SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, January 24, 2015

dinamani article about exempting teachers from paying income tax

dinamani article about exempting teachers from paying income tax


clip

சலுகையல்ல, அங்கீகாரம்...

First Published : 24 January 2015 03:00 AM IST
மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம்.
மோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா போன்ற 50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள மக்கள் தொகையின் கூடுதலைவிட அல்லது கனடா மக்கள் தொகையின் மூன்று மடங்கைவிட இது அதிகம்.
ஆனால், கல்வியாளர்களுக்கு, எனக்கு, அந்த எண்ணிக்கை தொடக்க மற்றும் அடிப்படைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையைத்தான் நினைவுபடுத்துகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வி ஆண்டு அறிக்கையின் புள்ளி விவரங்கள் சில முக்கிய பிரச்னைகளை எழுப்புகின்றன. அதிகமான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளனர், பள்ளிக்கு வருகின்றனர் என்கின்ற நல்ல செய்திகளுக்கிடையே கவலையளிக்கும் ஒரு செய்தியும் இருக்கிறது.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 5.5 கோடி குழந்தைகளிடையே, எழுத்துகளை இன்னதென்று கண்டறிய முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 13% லிருந்து 32% வரை அதிகரித்திருக்கிறது.
அதுபோலவே, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளில் பயிலும் எட்டு கோடி மாணவர்களிடையே 50% மாணவர்கள் அடிப்படைக் கணிதத்தில் இன்னும் கூடுதல் பயிற்சி பெற வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களின் வாசிக்கும் திறன் போதுமானதாக இல்லை.
ஆசிரியர் பற்றாக்குறையினால் உயர்கல்வித் துறையில் நிலவும் நெருக்கடி பற்றி, சொல்லாமலிருப்பதே மேல். நம் பள்ளி முறை, தர அடிப்படையில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு வகுப்பிலும் கற்க வேண்டிய கல்வியைப் புறக்கணிக்கிறது.
கல்லூரிச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டால், அவை கல்லூரியை விட்டு வெளியே செல்வதற்காக இருக்கிறதே தவிர, தகுந்த தொழிலுக்கோ வேலைக்கோ மாணவர்களை தயார்படுத்துவதாக இல்லை.
இதை உடனே மாற்றிவிட முடியாதுதான். ஆனால், கல்வித் துறையில் தலைமை தாங்கும் ஆசிரிய - ஆசிரியைகள் மனது வைத்து முனைப்புடன் செயல்பட்டால் இதனைக் கவனித்து சரி செய்துவிட முடியும்.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஆசிரியர்களுக்குப் போதிய சம்பளம் இருக்கவில்லை. வாழ்க்கை வசதிகள் கிடையாது. பணி நிரந்தரம், ஓய்வூதியம் என்று எதுவும் கிடையாது.
ஆனாலும், அவர்கள் தனிப் பயிற்சி (டியூஷன்) எடுக்கவில்லை. தனது மாணவ - மாணவியருக்குத் தனி கவனம் செலுத்திப் பாடம் புகட்டினார்கள்.
வீட்டில் வறுமை இருந்தாலும், ஆசிரியர் பணிக்கு வெளியுலகில் கெüரவம் இருந்தது. வருங்கால சந்ததியரை உருவாக்குகிறோம் என்கிற கடமை உணர்வும், பெருமிதமும் அவர்களுக்கு இருந்தன.
ஆசிரியப் பணி என்பது சேவையாகவும், ஆசிரியர்கள் தெய்வீகமானவர்களாகவும் கருதப்பட்ட காலம் அது. இன்று அப்படியில்லை.
இன்றைய ஆசிரியர்களுக்கு அவர்களது பணி என்பது ஏனைய அலுவலகப் பணிகளைப் போன்ற ஒன்றாகத்தான் தெரிகிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தி, நல்ல தரமான மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களை சமுதாயம், அதாவது, அரசு அங்கீகரித்து அவர்களது பணியை "தேச சேவை'யாக ஏற்றுக் கொள்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுகள் மட்டுமே போதாது.
பிரதமர் மோடி உணர்ச்சி ததும்பும் தன்னுடைய ஆசிரியர் தின உரையில் ஆசிரியர் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட விரும்புவதாகச் சூளுரைத்தார். உலகத்திற்கு ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அது மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கக்கூடிய லட்சியப் பார்வையாகும். அதற்குத் தகுந்த செயல்பாட்டுத் தலையீடு வேண்டும். என்.சி.டி.ஈ (NC​TE)​ இதில் முனைப்போடு இறங்கி உள்ளது.
சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதன் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டப் படிப்புத் திட்டம் ஓர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை ஆகும். இதன்மூலம், இளைஞர்களை ஆரம்பத்திலேயே கவர முடியும்.
