பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விபரங்களை அரசு புள்ளி விபர மையத்தில் இன்று மாலைக்குள் வழங்காத தொடக்க கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டமான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ்) நடை முறைப்படுத்தி வருகிறது. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதத்தில் உரிய விபரங்களை தமிழ் நாடு தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் கொடுத்து அதனை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகளை தொகுக்கும் வகையில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள பேரேடுகளை திருத்தம் செய்து கணக்குகளை சரிபார்த்து பணம் பெற்று வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் மற்றும் பட்டியலுக்கான வரவினை சுருக்கம் உரிய படிவத்தின்படி தயாரிக்கப்பட்டு கருவூல அலுவலரின் கையெழுத்துடன் அரசு புள்ளி விபர மையத்திற்கு ஜூலை 22ம் தேதி நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 347 அலுவலகங்களில் இருந்து எந்தவித விபரங்களும் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘எத்தனை உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் அரசு புள்ளி விபர மையத் தில் பதிவேடுகள் கொடுத்துள்ளன என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் வவுச்சர் நம்பர் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கருவூல அலுவலரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உரிய படிவங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் அரசு புள்ளி விபர மையத்திற்கு நேரடியாக ஒப்படைக்க வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்படின் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment