SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, June 14, 2014

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1

    கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1

     பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்
     
    ''கல்வியில் மார்க் பார்த்து தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும். மார்க்கினால் கெட்டிக்காரத்தனம், சோம்பேறித்தனம் கண்டுபிடிக்க முடியாது என்பது மாத்திரம் அல்லாமல், யோக்கியன்அயோக்கியன் என்பதையும், அறிவாளிமடையன் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை கடுகளவு அறிவு உள்ளவனும் ஒப்புக்கொள்வான்!''
    - பெரியார், 16.03.1968, விடுதலை
    பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விடுவதைக் காட்டிலும் பிள்ளைக்கு எல்.கே.ஜி. சீட் வாங்குவதுதான் இன்றைய தேதிக்கு சவால்!
    சிபாரிசு, நன்கொடை, காத்திருப்பு, அவமானம்... என இதன்பொருட்டு எந்தத் துன்பங்களையும் சுமக்க, பெற்றோர்கள் தயார். குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும்போதே போர்க்களத்துக்குத் தயாராவதைப் போல ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். எந்தப் பள்ளி, எவ்வளவு ஃபீஸ், யாரைப் பிடித்தால் சீட் கிடைக்கும், ஒருவேளை இந்தப் பள்ளியில் சீட் கிடைக்காவிட்டால் வேறு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என... கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதைவிடவும் அதிகமான விசாரணைகள். மழலை மாறாத மூன்று வயதுக் குழந்தையைப் பள்ளிக்கூடம் அனுப்ப, ஒட்டுமொத்தக் குடும்பமும் சிந்திக்கிறது; உழைக்கிறது. இதுவா, அதுவா, மெட்ரிக்கா, சி.பி.எஸ்.சி-யா எனப் பட்டிமன்றம் நடத்துகிறது.
    பெற்றோர் சும்மா இருந்தால்கூட சுற்றி இருப்பவர்களும் சொந்தக்காரர்களும் 'என்னாச்சு... பையனை எந்த ஸ்கூல்ல போடப் போறீங்க?’ என்று விசாரிக் கின்றனர்; புத்திமதி சொல்கின்றனர். விளைவு, பள்ளியில் சேர்த்துவிட்ட பிறகு யாராவது, 'அந்த ஸ்கூல் பிரமாதமா இருக்கு!’ என்று வேறு ஒரு பள்ளியைச் சொல்லிவிட்டால், 'தவறு இழைத்துவிட் டோமோ?’ என்று பெற்றோர்கள் குற்றணர்வு அடைகிறார்கள். மொத்தத்தில், பெற்றோரின் சிந்தனை யின் ஒவ்வோர் இழையும் பிள்ளையின் பள்ளிக்கூடத்தைச் சுற்றியே பின்னப்படுகிறது.
    ''போன பிப்ரவரி மாசம், சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிற ஒரு ஸ்கூல்ல என் பையனுக்கு பிரி-கே.ஜி. சீட் கேட்கப் போனேன். 'நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே குழந்தை பிறந்ததுமே வந்திருக்கணும். அப்பவே எல்லாம் புக் ஆகிடுச்சு’னு சொன்னது, தாங்க முடியாத கொடுமை. என் பையனுக்கு வயசே ரெண்டரைதான் ஆகுது. மூணு வருஷத்துக்கு முன்னாடியே புக் பண்ணணும்னா, குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிடணும் போல இருக்கு'' என்று அதிர்ச்சி விலகாமல் சொன்னார் அந்த நண்பர். இதுபோல பெற்றோர்களுக்குப் பல அதிர்ச்சிகள்.
    சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்றில் தன் இரண்டரை வயது மகளை பிரி-கே.ஜி-யில் சேர்க்க 1.80 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறார் ஒருவர். வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் மற்ற கட்டணங்களையும் சேர்த்தால், இது இரண்டு லட்ச ரூபாய் ஆகிவிடும்.
    இரண்டரை வயதுக் குழந்தையை, பால்வாடிக்கு அனுப்ப இரண்டு லட்சமா?
