சேலம் மாவட்டம் ஏற்காடு மான்ட்போர்ட் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கலந்துகொண்டு பேசினார்.
அவர், ‘’மாணவ- மாணவிகள், இளைஞர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு 4 விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக தங்களுக்கென்று மிகப் பெரிய லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். சிறிய லட்சியம் குற்றமாகும். இரண்டாவதாக அறிவைத் தேடித் தேடிப் பெற வேண்டும். மூன்றாவதாக அந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். நான்காவதாக விடா முயற்சி வேண்டும்.
தோல்வி மனப்பான்மை இல்லாமல் இந்த 4 விஷயங்களையும் கடைப்பிடித்தால் தோல்விக்கே தோல்வி கொடுத்து வெற்றி பெற முடியும். நல்ல லட்சியத்துடனும், உயர்ந்த எண்ணத்துடனும் இருப்பவர்கள் செய்யும் பணிகளே சிறக்கும்.
இந்த பூமிக்கு கீழேயும், மேலேயும், பூமியிலும் உள்ள எந்த சக்தியைக் காட்டிலும் மன எழுச்சி கொண்ட இளைஞர்களே இந்தியாவின் பெரிய சக்தி. 60 கோடி இளைஞர்களைக் கொண்ட நாம், மன உறுதியுடன் முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை.
பள்ளியின் கட்டடங்கள், அதன் புகழ்பாடும் விளம்பரங்கள், பாடத் திட்டங்களைக் காட்டிலும் நல்ல ஆசிரியரே ஒரு மாணவனுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். சராசரி மாணவரையும் சிறந்த மாணவராக் குவதே ஆசிரியரின் பணி. பள்ளிகள் தொழில் நிறுவனங்களோ, வர்த்தக மையங்களோ கிடையாது.
ராமேஸ்வரத்தில் எனக்கு சிவசுப்பிரமணியன் போன்ற நல்ல ஆசிரியர்கள் கிடைத்தனர். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை ஆசிரியர்கள் வீடு தேடி வந்து பாராட்டிச் செல்வார்கள். ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் இடையே நல்ல பிணைப்பு இருந்தது. இதனால் எங்கள் பள்ளியில் இடைநிற்றலே இருந்ததில்லை. பத்தாம் வகுப்புக்கு பிறகு எந்த படிப்பைத் தேர்வு செய்வது என்பதில் பெரும்பாலான மாணவர்களுக்கு குழப்பமும், நெருக்கடியும் உள்ளது.
மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த, விருப்பமான படிப்பை பெற்றோருடன் கலந்து ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும். அன்பால் மட்டுமே பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியும் என்பதை உணர வேண்டும். இதுபோன்ற மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் நல்ல ஆலோசகர்களாக இருக்க வேண்டும்.
புதிய இந்தியா இன்று பொருளாதாரத்திலும் ஊழல் விவகாரங்களிலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. 2020-ம் ஆண்டில் விவசாயம், சுகாதாரம், பொருளாதாரத்தில் உயர்ந்த நாடாக இந்தியா உருவாக வேண்டும். பொருளாதார சிக்கல், ஊழல் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ஊழலற்ற வளர்ந்த நாடாக இந்தியா வளர வேண்டும். அதற்கு இளைஞர்களின் பங்கு அவசியம்’’ என்றார்.
No comments:
Post a Comment