ஆசிரியர் தகுதித் தேர்வு வென்றவர் வழிகாட்டுகிறார்!
மோகனன்
விடாமுயற்சியோடு படி வெற்றியைப் பரிசாகப் பிடி!
விடாமுயற்சியோடு படி வெற்றியைப் பரிசாகப் பிடி!
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளில் 150-க்கு 142 மதிப்பெண்கள் பெற்று, அறிவியல் பாடப்பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சித்ரா. தற்போது ஆயக்காரன்புலம் மூன்று பகுதியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்காக அவர் வழங்கிய டிப்ஸ்கள் இதோ...
டெட் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள் தங்கள் பாடத்திட்டத்திற்கேற்ற பாடப் புத்தகங்களை முழுமையாக படித்துக்கொள்ள வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் தாளுக்காக தயாராக இருப்பவர்கள் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திலும் முக்கியமானவற்றை எல்லாம் அடிக்கோடிட்டோ அல்லது தனியாகக் குறிப்பெடுத்துக்கொண்டோ படியுங்கள். புத்தகங்களைப் பார்க்கும்போது ஒவ்வொன்றும் பெரிதாக இருக்கிறதே, இவ்வளவு படிக்க வேண்டுமா என்று மலைப்பு ஏற்பட்டால், அது பற்றி கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு பாடப்புத்தகத்தையும் ஆரம்பத்தில் இருந்து படிக்கும்போதே ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி நோட்டு போட்டு, பாயிண்ட் பாயிண்டாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் ஒவ்வொரு பாடத்திற்கும் உங்கள் கைப்பட எழுதிய நோட்ஸ் தயாராகி விடும். புத்தகத்திலிருந்து எழுதி எடுக்கும்போதே ஓரளவுக்கு பாடங்கள் அனைத்தும் மனதில் பதிந்து விடும். அதையே மீண்டும் மீண்டும் படிக்கும்போது, மனதை விட்டு அகலாது. மதிப்பெண்களும் குறையாது.
தமிழ்ப் பாடத்தில் உள்ள ஆசிரியர்கள் பெயர்கள், அடைமொழிப் பெயர்கள், வாழ்ந்த காலம், எழுதிய நூல்கள், அவரை ஆதரித்த அரசர்கள் போன்றவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும். உரைநடைப் பாடங்களில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்துப் படித்துக் கொள்ளுங்கள். தமிழ் எண்களைப் படித்துக்கொள்ளுங்கள். இலக்கணப் பகுதி முக்கியம். வேர்ச்சோல் எது? குற்றியலுகரம், குற்றியலிகரம், அணிகள் போன்றவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும்.
ஆங்கிலப் புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திலும் பின்புறம் உள்ள கேள்விகளை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பேஸிக் கிராமர், சினானிம்ஸ், ஆன்டானிம்ஸ், வொகாப்லரி ஆகியவற்றைப் படித்துக்கொள்ளுங்கள். இங்கிலீஷ் ஒர்க் புக் இருக்கும் அதையும் படித்துவைத்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
கணிதப் பாடத்தில் உள்ள ஃபார்முலாக்கள், கனங்கள் போன்றவற்றைப் பற்றி கேட்பார்கள். புத்தகத்தில் உள்ள மாதிரிக் கணக்குகள் அனைத்தையும் அடிக்கடி போட்டுப் பார்த்துப் பழிகிக்கொள்ள வேண்டும். கடினமான கணக்குகளாக இருப்பின் ஒருமுறைக்கு, நான்கு முறை போட்டுப் பார்த்து பழகிக் கொண்டால் போதும். இதனையே கேட்பார்கள் என்று எதிர்பார்க்காமல், இதனை மாதிரியாகக் கொண்டு கேட்டாலும் பதிலளிக்கத் தயாராக இருக்கவேண்டும்.
அறிவியல் விதிகளை ஏதேனும் ஒரு சம்பவத்தோடு தொடர்புபடுத்திக்கொண்டு படித்துக் கொண்டால் மனதை விட்டு மறையாது. விஞ்ஞானிகளின் பெயர்கள், அவர்களுடைய கண்டுபிடிப்புகள், சோதனை முறைகள் போன்றவற்றை எல்லாம் நன்றாகப் படித்துக்கொள்ளுங்கள். ஒரு வேதி வினையால் நிகழ்வது என்ன? ஏன் வினை நிகழவில்லை? என்றெல்லாம் கேட்பார்கள்.
குழந்தைகள் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பாடத்தைப் பொருத்தவரை பி.எட். படித்த போது இருக்கும் புத்தகங்களே போதும். கற்பித்தல் கோட்பாடுகள், அதனை வரையறுத்துச் சொன்ன ஆசிரியர்கள், எப்படி வரையறை செய்தார்கள் போன்றவற்றையும் படித்துக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி முறை எது? எதனால் அது ஏற்றது என்பவற்றை எல்லாம் கூட கேள்விகளாக கேட்க வாய்ப்புண்டு. இப்பாடத்தில் சில கேள்விகள் சிந்தித்துப் பதிலளிக்கும்படி இருக்கும்.
ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடங்களை தரவாகப் படித்துக்கொள்ள வேண்டும். முக்கியமான அரசர்கள், அரச வம்சங்கள், படையெடுப்புகள், படையெடுப்பு நடந்த ஆண்டுகள், முக்கியமான சட்டங்கள், மக்களின் அடிப்படை கடமைகள், அரசின் பணிகள், நிலப்பரப்பு, முக்கிய நகரங்கள், போக்குவரத்துகள், வேளாண்மை விவரங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் போன்றவற்றைப் படித்துக்கொள்ளுங்கள்.
எதை விதைக்கிறோமோ அதுதான் விருட்சமாக வளரும். விடாமுயற்சியோடு படித்தால் வெற்றியைப் பரிசாகப் பெறலாம். தன்னம்பிக்கையோடு படியுங்கள். தேர்வில் வெற்றி பெறுங்கள்.
No comments:
Post a Comment