பள்ளிக் கட்டடம் இடிந்ததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்!
By ஜி. யோகானந்தம், திருத்தணி
First Published : 01 May 2013 05:13 AM IST
- பள்ளிக் கட்டடம் சேதமடைந்ததால் தனியார் வீட்டில் கல்வி பயின்று வரும் மாணவர்கள்.
திருவாலங்காடு அருகே பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து,3 மாதங்கள் ஆகியும் கட்டடம் சீரமைக்காததால் மரத்தடியிலும், வாடகை கட்டடத்திலும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் முத்துகொணாடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கோடிவள்ளி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சீமை ஓடுகளால் ஆன இரு வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது.
பள்ளியின் பின்புறம் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி இருந்தது. இத்தொட்டியில் குடிநீர் நிரப்பட்டு கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் தொட்டியைப் பராமரிக்காததால் தொட்டியின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடிநீர் தொட்டி இடிந்து பள்ளிக் கட்டடம் மீது விழுந்தது. இதில் கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததது. ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.
பள்ளி கட்டடம் சேதம் அடைந்ததால், அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து சம்மந்தப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலக, ஒன்றிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் வந்து நேரில் பார்வையிடவில்லை என மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாணவர்கள் மரத்தடியிலும், தனியார் வீட்டிலும் போதிய இடவசதியின்றி கல்வி பயின்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு இம்மாதம் 30 தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி தொடங்குவதற்கு முன், இடிந்த பள்ளிக் கட்டடத்தை புதுப்பித்துத் தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment