பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க இனி ஜாதியைக் குறிப்பிடத் தேவையில்லை!
மோ.கணேசன்
நீங்கள் ஜாதி, மதங்களில் நம்பிக்கை இல்லாதவர். உங்கள் குழந்தை ஒரு ஜாதிக்காரனாக வளர்வதைவிட சரியான மனிதனாக வளர்ந்தால் போதும் என்று நினைப்பவர். ஆனால், பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்கும்போதும் மாற்றுச் சான்றிதழ் பெறும்போதும் ஜாதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தில் அந்தக் கேள்விக்கான பதிலாக ஜாதி இல்லை என்று பதிலளிக்கவோ, அந்த இடத்தை பதிலேதும் எழுதாமல் காலியாக விடவோ கூடாது என்று பள்ளி நிர்வாகிகள் சொல்வது உண்டு. அதைக் கேட்கும் போது எரிச்சலாக இருக்கும்.
நீங்கள் ஜாதி, மதங்களில் நம்பிக்கை இல்லாதவர். உங்கள் குழந்தை ஒரு ஜாதிக்காரனாக வளர்வதைவிட சரியான மனிதனாக வளர்ந்தால் போதும் என்று நினைப்பவர். ஆனால், பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்கும்போதும் மாற்றுச் சான்றிதழ் பெறும்போதும் ஜாதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தில் அந்தக் கேள்விக்கான பதிலாக ஜாதி இல்லை என்று பதிலளிக்கவோ, அந்த இடத்தை பதிலேதும் எழுதாமல் காலியாக விடவோ கூடாது என்று பள்ளி நிர்வாகிகள் சொல்வது உண்டு. அதைக் கேட்கும் போது எரிச்சலாக இருக்கும்.
கூல். இனி ஜாதிப் பெயரை நீங்கள் குறிப்பிட விரும்பவில்லையெனில், அதைப் பள்ளிகளில் தைரியமாகச் சொல்லலாம். அதற்கான அரசு ஆணை விவரங்கள் இங்கே:
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது, பெற்றோர் ஜாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆம்! ஜூலை 2, 1973-இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நிலை எண்: 1210- இந்த விவகாரத்தைத்தான் தெளிவாகக் கூறியிருக்கிறது. இப்படி ஓர் அரசாணை வெளியிட்ட பின்னும் பள்ளிகளில் ‘ஜாதியைக் கேட்பது’ நின்றபாடில்லை. எனவே இதைக் குறித்து கடந்த 31.07.2000-இல் தமிழக அரசு மீண்டும் ஓர் அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணை (நிலை) 205-இல், ‘பார்வையில் காணும் (அரசாணை 1210, நாள். 02.07.1973) அரசாணையின்படி - இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ எவரேனும் விரும்பினால், அவ்வாறே செய்யும் உரிமையை அவருக்கு அளிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இம்முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்று அறியப்படுவதால், அரசாணையில் தெரிவித்துள்ளதை இனிவரும் காலங்களிலும் கடைபிடிக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பள்ளியில் சேரும்போதும் மற்ற சமயங்களிலும் பெற்றோர் விருப்பப்படாவிட்டாலும் தெரிவிக்க இயலாவிட்டாலும் ஜாதி, சமயக் குறிப்பு தேவையில்லை எனவும் ஆணையிடப்படுகிறது’ என்று தெரிவித்தது.
ஆனாலும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டவை இன்றுவரை கடைபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சேர்க்கையின்போது என்ன ஜாதி என்று கேட்கத்தான் செய்கிறார்கள் என்பதால், கோவையிலுள்ள மு.கார்க்கி என்ற வழக்கறிஞர், அண்மையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, இந்த அரசாணையைக் கருத்தில் கொண்டு செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய வழியாக அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்13023/ஜே2/2012 நாள் 06.06.13).
அந்த உத்தரவில், ‘பார்வையில் கண்ட அரசாணையின்படி மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ எவரும் விரும்பினால் சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம் என அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஜாதியைக் குறிப்பிடாதவர்களின் குழந்தைகள், பொதுப்பிரிவில் உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.இடஒதுக்கீடு போன்ற சில சலுகைகள் அவர்களுக்குக் கிட்டாமல் போகலாம்.
அரசின் இந்த அரசாணை, இது குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித நகல் ஆகியவை வேண்டுவோர், ‘புதிய தலைமுறை’ அலுவலகத்திற்கு சுயவிலாசமிட்ட, போதிய தபால்தலை ஒட்டிய கவர் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment