அதிகாரிகள் நெருக்கடியால் விற்பனைக்கு வரும் தனியார் பள்ளிகள்
கருத்துகள்
தமிழகத்தில் எழுத்தறிவு விகிதத்தை உயர்த்த பள்ளிக்கல்வியில் தனியாரை புகுத்துவதுதான் ஒரே தீர்வு என கருதப்பட்டது. இதையடுத்து எம்ஜிஆர் ஆட்சியின்போது மெல்லமெல்ல இத்துறையில் தனியார் காலடி எடுத்து வைக்க தொடங்கினர். மெட்ரிக் பள்ளிகளுக்கென, கடந்த 2001ம் ஆண்டில் தனி இயக்குநரகம் தொடங்கப்பட்டது. அதன்பின், பட்டிதொட்டி எங்கும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் புற்றீசல்களாய் முளைத்தன.
கடந்த 2001 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளின் வரவும், வளர்ச்சியும் அபரிமிதமாக இருந்தன. அரசுப்பள்ளிகளில் நிலவும் அடிப்படை வசதி குறைவையும், மக்களின் ஆங்கில மோகத்தையும் தனியார் பள்ளிகள் நன்றாகவே அறுவடை செய்து வருகின்றன.
தனியார் பள்ளிகளின் இந்த அசுர வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டம் கண்டு வருகிறது. சாதாரண, நடுத்தர அளவிலான பள்ளிகளை இனியும் தொடர்ந்து நடத்தி வருவது கல்லாவை ஒருபோதும் நிரப்பாது என்ற முடிவுக்கு பல தனியார் பள்ளி தாளாளர்கள் வந்துள்ளனர். காரணம், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்.
இந்த சட்டம் தமிழகத்தில் 2011ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் வகுத்துள்ள கடுமையான விதிமுறைகள் ஒருபுறம், அதிகாரிகள், அரசியல் புள்ளிகளின் லஞ்ச வேட்டை ஒருபுறம் என இருபக்க நெருக்கடிகளால் தனியார் பள்ளிகள் கடுமையாக தத்தளித்து வருகின்றன.
ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை, 30 குழந்தைக்கு ஒரு ஆசிரியர், ஆர்சிசி கட்டடம், ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய விதிகளை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்கிறது அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம். இந்த சட்டத்தை சுருக்கமாக, ஆர்டிஇ எனலாம். 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைக்கு இலவச கட்டாய கல்வியை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.
தனியார் பள்ளிகள் ஏழை குழந்தைக்கு அளிக்கும் 25 சதவீத ஒதுக்கீடுக்கு உண்டான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்பது ஆர்டிஇ சட்டத்தின் முக்கிய அம்சம். அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 2.50 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டதாக தமிழக அரசு கூறுகிறது.
ஆனால், அதற்கான செலவு கட்டணத்தை இன்னும் பள்ளிகளுக்கு வழங்கவில்லை என சீறுகின்றன தனியார் பள்ளிகள்.ஆர்டிஇ சட்டம் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்துவதாக சொல்லப்பட்டாலும், இது முற்றிலும் ஹம்பக் ஆன சட்டம் என்கிறார், தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார்.
