பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 9:14 PM IST
ராமநாதபுரம், டிச. 10–
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலில் இயக்குனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த விழாவிற்கு கழகத்தின் மாநில தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் ரவி, மண்டல இணை செயலாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 2004–06–ம் ஆண்டில் தொகுப்பூதிய முறையில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10–ம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் முதல் பாட வேளையாக மாணவர்களுக்கு நல்லொழுக்க கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மதுப்பழக்கத்தில் சிக்கி வருவதை தடுக்க பூரண மதுவிலக்கு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளைகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
அரசு பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அனைத்து இலவச இடங்களையும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கே தர வரிசை அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும். மைய அரசு பள்ளிகளில் உள்ளது போல் 9 மற்றும் 10–ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த முதுகலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக நியமனம் செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் தங்கபாண்டியன், ராமநாதன், செல்வராஜ், சுரேஷ் கண்ணன், செந்தில்குமார், நாகநாதன், பாரதிராஜன் உள்ளிட்ட மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment