்த முழுமை, இன்றைய தமிழகக் கல்விச் சூழலில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சாத்தியமில்லாததாகவே இருந்து வந்துள்ளது. இதற்குக் காரணம் கற்றல் சூழலும், கற்பித்தல் முறையும்தான்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் இன்னமும் வீதிகளில் தமிழில் பேசித்தான் விளையாடுகிறார்கள். பெற்றோரின் ஆங்கில மோகத்தால் ஆங்கில வழிக் கல்வி பயின்றாலும்கூட, குழந்தைகள் தமிழில் பேசுவதற்கான சூழல் தற்போதும் இருக்கிறது. தாய்மொழி மனதில் பதிவாகி இருக்கிறது. அதை எழுத்தால் படித்து அறியவும், அதே எழுத்தால் தனது உணர்வை வெளிப்படுத்துவதுமான பயிற்சிதான் போதுமானதாக இல்லை.
ஆங்கிலத்தைப் பொருத்தவரை, அவை வெறும் எழுத்து என்பதான கல்விச் சூழல் மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழில் எழுத்துகளின் ஒலிப்புமுறை மாறுவதில்லை. ராமன் என்பதை மாற்றிப் படிக்க முடியாது. ஆனால், ஆங்கிலத்தில் தஹம்ஹய் ர்ழ் ஐள்ப்ஹய்க் என்பதை ரமன் என்றோ, ஐஸ்லாண்ட் என்றுகூட படிக்கலாம். எளிய ஒலிசார்ந்த எழுத்துகளைக் கொண்ட தமிழ்ப் பாடப் புத்தகத்தைப் படிக்க முடியாத சூழல் 50 விழுக்காடு மாணவர்களிடம் இருக்கிறது என்றால், அதற்கான பயிற்சியைப் பள்ளிகள் வழங்கவில்லை; அதற்கான புதிய கல்வி முறை இல்லை என்பதே காரணம்.
தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு முடித்த பத்து வயது சிறுவர்களில் பாதிப் பேர் தங்களது தாய்மொழியைப் பேச மட்டுமே தெரியும், நன்றாகப் படிக்க, எழுதத் தெரியாது என்றால் நாம் ஆதிவாசிகளா? நகரவாசிகளா? இந்த நிலைமையை மாற்ற தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் மனநிலையில் முதலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்கள் பள்ளிக் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடவும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனி நேரம் ஒதுக்கவுமான சூழ்நிலை அவசியம் தேவை.
எல்லாக் குழந்தைகளுக்கும் 8-ஆம் வகுப்புவரை தேர்ச்சி வழங்கும் முறை (ஆல் பாஸ்) குழந்தைகளின் மனம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஏற்பட்டதே ஒழிய, அவர்கள் கற்றல் திறனை மதிப்பிடவும் கூடாது என்பதல்ல அதன் பொருள். ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் கற்பித்தாரா, இல்லையா என்கிற சராசரி மதிப்பீட்டு முறைகூட இல்லாமல் இருப்பதால்தான், 50 விழுக்காடு சிறார்கள் தங்களது 2-ஆம் வகுப்புப் புத்தகத்தை வாசிக்கவும் திணறுகிறார்கள். இப்போதைய முறையிலேயே ஆண்டுதோறும் கற்றல் மதிப்பீட்டை உறுதிப்படுத்தியாக வேண்டும்.
முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஒவ்வொரு குழந்தையும் அறிந்திருக்க வேண்டிய சொற்கள் எவை, அவற்றைத் தனித்தனியாகவும், வாக்கியமாகவும் படிக்கும் பயிற்சி ஆசிரியரால் அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை மதிப்பீடு செய்வது அவசியம். இந்த மதிப்பீடுகள், அந்தக் குழந்தையின் தேர்ச்சியைத் தீர்மானிப்பதாக இல்லாமல் ஆசிரியர்களின் பொறுப்பேற்பு கருதியதாக அமைய வேண்டும்.
இன்றைய பத்திரிகைகள், இதழ்கள், அன்றாட வாழ்க்கைச் சூழல் எதிலும் அதிகபட்சமாக ஐந்நூறு தமிழ்ச் சொற்கள்தான் புழக்கத்தில் உள்ளன. ஐந்தாம் வகுப்பு முடிக்கும் சிறுவன், ஐந்நூறு தமிழ்ச் சொற்களின் பொருளை அறிந்திருப்பதோடு, அவற்றைக் கொண்டு வாக்கியம் அமைக்கவும், மற்றவர் எழுதியதைப் படிக்கவும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என்கிறது கொன்றை வேந்தன். சாதாரண கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், ஐந்நூறு தமிழ்ச் சொற்களை எழுத படிக்கத் தெரிந்திருத்தல் இவற்றை மட்டும் அரசுப் பள்ளிகள் முழுமையாக கற்பித்துவிட முடியும் என்றால், தமிழகத்தில் அடுத்த பத்தாண்டில், அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே வாழ்வின் பல நிலைகளிலும் சாதனையாளர்களாக இருப்பார்கள். சுயசிந்தனையாளர்களாக இருப்பார்கள். மெட்ரிகுலேஷன் மாணவர்கள் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல், புரிதலின்றி பின்தங்கியிருப்பார்கள்
No comments:
Post a Comment