அசத்தும் அரசுப் பள்ளி!
ரஞ்சித் வைத்தியலிங்கம் (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது ஓர் அரசுப் பள்ளி.
பள்ளிக் கட்டணம், டொனேஷன், வேன் கட்டணம் என்று ஆயிரக்கணக்கில் பணத்தை தனியார் பள்ளியில் செலவழிப்பதை நிறுத்தி, நிறைவான கல்வி பெற உங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்ப்பீர்..!’
அரசுப் பள்ளிக்கு விளம்பரமா? என்று ஒரு கணம் யோசிக்க வைத்தது அந்த துண்டுப் பிரசுரம்.
ஆம். காஞ்சிபுரம் மாவட்டம் ஆத்தனஞ்சேரியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குத்தான் இந்த விளம்பரம். 1962-இல் தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளி 2012-இல் பொன் விழாவைக் கொண்டாடியது. தொடர்ந்து 2013-2014-ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது இந்தப் பள்ளி. அதற்காகத்தான் மேலே படித்த விளம்பரம். அதைத் தொடர்ந்து பள்ளியின் சிறப்பு அம்சங்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தவற்றை நேரில் சென்று பார்த்தோம். கொஞ்சமும் மிகையில்லை.அதுதான் உண்மை.
அதற்கு ஓர் உதாரணம்: பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தூய்மையான காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம்.
தற்போது இப்பள்ளியில் மொத்தம் 2 ஆசிரியர்களும், 6 ஆசிரியைகளும் பணியாற்றுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. தினமும் மதியம் 12 மணிக்கு மாணவர்களுக்கு யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள் மூலம் தினமும் பாட்டு, நடனம் கற்றுத் தரப்படுகின்றன. கணினிப் பயிற்சி, கராத்தே பயிற்சி அளிக்கப்படுகின்றன. சதுரங்கம், கேரம் போன்ற நுண்ணறிவுத்திறன் வளர்க்கும் விளையாட்டுக்களும் சொல்லித் தரப்படுகின்றன.
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோக்கள் மூலம் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன.
பள்ளியின் இத்தகைய வளர்ச்சிக்கான காரணம் குறித்தும் எல்லா அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வியும், கல்வியுடன் கூடிய பாட இணைச் செயல்பாடுகளையும் (Co-Curricular Activities) திறம்பட செயல்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றியும் தலைமையாசிரியை சுகிகலா நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
“தமிழக அரசின் முக்கியக் குறிக்கோள்களான பள்ளிப் படிப்பு இடை நிற்றலைத் தவிர்ப்பது, பள்ளி வயது மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். எங்கள் பள்ளி அமைந்துள்ள கிராமத்தில் பள்ளி வயது மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு SAMBL (Simplified Activity Based Learning) முறையிலும், ஐந்தாம் வகுப்பிற்கு SALM (simplified Activity Learning Method)ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ALM (Activity Learning Method) முறையிலும் கற்பித்து தரமான கல்வியை அளித்து வருகிறோம். தவிர மாணவர்களின் முழு ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்த வழிவகுக்கும் வகையில் இசை, நடனம், ஸ்போக்கன் இங்கிலீஷ், கராத்தே, யோகா ஆகியவற்றையும் கற்றுத்தருகிறோம். இதற்காக மாதம் 13 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. பெற்றோர் - ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இதனை சாத்தியமாக்கியிருக்கிறோம். இங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஒத்துழைப்பு தருகின்றனர். முழு ஈடுபாட்டோடு ஒவ்வொரு மாணவனின் வளர்ச்சியிலும் அக்கறை எடுத்துக்கொள்கின்றனர்.வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் இருப்பதால் அவர்களின் மன நிலை அறிந்து அதற்கேற்ப கல்விச் சூழலுக்கு அவர்களை ஆயத்தப்படுத்துகிறோம்.
கடந்த ஆண்டில் முதல் வகுப்பில் 20 பேர் மட்டுமே சேர்ந்திருந்தனர். இந்த கல்வியாண்டில் 43 பேர் சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக்கல்வியின் அறிமுகமும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களுமே இதற்குக் காரணம். தமிழ்வழி, ஆங்கிலவழி எனப் பாகுபாடின்றி தரமான கல்வியை அரசுப் பள்ளிகள் கொடுத்தால் நிச்சயம் பொதுமக்கள் தனியார் பள்ளிகளை நாடமாட்டார்கள். அதற்கு எங்கள் பள்ளி ஒரு சாட்சி” எனப் பெருமிதத்துடன் கூறும் தலைமையாசிரியை சுகிகலா, 2012-2013-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவரின் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதையும் ஆத்தனஞ்சேரி அரசுப் பள்ளி பெற்று பெருமை சேர்த்துள்ளது.
No comments:
Post a Comment