வழக்குரைஞர்கள், மருத்துவர்களைப் போல ஆசிரியர்களும் தொழில்முறைக் கல்வி பயில இது வழிகோலும். ஒரு பல்கலைக்கழகம் பலத்த போராட்டத்துக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பை ஆரம்பித்தது போன்ற முயற்சி இது.
அத்தகைய செயல்படும் கல்வித் துறையின் புதிய திட்டத்திற்கு மாறுதலை உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிதி உதவி அவசியமாகிறது.
நிதித் துறையின் தன்னிச்சை அதிகாரத்தினால், கடந்த எட்டு ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம் கோடி வரியானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியை சிலர் பாராட்டுகிறார்கள். சிலர் குறை கூறுகிறார்கள். அது போகட்டும். பெரு நிறுவனங்களுக்கு அளித்தது போன்ற குபேர வரிச் சலுகையை ஆசிரியப் பெருமக்களுக்குத் தர வேண்டியதில்லை. ஒரு குசேல சலுகையாவது ஆசிரியர்களுக்குத் தரப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
அதன் மூலம், ஆசிரியர் சமுதாயமே புத்துணர்வுடன் பிரதமர் மோடி விரும்பும் புதிய இந்தியாவைப் படைக்க முனைப்புடன் செயல்படும் என்றால், ஏன் ஆசிரியர்களுக்கு அதுபோன்ற சலுகையை அரசு தரக்கூடாது?
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்குவதுடன் வரி விலக்கும் வழங்கப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. பெரு நிறுவனங்களுக்கு வரி விலக்குகள் அளிப்பது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவில்லையா?
அதுபோல ஆசிரியர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்டால், அது அறிவு வளர்ச்சிக்கு உதவும் தானே? இதைச் செய்வதால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடப் போவதில்லை.
ஆசிரியர் துறையில் அதிருப்தி வளர்ந்து வருகிறது. ஆசிரியராக விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை அரிதாகி வருகிறது. நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?
ஆசிரியர் பணியில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வத்தை மீட்டெடுத்தாக வேண்டும். அதற்குக் கையாளப்பட வேண்டிய பல வழிகளில் ஒன்று வரிச் சலுகை.
இந்தப் புனிதத் தொழிலுக்கு வருமான வரி விதிப்பை மொத்தமாகக் கைவிடும் கொள்கை (100% I‌n​c‌o‌m‌e Ta‌x ‌r‌e​b​a‌t‌e)​​ ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அடையாளமாக இருக்கும்.
தவிர, பிரதமர் இந்த புனிதப் பணியின் மீது கொண்டுள்ள அக்கறையையும் அது வெளிப்படுத்தும். ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயமே பிரதமரின் கனவை நனவாக்க முனைப்புடன் செயல்படும்.
ஆசிரியர்கள் தங்களுக்கு பொறுப்பு இல்லாத இலவச சலுகை கிடைப்பதை விரும்புவதில்லை. இது கவனத்திற்குரியது. எனவே, இந்த முழு வருமான வரிச் சலுகை, "ஆண்டு கல்வி அறிக்கை' ​(A‌n‌n‌u​a‌l Ac​a‌d‌e‌m‌ic R‌e‌t‌u‌r‌n)​ஒன்றை ஒவ்வொரு ஆசிரியரும் தாமாகவே முன்வந்து கணினி மூலமாக அளிப்பதன் அடிப்படையில் அமைக்கலாம்.
ஆசிரியர்களின் ஆண்டு அறிக்கை நான்கு பரிமாணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவை மாணவர் கல்வி, தன் முன்னேற்றம், நிறுவன வளர்ச்சி, சமுதாய சேவை என்பன ஆகும். இந்த அறிக்கையை தேவை அடிப்படையிலும் பரிசீலனையும் செய்யலாம்.
நிறைவேற்றக்கூடிய இலக்குகளை எந்த ஆசிரியர் அடையவில்லையோ அவர் 100 சதவீத வரிச் சலுகைக்கு அருகதையற்றவர்.
மேலும், இத்தகைய (AAR)​  சமர்ப்பிப்பதில் எந்தவிதமான ஊழலும் இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது என்பது இன்றைய கணினி வளர்ச்சியில் சாத்தியமானதே.
மக்கள் தொகையில் செழுமையூட்டி ஆதாயம் உண்டாக்குவது ஆசிரியர் கைகளில் உள்ளது. அவர்கள் அறிவு வல்லமையைத் தருபவர்கள். வருமான வரி விலக்கு என்பது அவர்களது புனிதமான சேவைக்கு சமுதாயம் தரும் அங்கீகாரம், அவ்வளவே.
நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வர இருக்கும் நிதிநிலை அறிக்கையில், சிறப்பு அறிவிப்பாக ஆசிரியர்களுக்கு வருமான வரி விலக்கு என்கிற அறிவிப்பு வருமானால், அது இந்திய சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடும்.
பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது குபேரர்களுக்குக் கிடைக்கும் கொள்ளை லாபம். ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை என்பது குசேலர்களின் பிடி அவல்!
கட்டுரையாளர்: தலைவர், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

No comments: