புத்தகம் இன்றி 2011, ஆசிரியர் இன்றி 2013 தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு பாதிப்பு
கருத்துகள்

நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாததால், வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் ஓரளவு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் தமிழகத்தில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தமிழ் வழிக்கல்வி முறை பின்தங்கிவிட்டது. இதை சரிசெய்ய சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆட்சியில் அமலாக்கினர். ஆனால், கடந்த 2011ல் சமச்சீர் கல்விக்காக அச்சிடப்பட்ட புத்தகங்கள் கைவிடப்பட்டு புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதனால் சுமார் 3 மாதங்கள் பிள்ளைகள் பள்ளி சென்று படிக்காமல், விளையாடியும் ஊர் சுற்றியும் பொழுதை போக்கினர். பல பள்ளிகளில் பாடம் நடத்தாமலேயே ஒப்புக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர் காலி பணியிடங்கள் சுமார் 20 ஆயிரம் உள்ளன. இம்மாதம் கூடுதலாக சில ஆயிரம் பணியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க முடியாதவாறு ஆசிரியர் தகுதி தேர்வு தடையாக உள்ளது. கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அதிகமில்லாத வடமாநிலங்கள் சிலவற்றில் கல்லூரி கல்வியை முடித்த வேகத்தில் பலரும் ஆசிரியரானதால், தகுதி தேர்வை மத்திய அரசு அமலாக்கியது. இத்திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் எதிர்ப்பை மீறி 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி அடையாததால் மறு தேர்வு நடத்தப்பட்டது. அக்டோபரில் நடந்த இத்தேர்வில் வென்றவர்களை டிசம்பரில் நியமித்தனர். இதனால் பாடம் நடத்தும் பணி பாதிப்படைந்தது.
சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே ஆசிரியர் நியமனம் நடந்தால் தான் திட்டமிட்டு, கால அட்டவணை போட்டு பாடம் நடத்தி முடிக்க முடியும். அதுவும் கலந்தாய்வு முடிந்த பிறகு ஆசிரியர்களை நியமனம் செய்வதே நல்லது என்று ஆசிரியர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment