தேர்வு முடிவுகளை அறிய சிறப்பு ஏற்பாடு
By நாகப்பட்டினம்
First Published : 08 May 2013 01:49 AM IST
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் இலவசமாக அறிந்து கொள்வதற்காக நாகை மாவட்ட ஆட்சியரகத்திலும், கல்வித் துறை அலுவலகங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் உடனடியாக அறிந்து கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் கட்டணமின்றி எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நாகை மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்டரங்கில் தேசிய தகவலியல் மையம் சார்பில் 20 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்களுக்குத் தெரிவிக்கும் பணிக்காக 40 ஆசிரியர்கள் இந்த மையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதைத் தவிர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (நாகை, மயிலாடுதுறை), மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட மைய நூலகம் மற்றும் திருக்குவளை, வேதாரண்யம், தரங்கம்பாடி, சீர்காழி கிளை நூலகங்கள், குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றிலும் இந்தக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் வியாழக்கிழமை (மே 9) காலை 9.45 மணி முதல் மாணவ, மாணவிகள் தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை அளித்துத் தேர்வு முடிவுகளை இலவசமாகப் பெறலாம். பள்ளிகளில் காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்படும். இதன் மூலமும் மாணவ, மாணவிகள் தங்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர் து. முனுசாமி. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன், தேசிய தகவலியல் அலுவலர் பிரான்சிஸ், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், வெள்ளைச்சாமி, மாவட்ட மைய நூலக அலுவலர் பெ. தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment