ஆசிரியர்களுக்கு இந்திய மொழிகளில் பயிற்சி!
இந்திய மொழிகளைக் கற்க விரும்பும் ஆசிரியர்களுக்கும் புதியமொழியைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பத்து மாத காலப் பயிற்சி அளிக்கிறது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்.
சிரியர்களுக்கு குறிப்பிட்ட சில இந்திய மொழிகளில் பத்து மாத காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறுபான்மை மொழியை பேசக் கூடியவர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் மொழியைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களும் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்தம் 561 பேருக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
மைசூரில் மானச கங்கோத்ரியில் உள்ள தென் மண்டல மொழிகளின் மையத்தில் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. புவனேஸ்வரத்தில் உள்ள கிழக்கு மண்டல மொழிகளின் மையத்தில் பெங்காலி, மைதிலி, ஒரியா மற்றும் சந்தாலி ஆகிய மொழிகளையும் பாட்டியாலாவில் இருக்கும் பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வடக்கு மண்டல மொழிகளின் மையத்தில் டோக்ரி, காஷ்மீரி, பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளையும் புனேயில் இருக்கும் டெக்கான் கல்லூரி வளாகத்தில் உள்ள மேற்கு மண்டல மொழிகளின் மையத்தில் குஜராத்தி, கொங்கணி, மராத்தி, சிந்தி ஆகிய மொழிகளையும் சோலோன் மற்றும் லக்னோவில் உள்ள உருது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் உருது மொழியையும் குவாஹாத்தியில் உள்ள வடகிழக்கு மண்டல மொழிகளின் மையத்தில் அஸாமி, போடோ, மணிப்புரி மற்றும் நேபாளி மொழிகளையும் கற்கலாம்.
விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் இந்த மையங்களில் ஏதேனும் மொழிகளில் பயிற்சி பெற்றிருக்கக் கூடாது. விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பெற விரும்பும் மொழியில் முன் அறிவு இருக்கக்கூடாது. அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சியில் 80 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மிகக் குறைவாக அறியப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினரின் மொழிகளை பேசுபவர்களில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொழிப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது இளநிலை பட்டப் படிப்பில் மொழியை முதல் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ படித்தவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு அவர்களது ஊதியம் வழங்கும் அலுவலரால் அனுப்பப்படும் இறுதி ஊதியச் சான்றிதழ் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். பயிற்சி பெறும் மற்றவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அத்துடன், பயிற்சிக் காலத்தில் ஆசிரியர்கள் உள்பட பயிற்சி பெறும் அனைவருக்கும் மாதம் ரூ,500 வழங்கப்படும்.
இந்தப் பயிற்சி குறித்த விவரங்கள், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மண்டல மையங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன், ரூ.150-க்கான கோடிட்ட வரைவோலையை The Director, CIIL, Mysore என்ற முகவரிக்கு வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி சாதாரணத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.ciil.org, தொலைபேசி எண்: 0821-2345156
No comments:
Post a Comment