என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் ஆகும்; அப்போது கணிசமாக சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கையை நன்றாக நகர்த்தலாம்' என்ற, கனவுகளுடன், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், தற்காலிக அடிப்படையில், துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த, 30 ஆயிரம் பேர், வாழ்க்கையை தொலைத்து விட்டு, அல்லல்படுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, தொடர்ந்து, மாதம், வெறும், 100 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர்.
கனவு:
'கழுதை மேய்த்தாலும், கவர்மென்ட் வேலையாக இருக்க வேண்டும்' என, கிராமங்களில் கூறுவது உண்டு. பணி பாதுகாப்பும், பல்வேறு சலுகைகளும் கிடைப்பது தான், அரசு வேலையின் சிறப்பு அம்சம். இதனால், ஒவ்வொருவரும், அரசுப் பணிக்கு, கனவு காண்கின்றனர். இதில், தற்காலிக வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என, தலையை கொடுத்துவிட்டு, பணி நிரந்தரம் ஆகும்... ஆகும்... என, ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, கடைசியில், வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இந்த வரிசையில், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும், 30 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர், பெண்கள். பெயர் மட்டும் தான், துப்புரவு பணியாளர்... ஆனால், காலையில், பள்ளியை திறப்பது, தலைமை ஆசிரியர் அறை முதல், மாணவர் வகுப்பறை வரை, அனைத்து அறைகளையும் பெருக்கி சுத்தம் செய்வது, ஆசிரியர்களுக்கு, குடிநீர் பிடித்து வைப்பது, அவ்வப்போது, டீ வாங்கி தருவது, மாணவர்கள், மதிய உணவை முடித்த பின், அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வது, பள்ளி முடிந்த பின், வகுப்பறைகளை பூட்டுவது, பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பது என, இவ்வளவு பணிகளையும், துப்புரவு பணியாளர்கள் செய்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன், பணியில் சேர்ந்து, இன்று வரை, மாதம் வெறும், 100 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், சில ஆண்டுகளுக்கு முன் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, கால முறை ஊதியம் பெறுகின்றனர்.
கண்ணீர்:
ஆனால், அதே கல்வித் துறையில், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மட்டும், தற்போது வரை, அரசு கண்டுகொள்ளவில்லை என, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமரன், 36, கண்ணீர் சிந்துகிறார். அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் உள்ள, அன்ராயநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில், துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறேன். 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். அரசு வேலையாச்சே; என்றாவது ஒருநாள், பணி நிரந்தரம் ஆகிவிடும் என, சேர்ந்தேன்; பல ஆண்டுகள் ஓடிவிட்டன.
முரண்பாடு:
மாத சம்பளம், 10 ரூபாயில் துவங்கி, தற்போது, 100 ரூபாய் வரை வந்துள்ளது. இந்த காலத்தில், 100 ரூபாயை வைத்துக் கொண்டு, என்ன செய்ய முடியும்? விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், 2,000 பேர், வேலை பார்த்து வருகிறோம். எங்கள் பிரச்னையைத் தீர்க்க, முதல்வர் முன்வர வேண்டும். இவ்வாறு, முத்துகுமரன் தெரிவித்தார். ஒரே துறையில், குறிப்பிட்ட பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, ஒரு சம்பளம், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு சம்பளம் என இருப்பது, முரண்பாடாக உள்ளது. தமிழக அரசு, கல்வித் துறைக்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறது. இதில், சிறிய தொகையை, அடிமட்டத் தொழிலாளர்களுக்கும் ஒதுக்கினால், அவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்!
தெரியாமல் போனது எப்படி?
கல்வித் துறையில், 'மீட்டிங்'குகளுக்கு, பஞ்சமே கிடையாது. மாதத்திற்கு, குறைந்தது, 20 கூட்டங்களாவது நடக்கின்றன. அமைச்சர் முதல், மாவட்ட கல்வி அலுவலர் வரை, பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால், அடிமட்டத்தில் உள்ள ஊழியர்கள் பிரச்னைகள் தெரியாமல் போவது ஏன் என்பது தான் புதிராக உள்ளது. பிரச்னைகளைப் பற்றி அறிய, கீழ்நிலை அலுவலர்களையும், கூட்டங்களில் பேச அனுமதிக்க வேண்டும். அப்போது தான், உண்மை நிலையை, உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும்; பிரச்னைகளை தீர்க்க முடியும். இது போன்ற நிலை வராதவரை, முத்துகுமரன் போன்றோர், எங்கோ ஒரு மூலையில், அல்லாடிக்கொண்டிருக்க வேண்டியது தான்!
No comments:
Post a Comment