Posted Date : 13:10 (15/10/2013)Last updated : 11:10 (16/10/2013)
D. விஜய லெட்சுமி
"வாவ், வெரிகுட் ஹேமா குரூப்தான் இந்த கணக்கை ரொம்ப சரியா பண்ணியிருக்கு. Keep it up ஹேமா! எல்லோரும் ஹேமாவுக்கு clap பண்ணுங்க.."
கைதட்டல் ஒலி காதைப் பிளக்க,
"ம்!போதும் போதும் , விட்டால் தட்டிக்கிட்டே இந்த period ஐ ஒட்டிடுவீங்க, அடுத்த கணக்கை பார்ப்போம்" என்றபடி ஒரு கணக்கை கரும்பலகையில் எழுதி விட்டு திரும்பும் முன் அதற்கான சரியான பதில் முன் வரிசையிலிருந்து வந்தது , "யார் சொன்னது, ஹேமா குரல் மாதிரி கேட்டுச்சே" என்றேன்.
"ஆமாம் மேம், அவ தான் சொன்னா". உடன் இருந்த மாணவிகள் கோரஸ் பாட "வெரிகுட் ஹேமா, பரவாயில்லை கேட்பதற்குள்ளேயே ஆன்சர் பண்ற" என்று நான் பாராட்ட மற்ற மாணவிகள் "ஏய் எழுந்து நில்லு" என்று தொந்தரவு செய்த பிறகு மெதுவாக எழுந்தாள். தலையை குனிந்துக்கொண்டு உடலை குறுக்கிக்கொண்டு அவள் நின்ற விதம் சற்றே விநோதமாய் இருக்க அவளை உற்றுப்பார்த்தேன். இதற்கு முன்னும் பல நேரங்களில் அவள் உட்கார்ந்துக்கொண்டே பதில் அளிப்பதை கவனித்திருக்கிறேன். சில நேரங்களில் எனக்கே கோபம் வந்ததுண்டு, இதென்ன பழக்கம் என்று. ஆனால் என் எண்ணம் தவறு என்று இப்போது புரிந்தது. நின்றிருந்தவளை கவனித்துப்பார்த்தேன். ஆறாம் வகுப்பில் தைத்திருந்த சட்டையையும் ஸ்லிப்பையுமே இந்த ஆண்டும் அணிந்துகொண்டிருந்ததில் மூச்சு விட முடியாத அளவுக்கு அது உடலை இறுக்கமாக பிடித்திருக்க தன் உடல் வளர்ச்சியில் வெட்கி உடலை முன்புறமாக வளைத்து நின்றிருந்தாள் .
குழந்தைகளின் உடல் வளர்ச்சி இந்த வயதில் அபரிமிதமாக இருக்கும் என்று தெரியாதா? சென்ற ஆண்டு அணிந்திருந்த ஆடையே இந்த ஆண்டுக்கு எப்படி பொருத்தமாக இருக்கும்? இதைக்கூட கவனிக்காமல் வீடுகளில் இந்த அம்மாக்கள் என்னதான் செய்கின்றனர்! முகம் தெரியாத அந்த தாயின் மீது கோபம் கோபமாய் வந்தது.
அவளை அருகில் அழைத்தேன், "நாளைக்கு அம்மாவை ஸ்கூலுக்கு வரச்சொல்லு நான் பேசணும்" என்றேன். "சரிங்க மேம்" என்றபடி போய் உட்கார்ந்துக்கொண்டாள். அந்த பாட வேளை முடிந்து வேறு வகுப்புக்கு சென்றுக் கொண்டிருந்த என்னை மைதானத்தில் வழிமறித்தனர் 7 ஆம் வகுப்புக் குட்டிப் பெண்கள் இருவர். "என்னம்மா" என்றேன்.
''மேம்! நீங்க அவங்க அம்மாவை வரச்சொன்னீங்க இல்லையா, அதனால ஹேமா அழறா. அவங்க வரமாட்டாங்களாம்!''
''ஏன் வரமாட்டாங்க?''
இரு பெண்களும் ஒருவரையொருவர் பார்க்க , ஒருத்தி தயங்கியபடியே சொன்னாள்.
"ஹேமாவுக்கு அம்மா இல்லை. சித்திதான் இருக்காங்க".
"ஓ! சரி அவங்களுக்கு குழந்தைங்க இருக்காங்களா?"
"இல்லை மேம்! ஹேமாவும் அவ தம்பியும் முதல் அம்மாவோட பசங்க. இவங்களுக்கு குழந்தை இல்ல."
"சரி நீங்க போங்க, அதை அப்புறம் பார்க்கலாம். ஹேமாகிட்ட அவ அம்மாவைப்பத்தி சொன்னதை சொல்லக்கூடாது, சரியா?" என்று அறிவுறுத்தி அனுப்பினேன். "சரிங்க மேம்" என்றபடி ஓடிப்போயினர்.