    ''இதில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை. அதுக்கு எந்த ரசீதும் கிடையாது. பணத்தைக் கொடுத்ததும் எண்ணிவெச்சுக்குவாங்க, அவ்வளவுதான். என்கிட்ட பணத்தை வாங்கிட்டு, 'கவுன்டர்ல அப்ளிகேஷன் வாங்கிக்கோங்க’னு சொன்னார் ஒருவர். அங்கே போய்க் கேட்டா, 500 ரூபாய் கேட்கிறாங்க. 'இப்பத்தானே உள்ளே ஒரு லட்சம் கொடுத்தேன்’னு சொன்னா, 'அது வேற, இது வேற. அப்ளிகேஷன் விலை 500 ரூபாய்’னு பதில் வருது. சரினு அதையும் கொடுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தா, 'புராசஸிங் ஃபீஸ்’னு சொல்லி இன்னொரு 500 ரூபாய் கேட்கிறாங்க. ஹவுஸிங் லோன் வாங்கும்போதுதான், புராசஸிங் ஃபீஸ் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ பிள்ளையை ஸ்கூல்ல சேர்க்கவே இந்த நிலைமை'' என்று புலம்புகிறார். பெரும்பாக்கத்தில் உள்ள நான்கைந்து பள்ளிகளில் அதுவே சிறந்தது என்று எல்லோரும் சொல்வதால், அதில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். மீதம் உள்ள 80 ஆயிரம் ரூபாயை இன்னும் ஒரு மாதத்தில் கட்ட வேண்டுமாம்.
    எல்லாம் முடிந்த நிலையில் இப்போது பள்ளி நிர்வாகத்திடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'குழந்தைக்கு எல்லா சொட்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளதா? உடல்நிலை, மனநிலை சரியாக உள்ளனவா? ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா?’ என்று ஊர்ப்பட்ட கேள்விகள். இவற்றுக்கு எல்லாம் பதில் வாங்கி மருத்துவச்சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். ''இதுல என்ன கொடுமைனா, இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க என் மகளைப் பார்க்கவே இல்லை. ஆளையே பார்க்காம அட்மிஷன் போட்டுட்டாங்க. பணம் மட்டும்தான் அவங்களோட நோக்கம்'' என்று தெள்ளத் தெளிவாகப் பேசும் அவர், பிறகு ஏன் அந்தப் பள்ளியிலேயே கொண்டு சேர்க்கிறார்?
    ''வேற வழி இல்லைங்க. ஊர்ல எல்லா ஸ்கூலும் இப்படித்தான் இருக்கு. அதுல ஏதோ ஒரு ஸ்கூலைத்தான் நாம செலக்ட் பண்ணணும். 'வீட்டுப் பக்கத்துல இருக்கிற சின்ன ஸ்கூல்ல சேர்க்க வேண்டியதுதானே?’னு கேட்கலாம். என்ன பிரச்னைனா, நான் குடியிருக்கிற அப்பார்ட்மென்ட்ல எப்படியும் 30 குழந்தைகள் இருப்பாங்க. பெரும்பாலான குழந்தைகள் அந்த ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. நான் மட்டும் சின்ன ஸ்கூல்ல சேர்த்துவிட்டா, அது என் மகளோட மனசுல தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிடுமோனு பயமா இருக்கு. எனக்கு என் மகளோட எதிர்காலம்தானேங்க முக்கியம்'' என்கிறார்.
    பெற்றோர்களின் இந்த எண்ண ஓட்டம் உண்மைதான் என்றபோதிலும், இதில் குழந்தைகளை மட்டுமே காரணமாகச் சொல்வது முழு உண்மை அல்ல. பெற்றோர்களைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகள் புகழ்பெற்ற பள்ளியில் படிப்பதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இத்தகைய பெயர் வாங்கிய பள்ளியில் படித்தால்தான், தரமான கல்வி கிடைக்கும். அதுதான் குழந்தையின் எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்தும் என்ற எண்ணம். இரண்டாவது, அத்தகைய பெரிய பள்ளிக்கூடங்களில் தன் பிள்ளை படிப்பதுதான் தங்களுக்குக் கௌரவம். ஒரு பள்ளியை இறுதி செய்வதில் இந்த இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன!
    சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள டி.ஏ.வி. பள்ளிக்கூடம் இதற்குச் சிறந்த உதாரணம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு விண்ணப்பப் படிவம் வாங்கும்போது நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் சாலையோர பிளாட்பாரத்தில் நாளிதழ்களை விரித்துப்போட்டு இரவெல்லாம் படுத்திருப்பார்கள். உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், வி.ஐ.பி-கள்... எனப் பலரும் அங்கு 'பெர்த்’ பிடித்திருப்பார்கள்.

