நாகப்பட்டினம், ஆக.8-
கல்வித்துறை அலுவலங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய பொதுச்செயலாளர் ஈசுவரன் தெரிவித்தார்.
ஆயத்த விளக்க கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 25-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து நாகை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆயத்த விளக்க கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகபாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்க.மோகன், பன்னீர்செல்வம், பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் லெட்சுமிநாராயணன் வரவேற்றார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஈசுவரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
6-வது ஊதியக்குழுவில் அறிவித்துள்ள அனைத்து சலுகைளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
கோரிக்கைகள்
1988-க்கு பின்னர் பணியேற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்போது கூடுதல் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து அமல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் காப்பீட்டுத் தொகையை ரூ.12 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பகுதி நேர தொழிற்கல்வி சிறப்பு ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்த்திட வேண்டும். கல்வித்துறை அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மாறுதலை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் ரெங்கராஜன், மாநில பொருளாளர் ஜோசப்சேவியர் உள்பட கூட்டணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment