ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!
கோவை: ஆபாச வலைதளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அடிமைகளாகி வருவதாக, ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொடர்புத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி எண்ணற்றோருக்கு சாதகமாக இருந்தாலும், பெரும்பாலோனோருக்கு பாதகமாக உள்ளது. இணையதளங்களில் மட்டுமல்லாமல், ஐ பாட், மொபைல்போன் உள்ளிட்ட வடிவங்களில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் நிலவுகிறது.
இதனால் இளைய தலைமுறையினர் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர். பள்ளி பருவ மாணவர்களும் ஆபாசப்படங்களை பார்ப்பதில் ஆர்வம் செலுத்தி வருவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கோவை டவுன்ஹால் பகுதியில் பள்ளி சீருடையில் இருந்த நான்கு மாணவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல், பிரவுசிங் சென்டரில் அமர்ந்திருந்தனர். அருகில், அமர்ந்த முதியவர் ஒருவர் மாணவர்களை கண்காணித்ததில், ஆபாச வலைதளங்களை பார்த்துக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
அம்மாணவர்களை அழைத்து, கண்டித்ததுடன் பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நோக்கில், பிரவுசிங் சென்டர் வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. பெரும்பாலான நடுத்தர மற்றும் உயர்தர பெற்றோர்கள், மாணவர்களுக்கு பள்ளி பருவத்தில் வாங்கி பரிசளிக்கும் மொபைல் போன், லேப்-டாப் போன்றவை மாணவர் களை எளிதில் ஆபாச வலைதளங்களுக்கு அடிமைகளாக்கி விடுகின்றன.
இதுபோன்ற, விஷயங்களில் மாணவர்களின் கவனம் செல்வதால், படிப்பில் கவனம் சிதறி, தடுமாறும் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சமூகத்தில், வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. ஆபாச வலைதளங்களை முடக்க ஆலோசித்து வரும் மத்திய அரசு இதுகுறித்த முடிவை உடனடியாக மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறுகையில், "இன்றைய தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற விஷயங்களை பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதலே மாணவர்கள் இதுபோன்ற விஷயங்களுக்கு அடிமைகளாகி விடுகின்றனர். பாடத்திட்டம் வாயிலாக விழிப்புணர்வு அவசியம்.
மேலும், புத்தகம் வாசித்தல், விளையாட்டு போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவது இதுபோன்ற தவறுகளிலிருந்து விலகிவைக்க உதவும். பெற்றோர்கள், பணம் ஈட்டுவதை குறிக்கோளாக கொள்ளாமல் பிள்ளைகளை நண்பர்களாக பாவித்து, அவர்களது மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து, உரிய தீர்வு காண்பது அவசியம்" என்றார்.
No comments:
Post a Comment