    கடந்த ஆண்டு ஒரு நள்ளிரவில் அங்கு சென்றபோது, கிட்டத்தட்ட அண்ணாசாலை வரைக்கும் வரிசையாகப் பெற்றோர்கள் படுத்திருந்தார்கள். தற்காலிக டீக்கடைகள்கூட முளைத்திருந்தன. அப்போது, திடீர் என ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. போலீஸைப் பார்த்ததும் மக்கள் கொஞ்சம் பயந்து எழுந்துகொள்ள, ஜீப்பில் இருந்து மஃப்டி உடையில் இறங்கிய இன்ஸ்பெக்டர், அதுவரை அங்கு படுத்திருந்த தன் மனைவியை ஜீப்பில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் படுத்துக்கொண்டார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் சீட் கிடைக்கப்போவது உறுதி அல்ல. வெறுமனே விண்ணப்பப் படிவம் வாங்கவே இவ்வளவு போட்டி.
    இப்படி தமிழ்நாடு முழுக்க பல பள்ளிக்கூடங்கள் உள்ளன. பெற்றோர்கள் எப்படியாவது அதில் சீட் வாங்கத் துடிக்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமான அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்துகின்றனர்.
    னக்குத் தெரிந்த ஒரு குடும்பம், எட்டாம் வகுப்புப் படித்து முடித்துள்ள தன் மகனை சென்னையின் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, திண்டுக்கல்லில் இருந்து முகப்பேருக்குக் குடிபெயர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு சென்னையில் வேறு எந்த வேலையும் இல்லை. பார்த்துகொண்டிருந்த வேலையை இதற்காகவே விட்டுவிட்டு, வேறு வேலையில் சேர்ந்திருக்கிறார் அந்தக் குடும்பத் தலைவர். ''பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, இதை எல்லாம் செஞ்சுதான் சார் ஆகணும்'' என்கிறார்.
    வேலையை விடுவது, ஊர் மாறுவது மட்டுமா... புகழ்பெற்ற பள்ளிகளில் மகனை/மகளைச் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் செய்யும் 'தியாகத்தின்’ பட்டியல் இன்னமும் நீளும்!
    பள்ளிக்கூடத்துக்கு அருகே வீடு மாற்றுவது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துகளை விற்பது, ஊரே கழுவி ஊற்றும் ஊழல்வாதியாக இருந்தாலும் மானம் மரியாதை பார்க்காமல் சிபாரிசுக் கடிதம் வாங்க அலைவது, பணத்தையும் பிடுங்கிக்கொண்டு தடித்தனமாகப் பேசும் பள்ளி நிர்வாகத்தை எதிர்க்க முடியாத இயலாமை, நெருங்கிய சொந்தங்களின் திருமணத்துக்குக்கூட குடும்பத்துடன் செல்ல முடியாத கொடுமை, இவற்றின் பலனாக நிம்மதி இழந்து, தூக்கம் கெட்டுப் பரிதவிப்பது... என்று பெற்றோர்களின் 'தியாகம்’ பெரியது.
    பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்தத் துன்பங்களை ஏற்கின்றனர். ஆனால், இந்தத் தியாகத்தின் பயனாளிகள் யார்?
    ''நம்ம வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சு. பசங்களாவது நல்லா இருக்கட்டும்'' என்ற ஏக்கம்தான் எல்லாவற்றுக்குமான அடிப்படை. அவர்கள் தங்கள் தலைமுறையின் வளர்ச்சியை, தான் நிற்கும் இடத்தில் இருந்து ஓர் அடியேனும் முன் நகர்த்த நினைக்கின்றனர். சிலர், நான்கு தலைமுறை முன்னேற்றத்தை ஒரே தாவலில் கடந்துவிட முயற்சிக்கின்றனர். தன் முதுகுக்கு இந்தப் பாரம் அதிகம் என்று தெரிந்தாலும் சுமப்பது அதனால்தான். அந்த அன்பில் பழுது ஏதும் இல்லை. ஆனால், இந்தக் கண்மூடித்தன மான அன்புதான், கல்வியின் பெயரால் பெற்றோர்கள் சுரண்டப்படுவதற்கான அடிப்படை.
    உயிருக்குப் போராடும் ஒருவரை, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். எப்படியாவது காப்பாத்திடுங்க’ என்று சொல்லிச் சேர்க்கும்போது, நிபந்தனையற்று நம்மைச் சுரண்டும் உரிமையையும் சேர்த்தே வழங்கிவிடுகிறோம். 'என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருந்தா போதும்’ என்று எண்ணி, புகழ்பெற்ற தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும்போதும் இதுதான் நடக்கிறது.
    அவர்கள், ரத்தமும் சதையுமான உங்கள் பிள்ளையை, பணம் காய்க்கும் இயந்திரமாகப் பார்க்கிறார்கள். ஒரு பள்ளியில் எல்.கே.ஜி-க்கு 50 ஆயிரம் கட்டணம் வாங்குகின்றனர் என்று வையுங்கள். ஒரு செக்ஷனுக்கு 50 பேர் என்றால் நான்கு செக்ஷன்களுக்கு 200 பேர். மொத்தம் ஒரு கோடி ரூபாய். அப்படியே ஒவ்வொரு வகுப்பறையாகக் கணக்கிட்டால், இந்தத் தொகையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். புற்றீசல் போல பல்கிப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளின் ஒரே இலக்கு, இந்தப் பணம்தான். அதே நேரம், அவர்கள் தங்களுக்குச் சந்தையில் டிமாண்ட் இருப்பது போன்ற தோற்றத்தையும் தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ''அஞ்சு சீட்தான் இருக்கு'' என்று உள்ளே வரும் ஒவ்வொரு பெற்றோரிடமும் சொல்கிறார்கள். விளைவு... ஐந்தில் ஒன்றைப் பெற்றிட பெற்றோர்கள் துடிக்கின்றனர்.