ÔÔபள்ளிகளின் அமைவிடத்தை பொறுத்து அவற்றுக்கு குறைந்தபட்ச நிலப்பரப்பளவை ஆர்டிஇ சட்டம் வரையறுத்துள்ளது. அதாவது, கிராம ஊராட்சிகளில் பள்ளிகள் நடத்த குறைந்தபட்சம் 3 ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் பள்ளி தொடங்க 1 ஏக்கர், மாவட்ட தலைநகராக இருந்தால் 10 கிரவுண்டு, நகராட்சிகளாக இருந்தால் 8 கிரவுண்டு, மாநகராட்சியாக இருந்தால் 6 கிரவுண்டு நிலப்பரப்பளவு இருக்க வேண்டும். இந்த விதி அரசுப்பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே உரியது என்பதுபோல் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
அரசுப்பள்ளிகளில் 12 சதவீதம் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அதேநேரம், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்கிறார் நந்தகுமார்.இது ஒருபுறம் இருக்க, ஆர்டிஇ சட்டத்தைக் காட்டி அதிகாரிகளும், அரசியல் புள்ளிகளும் தனியார் பள்ளிகளிடம் ஏகத்துக்கும் பணம் கறப்பதாகவும் கூறுகிறார் நந்தகுமார். அவர் மேலும் கூறுகையில், ÔÔதனியார் பள்ளிகள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது தீயணைப்பு, சுகாதாரம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறைகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற ஒவ்வொரு துறை அதிகாரிக்கும் தலா ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும். இதுதவிர உள்ளூர் திட்டக்குழுமம், வட்டார போக்குவரத்து அதிகாரி, நூலகத்துறை அதிகாரி, இஎஸ்ஐ அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும். இத்தனையும் சமாளித்து, கடும் போட்டிக்கு மத்தியில் பள்ளியை லாபகரமாக நடத்துவது என்பது மலையை முடியால் கட்டி இழுப்பதற்கு சமம்,ÕÕ என்கிறார்.
ஆர்டிஇ சட்டம்அதிகாரிகள் நெருக்கடி காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் 110 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் முழு செட்அப்களுடன் விற்பனை செய்ய முன்வந்துள்ளன.
செஞ்சி அருகே ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 17 ஏக்கரில் அமைந்துள்ளது. இத்துடன் பி.எட்., கல்லூரியும் உள்ளது. அதிகாரிகளின் பிரஷ்ஷர் தாளாமல், இந்த பள்ளி, கல்லூரியை வெறும் ரூ.17 கோடிக்கு விற்க தயாராக இருப்பதாக அப்பள்ளியின் தாளாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதேபோல், ஈரோடு அருகே 1000 மாணவர்களுடன் செயல்படும் மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி, மெடிக்கல் கல்லூரி, நர்சிங் கல்லூரிகளுடன் இயங்கி வரும் கல்வி நிலையமும் ரூ.650 கோடிக்கு ஒரே பேக்கேஜ் ஆக விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறுகின்றனர் கல்வியாளர்கள்.
இப்போதைய நிலையில், திருவண்ணாமலை5, வேலூர்8, திருவள்ளூர்10, தர்மபுரி4, கிருஷ்ணகிரி5, மதுரை8, ஈரோடு6, ஊட்டி4, நெல்லை9, கன்னியாகுமரி7, தேனி4, திண்டுக்கல்3, கரூர்2, கள்ளக்குறிச்சி1, சேலம்2 என மொத்தம் 78 பள்ளிகள் விற்பனைக்கு தயாராக இருப்பதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் நந்தகுமார்.
ஆர்டிஇ சட்டத்தில் சாத்தியமில்லாத விதிகளை நீக்குவதுடன், அதிகாரிகள்அமைச்சர்களின் வசூல் வேட்டையை அடியோடு நிறுத்தினால் மட்டுமே, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் மீண்டும் புத்துணர்வுடன் செயல்பட வழிவகுக்கும் என்பதே தனியார் கல்வியாளர்களின் கருத்து.
பள்ளிக்கல்வித்துறை சொல்வது என்ன?
தமிழக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தனியார் பள்ளிகளுக்கு குறைந்தபட்ச இடப்பரப்பளவு குறித்த விதியை தளர்த்த வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆனால், பள்ளிகளில் சுகாதாரம், குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விதிகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது. சிறு அளவிலான பல பள்ளிகள், போட்டி சூழலில் நடத்த முடியாமல் கல்விப்பணியில் இருந்து ஒதுங்குகின்றன. அதற்காக ஆர்டிஇ சட்டத்தின் மீதும், அதிகாரிகள் மீதும் பழி போடுவது என்ன நியாயம்?,ÕÕ என்றார்
.
No comments:
Post a Comment