அரசுப் பள்ளிகளை மூடினால் ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்
அரசுப் பள்ளிகளை பாதுகாப்பதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; இப்படி அரசுப் பள்ளிகளை மூடினால் ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் சென்னையில் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
மாணவர் எண்ணிக்கை சரிவு
தமிழகத்தில் 1978-ல் மெட்ரிக் பள்ளி துவக்கிட மாநில அரசு அனுமதி அளித்தது. 2001-ல் 2983 மெட்ரிக் பள்ளிகளில் 11,68,439 மாணவர்கள் இருந்தனர். 2014ல் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 11,462 ஆக உயர்ந்து, மாணவர்கள் எண்ணிக்கை 36,17,473 அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 13 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. 2013-2014ல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 87,68,231. தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 36,17,473. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
மாணவர் சேர்க்கை - ஆரம்பக்கல்வி (2012-13 - மானியக்கோரிக்கை அறிக்கையில் அளிக்கப்பட்ட விபரம் - லட்சங்களில்)
ஆரம்பப்பள்ளி
1-5 வகுப்புகள் 2008-09 2009-10 2010-11 2011-12 2012-13 குறைவு/அதிகம்
அரசு பள்ளிகளில் 43.67 40.75 38.56 37.75 36.58 -7.09ரூ புள்ளிகள்
அரசு உதவி பெறும் பள்ளிகள் 21.83 20.95 20.24 19.83 17.99 -3.84ரூ புள்ளிகள்
தனியார் பள்ளிகள் 34.5 38.3 41.18 42.92 45.4 +10.9ரூ புள்ளிகள்
நடுநிலைப்பள்ளி
6-8 வகுப்புகள் 2008-09 2009-10 2010-11 2011-12 2012-13 குறைவு/அதிகம்
அரசு பள்ளிகளில் 50.46 47.68 46.77 40.36 45.03 - 5.43 ரூ
உதவி பெறும் பள்ளிகள் 29.03 28.30 28.21 28.04 26.45 - 2.58 ரூ
தனியார் பள்ளிகள் 20.52 24.02 25.02 25.61 28.50 + 7.98 ரூ
மேற்கண்ட சரிவை சரி செய்து விட்டதாக மாநில அரசின் கல்வி மானியக்கோரிக்கை அறிக்கை கூறியது. ஆனால், நிலைமை வேறானது.
1000 அரசுப் பள்ளிகள் மூடல்
கடந்தாண்டும், இந்தாண்டும் (2013-2014, 2014-2015) மானியக்கோரிக்கை அறிக்கையின்படியே அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 55,774 குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1000 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தொடர்ச்சியாக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கும், இதையொட்டி ஒருபகுதி பள்ளிகள் மூடப்படுவதற்கும் காரணங்கள் என்ன ?
காரணம் என்ன?
அரசுப் பள்ளிகளில் கழிப்பிடம், குடிநீர், பரிசோதனைக்கூடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் இல்லாதது; கல்வித்தரம் உயராதது; ஆசிரியர் பற்றாக்குறை, அரசுப்பள்ளிகளை ஊக்குவிக்க அரசு தலையீடு இல்லாதது; இவற்றால் கற்பித்தலில் உள்ள குறைபாடு போன்ற காரணங்களினால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மூடக்கூடிய நிலைக்கு சென்று விடுகின்றது. இதனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழை குடும்பங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
ஆங்கில வழிக்கல்வி தீர்வல்ல
ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தினால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை தக்க வைப்பதோடு, எண்ணிக்கையை அதிகரிக்க வைக்க முடியும் என அரசு கருதுகிறது. இது தவறான முடிவு. இன்றைய சூழலில் ஆங்கில மொழி கற்பது அவசியம். மாணவர்களுக்கு ஆங்கிலத்தை சரியாகக் கற்பிப்பதற்கு திட்டமிட வேண்டும்.
ஆனால், தாய்மொழி கல்வியே சிறந்தது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகு, அரசுப்பள்ளிகளை பாதுகாக்க சரியான காரணங்களை கண்டறிவதற்குப் பதிலாக, ஆங்கில வழிக்கல்வியை தீர்வாக முன்மொழிவதும், அறிமுகப்படுத்துவதும் சரியான அணுகுமுறை அல்ல.
ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்?
அரசுப்பள்ளிகள் மூடப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் எங்கே போவார்கள்? உதாரணமாக, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உள்ள வேளாண் பண்ணை, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள கூத்தப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி வலசு, குப்பண்ண வலசல், புளியம்பட்டி, குருவப்ப நாயக்கன் வலசல் போன்ற கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டன. இக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, வேளாண் பண்ணை கிராமத்தில் உள்ள பளியர் என்ற மலைவாழ் இனத்தைச் சார்ந்த ஏழைக்குழந்தைகள் அங்கிருந்த அரசுப்பள்ளி மூடப்பட்ட பிறகு, அவர்களின் கல்வி தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்திலும் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்ய இயலவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. சுமார் 140 பள்ளிகளில் 20-க்கும் குறைவாகவே மாணவர்கள் தற்போது உள்ளனர். தொடர்ச்சியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து இந்த நிலையை இந்தப்பள்ளிகள் அடைந்துள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்பள்ளிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது.
மழலையர் பள்ளி துவங்குக!
அரசுப்பள்ளிகளை பாதுகாத்து, ஏழை, எளிய குடும்பங்களைக் சார்ந்த குழந்தைகளுடைய பள்ளிக்கல்விக்கு உத்தரவாதம் செய்திட மாநில அரசு திட்டமிட வேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாவதற்கு அங்கு மழலையர் பள்ளிகளில் துவங்கி, தொடர்ச்சியாக குழந்தைகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள். எனவே, அரசே மழலையர் பள்ளிகள் துவங்கி நடத்திட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைக்க முடியும்.