    இன்று, தமிழ்நாட்டில் மட்டும் 3,890 மெட்ரிக் பள்ளிகளும், 499 சி.பி.எஸ்.சி. பள்ளிகளும் இருக்கின்றன. பளபளக்கும் பிரமாண்ட கட்டடங்களைக்கொண்டிருப்பவை மட்டுமல்ல; தெருமுக்கில் நான்கு கிரவுண்டு இடத்தில் நடத்தப்படும் பள்ளியும் இதில் அடக்கம். எதுவாக இருந்தாலும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம் என்று அதிகரித்துக் கொண்டே போகிறது.
    10 ஆயிரம் சம்பாதிப்பவர், கடன் வாங்கி தன் பிள்ளையை 50 ஆயிரம் ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், 20 ஆயிரம் சம்பாதிப்பவர் ஒரு லட்ச ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார். தொகை அதிகரிக்க... அதிகரிக்க, தங்கள் கௌரவத்தின் படிநிலை உயர்வதாகவும், குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்பு உத்தரவாதப்படுவதாகவும் பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனால், '10 ஆயிரம் ரூபாய் ஸ்கூல், 30 ஆயிரம் ரூபாய் ஸ்கூல்’ என்று பள்ளிக்கூடங்களைப் பணத்தை வைத்து பாகுபடுத்துவதன் மூலம், சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை என்று பதிந்துபோகிறது.
    ஒரு தெருவில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள், அதில் 4 பேர் பணக்காரப் பள்ளியிலும், 4 பேர் ஓரளவு பணக்காரப் பள்ளியிலும், 2 பேர் அரசுப் பள்ளியிலும் படிக்கிறார்கள் என்றால்... அந்த 10 குழந்தைகளின் நட்பு எப்படி சம இயல்புள்ளதாக இருக்கும்? பள்ளியில் ஏழை நண்பன், தெருவில் பணக்கார நண்பன் என்ற முரண்பாடு, அவர்களுக்குப் பயிற்றுவிப்பது என்ன? ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் மிகவும் சாதாரணமானவை என எண்ணத் தொடங்குகிறார்கள். இது கல்வியுடன் மட்டும் முடியாமல் உணவில், உடையில், பயன்படுத்தும் பொருள்களில், வாகனங்களில்... என அனைத்து வேறுபாடுகளிலும் நீள்கிறது.
    சாதி வேற்றுமைகூட அவர்களுக்குத் துருத்தலாகத் தெரியவில்லை. அதையும் ஓர் இயல்பு போல ஏற்றுக்கொள்கின்றனர். நாகரிகத்தை வளர்க்கவேண்டிய கல்வி, அநாகரிகத்தையும், சமத்துவத்தை உருவாக்க வேண்டிய கல்வி, பாகுபாட்டையும் வளர்ப்பது இவ்வாறுதான். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த அநீதியான கல்விக்கு அடிப்படையாக இருப்பது எது?
    - பாடம் படிப்போ

No comments: