முப்பருவ கல்வி முறை 9-ம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்படும்: கல்வியமைச்சர் அறிவிப்பு
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 10, 7:53 PM IST
சென்னை, மே 10-
தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆற்றிய உரை வருமாறு:-
தமிழக கல்வி வரலாற்றில், முதன்முறையாக உலகத்தரத்திலான, கற்றல் கற்பித்தல் முறையை வழங்கும் வகையில் முப்பருவக் கல்வி முறையை முதல்வர் ஜெயலலிதா நமக்கு வகுத்துத் தந்திருக்கிறார். 2012-2013 இல் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ – மாணவியர்களுக்கு முப்பருவக் கல்விமுறையும், முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது! இது இந்த ஆண்டு 2013- 2014-இல் 9-ஆம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்படும்.
இதன் மூலம் - ஒவ்வொரு பருவத்திற்கும் தனித் தனிப் பாடநூல்கள்; மாணவர்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் பயிற்சி முறைகள் மதிப்பெண்களுக்குப் பதிலாக தரக்குறியீடு-இதனால் மாணவ – மாணவியர் தேர்வு பயமும் நீங்கும்; மன அழுத்தமும் குறையும். தொடர் மதிப்பீட்டு முறைக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, அரசு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, 12 ஆம் வகுப்பு வரை, கலைத் திட்டம் உருவாக்கம் செய்தல். ஆசிரியர்களுக்குத் தொடர் பயிற்சி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
கல்வியில் பின் தங்கிய 26 ஒன்றியங்களில் தலா ஒரு மாதிரிப் பள்ளி வீதம் 26 மாதிரிப் பள்ளிகள் ரூ.78 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இப்பள்ளிகள் அமைக்கப்படுவதால் 14,560 மாணவ – மாணவியர்கள் தரமான கல்விப் பெறுவதற்கு வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
அரசு, கல்வித்துறை, பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கிடையே தகவல் தொடர்பு – ஏற்படுத்தும் ‘கல்விசார் தகவல் மேலாண்மை முறைமை’ என்ற முறை இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்.
இதன் வழியாக பள்ளிகள் பற்றிய தகவல், பாடநூல் பதிவிறக்கம், வினா வங்கி – தேர்வு முடிவுகள், கல்வி சார்ந்த பொதுத் தகவல்கள், அறிக்கைகள், புள்ளி விபரங்களை இணையம் வழியாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி அடிப்படையிலான ஆசிரியர்களின் வருகைப்பதிவு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பொறுப்புணர்வையும், கடமையுணர்வையும் , வருகையையும் கண்காணிக்கும் விதமாக அமைந்ததே “குறுந்தகவல்” அடிப்படையிலான ஆசிரியர்களின் வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் தான் இது போன்ற முறை உள்ளது.
முன்னோட்டமாகத் திருச்சி மாவட்டத்தில் 5 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட இம்முறை வரும் கல்வியாண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் தகவல் தொழில் நுட்பம் முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வசதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 2011 – 2012 இல் தலா ரூ. 25 இலட்சம் ஓதுக்கீட்டில் அறிவுசார் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment