பள்ளி மாணவர்களுக்கு இலவச விளையாட்டு விடுதி!
விளையாட்டுத் திறமையுள்ள பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் 17 இடங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. மாணவர்களுக்காக திருச்சி, திருநெல்வேலி, மதுரை, அசோக் நகர், நந்தனம் (சென்னை), கிருஷ்ணகிரி, நெய்வேலி, நாமக்கல், கோவை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய இடங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், சென்னை ஆகிய நகரங்களிலும் உள்ளன. 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவர். உண்ண உணவு, விளையாட்டுச் சீருடை, தங்கும் வசதி, விளையாட்டுச் சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும். மாவட்ட, மாநில, இந்திய, சர்வதேச என அனைத்து விதமான போட்டிகளுக்குமான முறையான பயிற்சி, போட்டியில் கலந்துகொள்ளும் செலவு, போக்குவரத்துச் செலவு என அனைத்து செலவுகளையும் விளையாட்டு விடுதியே கவனித்துக் கொள்ளும். மாணவர்கள் படிக்கும் பள்ளியின் கல்விச்செலவை மட்டும் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு விளையாட்டு விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்விடுதிகளில் தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, நீச்சல், கூடைப்பந்து, குத்துச் சண்டை, வாள் சண்டை, டோக்வோண்டா, ஹேண்ட்பால், கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், இறகுப்பந்து, டென்னிஸ் என சர்வதேச அளவில் விளையாடப்படும் 15 விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். விடுதியில் உள்ள மாணவர்களுக்கு தினமும் காலை 5. 30 முதல் 7.30 வரை விளையாட்டுப் பயிற்சி இருக்கும். அதன் பிறகு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவிட வேண்டும். பள்ளி முடித்து விட்டு விடுதி திரும்பும் மாணவர்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மீண்டும் பயிற்சி. 7-8 இரவு உணவு இடைவேளை. இரவு 8 மணிமுதல் 10.30 வரை பள்ளிப் பாடங்கள் படிக்க வைக்கப்படும். திங்கள் முதல் சனி வரை இப்பயிற்சி முறை தொடரும். சனிக்கிழமை பள்ளி விடுமுறை எனில் அன்று முழுவதும் விளையாட்டுப் பயிற்சி இருக்கும்.
இப்பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு அலுவலகத்தில் ரூ. 10 ரொக்கமாகச் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களுடன் தகுதியான பள்ளி, வயது (தேவைப்படின் சாதிச்சான்றிதழ்), விளையாட்டுச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, பூர்த்தி செய்து அங்கேயே கொடுத்துவிட வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்களை இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 25 என்றாலும் கூட, ஆர்வமுடைய மாணவர்கள் மே 1 -ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று அங்கேயே உடனே சமர்ப்பித்து விடவேண்டும். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 2 முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வுக்கு, தகுதியான சான்றிதழ்களுடன் நேரடியாக வந்தும் கலந்துகொள்ளலாம்" என்றார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைப் பொது மேலாளர் என். சுந்தரம்.
நீலகிரி, நாகர்கோயில், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தகுதித்தேர்வு வரும் மே-2 ஆம் தேதியும், திருப்பூர், தூத்துக்குடி, திருவாரூர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, விழுப்புரம், தர்மபுரி, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தகுதித்தேர்வு வரும் மே-3 ஆம் தேதியும், ஈரோடு, தஞ்சாவூர், தேனி, ராமநாதபுரம், பெரம்பலூர், திருவண்ணமாலை, சேலம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தகுதித்தேர்வு வரும் மே-4 ஆம் தேதியும், கோவை, திருநெல்வேலி, அரியலூர், கரூர், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தகுதித்தேர்வு வரும் மே-5 ஆம் தேதியும், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும். மாவட்ட விளையாட்டு அலுவலகங்களைத் தொடர்புகொண்டு தேர்வு நடைபெறும் இடம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
விவரங்களுக்கு: www.sdat.tn.gov.in

No comments:
Post a Comment