கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கொல்லப்பள்ளியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செழியன் என்பவர் பணிபுரிகிறார்.
இவர், வழக்கமாக மது குடித்துவிட்டு, பள்ளிக்கு வருவதாகவும் ,பின்னர் போதையில் மாணவர்களை அடித்து, உதைப்பது, அவர்களை தகாத வார்த்தையால் திட்டி வருவதாகவும் பெற்றோர்கள் சார்பாக ஓசூர் உதவி தொடக்ககல்வி அலுவலரிடம் புகார் செய்தனர்.
ஆனால், அவர் மீது கல்வித்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பெற்றோர்கள், வியாழக்கிழமை காலை பள்ளியை முற்றுகையிட்டனர்.
அப்போது, ஐந்தாம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற செழியனை வகுப்பறைக்கு செல்ல விடாமல் தடுத்தனர். மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியேற்றி விட்டு, வகுப்பறைக்கு பூட்டுப் போட்டனர்.
மேலும், வகுப்பறை முன் பெற்றோர் அமர்ந்து, "செழியனை இடமாற்றம் செய்து விடு, இந்த பள்ளிக்கு புதிய தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும்' என, வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் பள்ளிக்கு விரைந்து, பொது மக்களை அமைதிப்படுத்தினர். நேற்று தலைமை ஆசிரியர் செழியன், மது குடித்து விட்டு பள்ளிக்கு வரவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
போலீஸார், கிராம கல்வி குழு தலைவர், பெற்றோரை அழைத்து, "செழியன் குடிக்கவில்லை, எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள்' என்றனர். அதற்கு பெற்றோர், "இன்று அவர் குடிக்கவில்லை. ஆனால், தினம் குடித்துவிட்டு தான் வருகிறார். இது கல்வி அதிகாரிகள், பள்ளி மாணவர்களுக்கு நன்றாக தெரியும். மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய பள்ளி தலைமை ஆசிரியரே இப்படி குடித்து விட்டு வந்தால் அவரிடம் படிக்கும் எங்கள் குழந்தைகள் எதிர்காலம் எப்படி இருக்கும்' என்றனர்.
அங்கு வந்திருந்த ஓசூர் தாசில்தார் ஹமீதுல்லா, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment