உடுமலை அருகே கடத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 6ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களை ஆசிரியர் ஒருவர் செருப்பால் அடித்துள்ளார். இதுபற்றி அறிந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
மாணவர்களை தாக்கிய ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என தலைமையாசிரியரிடம் கூறினர். தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து விசாரித்த போது மாணவர்கள் குறும்பு செய்ததால் அடித்ததாக அவர் தெரிவித்தார். பெற்றோர்கள் ஆவேசம் அடைந்தனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மடத்துக்குளம் தாசில் தார் விஜயகுமார் பள்ளிக்கு விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அமைதிப்படுத்தினார். மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரியிடம் பரிந்துரை செய்யப்படும் என அவர் கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment