பாப்பாக்கோவில் அரசுப் பள்ளியில் கழிப்பறை அமைக்கக் கோரிக்கை
By நாகப்பட்டினம்
First Published : 21 May 2013 02:29 AM IST
நாகை அருகே உள்ள பாப்பாக்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் என்.பி. பாஸ்கரன், நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம் :
பாப்பாக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் சுமார் 250 மாணவ, மாணவிகள் படித்தனர். 8 பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 13 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஆனால், இப்பள்ளியில் கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.
மேலும், குடிநீர் வசதியின்மை, மின் விசிறிகள் இல்லாதது போன்றவற்றால் இப்பள்ளி மாணவ, மாணவிகள் சந்திக்க நேரிட்ட பிரச்னைகள் ஏராளம்.
மாணவ, மாணவிகளின் கல்விக்கு ஏற்றச் சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை. வீட்டுக்கு ஒரு கழிப்பறை அமைப்போம் என முழக்கமும், முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் நிலையில், பள்ளியில் கழிப்பறை இல்லாதது வேதனைக்குரியது.
எனவே, இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, வரும் கல்வியாண்டு தொடங்கும் முன்பாக இந்தப் பள்ளிக்குக் கழிப்பறை, குடிநீர், மின்விசிறி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment