தொண்டியக்காடு நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படாததால் மேற்படிப்பு படிக்க வழியின்றி மாணவ, மாணவிகள் தவிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பதிவு செய்த நேரம்:2013-05-08 10:51:10
முத்துப்பேட்டை, : முத்துப்பேட்டை ஒன்றியம் தொண்டியக்காட்டில் உள்ள நடுநிலைப் பள்ளி கடந்த 56 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியை தொடராமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். எனவே இப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் தொண்டியக்காடு என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இந்த பள்ளியில் தொண்டியக்காடு, கற்பனாதாகுளம், விளாங்காடு, வேம்பளங்காடு, வடகாடு, முனாங்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மற்றும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளாவார்கள். தொண்டியக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க வேண்டுமெனில் அங்கிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள முத்துப்பேட்டை அல்லது 10 கி.மீ தூரத்தில் உள்ள இடும்பவனம் அல்லது துளசியா பட்டினத்திற்கு சென்று தான் படிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் அவர்களால் தினமும் உழைத்து சாப்பிட வேண்டிய நிலையில் தங்களின் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டாமல் விட்டு விடுகின்றனர். இதன் காரணமாக இந்த கிராமங்களிலிருந்து 8ம் வகுப்பிற்கு மேல்படிப்பவர்களின் எண்ணி க்கை குறைவாக உள் ளது.
தமிழக அரசு கல்வித்துறைக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகிற இந்த காலகட்டத்தில் அதிகாரிகள் இதுபோன்ற கிராமங்களில் உள்ள பள்ளி களை தரம் உயர்த்த வேண்டியதன் அவசியம் பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் உள்ளனர் என்று அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் வரும் 10ம்தேதி கல்வி மானிய கோரிக்கையில் தொண்டியக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுபற்றி தொண்டியக்காடு ஊரா ட்சி தலைவர் பூவா னம் கூறுகை யில்,
கடந்த 1956ம் ஆண்டு நடுநிலைபள்ளியாக்கப்பட்ட தொண்டியக்காடு பள்ளி இதுவரை உயர்நிலைப் பள்ளியாகவோ, மேல்நிலைப் பள்ளியாகவோ தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெருவதில் சிக்கல் உள்ளது. இதுபற்றி நான் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரியவில்லை. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த கல்வியாண்டில் தரம் உயர்த்துவார்கள் என நம்பிக்கை உள்ளது என்றார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் குப்புசாமி கூறும்போது, தொண்டியக்காட்டிலிருந்தோ அதன் சுற்று வட்ட பகுதியிலிருந்தோ இடும்பவனம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைக் காலத்தில் சென்று வருவது மிகவும் சிரமம். குறிப்பாக பெண் பிள்ளைகளை வெகுதூரம் அனுப்பி படிக்க வைக்க பெற்றோ£கள் அஞ்சுகின்றனர். காரணம் இப் பபகுதியில் உள்ளவர்கள் காலை 8 மணிக்கே வேலைக்கு சென்று மாலை 6 மணியளவில் தான் வீடு திரும்புகின்றனர்.
இதில் தங்களது பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வந்து விட்டார்களா என்பதை கண்காணிக்க முடியாது என்பதால் படிப்பை 8ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர அனுமதிக்காத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள பெண்கள் கல்வியறிவுபெற வேண்டும் எனில் முதல் கட்டமாக தொண்டியக்காடு நடுநிலைப் பள்ளியை படிப்படியாக மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றார்.
மாணவி மகிந்தா கூறும்போது, நான் இந்த பள்ளியில் 8ம்வகுப்பு வரை படித்து விட்டு முத்துபேட்டை அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். இதற்காக நான் காலை 7 மணிக்கெல்லாம் பஸ்சுக்கு செல்ல வேண்டியுள்ளது. என்னுடன் 8ம் வகுப்பு படித்த 15க்கும் மேற்பட்ட மாணவிகள் மேல்படிப்பை தொடராமல் நிறுத்தி விட்டனர். இதற்கு முக்கிய காரணம் வெளியூர் சென்று படிக்க வைக்க அவர்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை என்கின்றனர். எனவே எங்கள் ஊர் பள்ளியிலேயே 12ம் வகுப்பு வரை படிக்க வசதியாக தொண்டியக்காடு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தமிழக அரசு தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment