நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, பயன்படுத்துவோரும் அந்த நிதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்கிற புகார்களும் மேலதிகமாக எழுந்து வரும் நிலையில், நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான தகுதியை மேலும் மேலும் தளர்த்திக் கொண்டே போகிறது மத்திய அரசு.
தற்போதைய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, பள்ளிகளுக்குத் தேவையான மேசை, நாற்காலிகள் வாங்க, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், கூட்டுறவு சங்கங்கள் பொதுநலப் பயன்பாட்டுக்காக அசையாச் சொத்து உருவாக்கிட ரூ.1 கோடி வரையிலும் எம்.பி.க்கள் நிதி ஒதுக்கலாம்.
இதுநாள்வரை, "அரசு மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அசையும் சொத்தான தளவாடச்சாமான்கள் (ஃபர்னிச்சர்) ஆய்வுக்கூடக் கருவிகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்க இயலாது' என்ற வாசகத்தில் தற்போது, "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நீங்கலாக' என்று சேர்த்துள்ளனர்.
அதேபோன்று, பதிவுபெற்ற அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்கள் (டிரஸ்ட்/ சொசைட்டி) ஆகியவை மட்டுமே எம்.பி. மூலம் நிதிபெறத் தகுதியுடையவை என்ற வாசகத்தில் தற்போது "மூன்றாண்டுகளுக்கு மேலாக செயல்படும் கூட்டுறவு சங்கங்களும்' என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது பள்ளிக்குத் தேவையான மேசை, நாற்காலிகள், ஆய்வுக்கூடத்துக்கு தேவையான கருவிகளை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்குவது நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இந்த அசையும் சொத்துகள், கொடுக்கப்பட்ட கமிஷன் போக, மீதி தொகையில் தரமற்ற பொருள்களால் தயாரிக்கப்பட்டவையாக இருக்காது என்பது என்ன நிச்சயம்? இவையும்கூட கோப்புகளைப் போல கால்முளைத்துக் காணாமல் போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
எல்லா அரசுப் பள்ளிகளிலும், அங்குள்ள மேசை, நாற்காலி, பீரோக்களுக்கு பள்ளித் தலைமையாசிரியரிடம் கணக்கு இருக்கும் என்றாலும், தலைமையாசிரியர் இடமாறுதல் பெறும் போது, புதிதாக வருபவரிடம் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மேசை நாற்காலிகளை கணக்குப் பார்த்து ஒப்படைக்கும் வழக்கம் எங்குமே கிடையாது.
வகுப்பறை, சுற்றுச் சுவர் போன்ற அசையா சொத்துகள் தரமற்ற பொருள்களால் கட்டப்பட்டிருந்தாலும் அவை அங்கே இருக்கும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெறப்பட்ட தளவாடச் சாமான்கள் காணாமல் போவதை நிரூபிக்க எந்தவிதமான தடயமும் இருக்காது.
அதேபோன்றுதான் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் நிகழும்!. அரசு விதிமுறைப்படி நிதிஒதுக்கீடு செய்யப்படும் அறக்கட்டளை, சொசைட்டி, கூட்டுறவு சங்கங்களில் பரிந்துரை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் எத்தகைய பொறுப்பிலும் இருத்தல் கூடாது என்பதில் அர்த்தமில்லை. இன்றைய அரசியல் சூழ்நிலையில், அரசியல்வாதியின் குடும்பங்கள்தான் கூட்டுறவு அமைப்புகளை ஆக்கிரமித்துள்ளன. எல்லா பதவிகளிலும் அவர்கள் இருக்கிறார்கள்.
கூட்டுறவுச் சங்கங்கள் பொதுநலன் கருதி, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு திருமண மண்டபம் கட்டலாம்; முதியோர் இல்லம் கட்டலாம். அந்தக் கட்டடத்தைப் பராமரிக்கும் செலவை அந்த சங்கமே ஏற்க வேண்டும். அரசிடம் நிதி கேட்க முடியாது என்பது மட்டுமே நிபந்தனை. இதன் மூலம் அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் அனைத்து வாசல்களையும் திறந்து வைக்கிறார்கள்.
1993-94 நிதியாண்டில் இந்தத் திட்டம் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது தொகுதி மேம்பாட்டு நிதி வெறும் ரூ.5 லட்சம்தான். அடுத்த ஆண்டே அது ஒரு கோடி ரூபாயாக உயர்ந்தது. 1998-99 நிதியாண்டில் 2 கோடியானது. 2011-12 நிதியாண்டில் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆண்டுக்கு ரூ.5 கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு சுமார் 30 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய நாடாளுமன்றமும், அதை முறையாகச் செலவழிக்க நிர்வாக இயந்திரமும் என்பதுதான் முறையான ஆட்சியின் செயல்பாடாக இருக்க முடியும். நாடாளுமன்றத்தில் தொடங்கி, சட்டப்பேரவை, மாநகராட்சி உறுப்பினர்கள் வரை தொகுதி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் நிதி ஒதுக்கும் போது, அது முறைகேடுகளுக்கு வழிகோலும் என்பது சொல்லியா தெரிய வேண்டும்?
தொகுதி மேம்பாட்டு நிதியால் எந்தத் தொகுதியும் மேம்பட்டுவிடவில்லை என்பதுதானே நிஜம். இதில் எதற்காக மேலும் மேலும் விதித் தளர்வு? யாரைத் திருப்திப்படுத்த இந்தச் சலுகை?