ஒரு நாள் அவகாசத்தில் என் ஏற்பாட்டின் படி ஹேமாவின் அம்மா என் எதிரே நின்றிருக்க, வகுப்பறையிலிருந்து ஹோமாவை வரவழைத்து இருவரையும் பார்த்து ஆரம்பித்தேன்.
"உங்களை பார்த்து நான் ரொம்ப பெருமைப்படறேன். ஹேமா தினமும் அவ்ளோ அழகா தலை பின்னி, பூ வச்சி, மடிப்புக் கலையாம ட்ரெஸ் பண்ணிட்டு ஸ்கூலுக்கு வரா. ஆனா இதை சொல்ல எனக்கு தயக்கமா இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லை. அவ போட்டிருக்கிற ட்ரெஸ்ஸை பாருங்க. எவ்வளவு இறுக்கமா இருக்கு. இதனால குழந்தை, மற்ற பிள்ளைங்க முன்னாடி எழுந்து நிற்கவே வெட்கப்படறா. இதையெல்லாம் குழந்தைங்க நம்மக்கிட்ட சொல்ல கூச்சப்படுவாங்க. நீங்கதான் அவங்களுக்கு சரியான நேரத்தில தேவையான விஷயங்களை பார்த்து செய்யணும்" என்றேன். ஹேமாவைப் பார்த்து, "அம்மா உனக்காக எவ்வளவு அக்கறையா வந்திருக்காங்க அவங்களை பார்த்தாயா, எப்படி இருக்காங்க. உன்னை இவ்வளவு அழகா ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கறவங்க, தன்னைப் பற்றி கவலைப்பட்டது போலவே தெரியல. இதுபோல அம்மா கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும் பெண்ணே" என்றேன். மிக எளிமையாய் மஞ்சள் தடவிய முகத்துடன் நின்றிருந்த அந்த பாமரத்தாயின் விழிகளில் சட்டென கண்ணீர் எட்டிப்பார்த்தது.
அம்மாவைப் பார்த்துச் சொன்னேன், "அம்மா, உங்க பெண்ணை நெனச்சு நீங்களும் பெருமைப்பட்டுக்கலாம். அவ்வளவு அழகா படிக்கறா. அத்தனை அமைதி. இது போல பெண் இல்லையேன்னு என்னையே ஏங்க வைக்கிறா" என்றேன்.
விழிகளை மறைத்த கண்ணீரை துடைத்தப்படி தலைகுனிந்துக்கொண்டாள் ஹேமா. இருவருக்குள்ளும் ஒருவர் மீது ஒருவர் பழகிய பாசம் இருக்கின்றது. அவர்கள் அதை வார்த்தைகளால் பரிமாறிக்கொண்டதில்லை என்பதை புரிந்துக்கொண்டேன். இருவரும் கடைசிவரை சொல்லவில்லை தாங்கள் சொந்த அம்மாவும் பெண்ணும் அல்ல என்று. நானும் தெரிந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை.
அடுத்த வாரமே புது ஆடையில் எழுந்து நின்று பதில் சொல்ல ஆரம்பித்த குட்டி ஹேமாவின் மனதில் எனக்கான ஒரு இடம் உருவாகி இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,
முத்துப்பற்களின் வெள்ளைச்சிரிப்பை புறங்கையால் மறைத்து வசீகரிக்கும் அதே ஹேமா. நன்றாய் வளர்ந்திருந்தாள் . ஒன்பதாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாக மீண்டும் நான். அரையாண்டுத்தேர்வுகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த சமயம், ஹேமாவின் அம்மா என்னைப் பார்க்க வந்திருந்தார். அதே வெகுளிப்பார்வை. கூடவே அழுகை!, "இந்தப்பொண்ணு இப்படிப்பண்ணும்னு நான் நெனைக்கவே இல்ல. பாக்கறவங்க என்னைத்தானே சொல்லுவாங்க அவ புள்ளையா இருந்தா இப்படி விடுவாளான்னு!".
"என்ன ஆச்சு என்றேன். பசங்க என்னென்னவோ சொல்றாங்க. வரப்புல, போற வழியில எல்லாம் யாரோ பையனப் பார்த்து சிரிக்கறாளாம். பூ வாங்கினாளாம். நீங்கதான் அதுக்கு புத்திமதி சொல்லணும். என் புள்ளைக்கு மேல அவமேல பாசம் வெச்சிருக்கேன். அவதான் என்கூட ஒத்தப்பேச்சு பேசறதில்ல. நாம ஏதாவது கேக்கப்போயி அது ஏதாவது பண்ணிக்குமோன்னு எனக்கு பயம். அப்புறம் அவங்க அப்பா என்ன கொன்னேபோடுவாரு. அதுன்னா அவங்களுக்கு உசுரு" என்றார்.
"சரி, நான் விசாரிக்கிறேன், நீங்க கவலைப்படாம போங்க", என்று அவரை அனுப்பிவிட்டு ஹேமாவின் தோழிகளை விசாரித்ததில் அம்மா சொன்னது உண்மை என்று புரிந்தது. ஹேமாவை அழைத்தேன். "என்ன பெண்ணே, இப்பல்லாம் படிக்கிறதோட வேற வேலையெல்லாம் கூட பாக்க ஆரம்பிச்சிட்ட போலருக்கு", என்றேன்.
அதிர்ந்து நிமிர்ந்தாள் ஹேமா .குற்றவுணர்வு குறுகுறுக்க அமைதிகாத்தாள். "இந்த வயசுல நம்மை பாக்கறவாங்க மேல எல்லாம் ஈர்ப்பு வர்றது சகஜம் தான். ஆனால் பார்க்கறவங்க எல்லாம் உண்மையான அன்போட பழகுவாங்கன்னு சொல்லமுடியாது. நான் சொல்ல வர்றது என்னன்னு உனக்கு புரியுதா? இதுக்கப்புறம் இந்த பூ வாங்கற வேலையெல்லாம் பார்க்காதே ,உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாரு தெரியுமா?" முகம் மாறிப்போனவள் சொன்னாள், திடீர்ன்னு பூ கொடுத்தப்ப என்ன பண்றதுன்னு தெரியாம வாங்கிட்டேன். இனிமே அந்த வழியா போகவே மாட்டேன் மேம். தொண்டை அடைக்க சொன்னாள். மறு நாள் அம்மாவை வரவழைத்து சொன்னேன், "நீங்க உங்க அன்பை மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டிருந்தா அது எப்படி அவளுக்கு தெரியும்?வீட்டுக்குள்ள கிடைக்காதத வெளியில் தேடியிருக்கா. ஏதோ ஒரு இடத்துல கிடைச்சதும் மனம் தடுமாறியிருக்கு. சின்ன பெண்தானே. புரியல.இன்னும் நீங்க நெருங்கி பழகுங்க. அவளோட நிறைய பேசுங்க. இந்த வயசு பசங்க இப்படித்தான் இருப்பாங்க. நாம தான் பத்திரமா பார்த்துக்கணும். எல்லா குழந்தைக்கும் தெளிவு இருக்கும்னு சொல்ல முடியாது. அவங்க தெளிவாகறவரை கொஞ்சம் கவனிச்சிக்கங்க. அவங்க அப்பாவை அவளோட நல்லா பேச சொல்லுங்க எல்லாம் சரியாயிடும்" என்றேன் .நன்றிப்பெருக்குடன் விடைப்பெற்றார் அந்த தாய்!.
பேருந்து நெரிசலில் வலுக்கட்டாயமாக முன்னேற்றப்பட்டதில் [வாழ்க்கையில் முன்னேற முடிகிறதோ இல்லையோ பேருந்தில் மட்டும் கட்டாய முன்னேற்றம் கிடைத்துவிடுகிறது ] முன்புறம் அமர்ந்திருந்த பெண்ணின் மீது மோதி நிமிர்ந்தபோதுதான் கவனித்தேன் அவளை. ஹேமா !ஆறாம் வகுப்பு குட்டி பெண்ணாய் பார்த்தபோதிருந்த அதே அமைதி, அதே வசீகரமான வெட்கச் சிரிப்பு ,ஆனால் அனுபவத்தின் வாசல் விரிவடைந்த சுவடுகள் தெரிந்த முகம் வேலைக்குப் போகும் பெண்களுக்கே உரிய கம்பீரத்துடன் இருந்தாள் ஹேமா ..அப்போதுதான் அவளும் என்னை கவனித்தவள்,படக்கென எழுந்து உக்காருங்க மேம் என்றாள் .தாங்க் யு செல்லம் என்று சொல்லி கேட்டேன்", இன்னும் கூட மேம் ஞாபகம் இருக்கா?"
சற்றே மௌனித்தவள் சொன்னாள் ",உங்களை மறக்க முடியுமா மேம்? "குரலில் அத்தனை உணர்ச்சி!"
(D.விஜய லெட்சுமி, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர். அவர் தன்னிடம் படித்த மறக்க முடியாத மாணவர்களைப் பற்றி எழுதி வருகிறார். இதை படிக்கும் மற்ற ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களைப் பற்றியும் அல்லது கல்வி தொடர்பான மற்ற விஷயங்கள் பற்றியும் படைப்புகளை எங்களுக்கு அனுப்பலாம்)
.
|
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Saturday, October 19, 2013
மறக்க முடியாத மாணவர்கள்: ஹேமா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment