எங்கும் தொல்லை, எதிலும் தொல்லை... ஓர் அரசுப் பள்ளியின் அவலம்ஏப்ரல் 27,2013,10:47 IST
பேரூர்: பகலில் "பார் பார் பட்டம் பார் என, மாணவர்களுக்கு கற்பிக்க பயன்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரவில் சமூக விரோதிகள் மது அருந்தும் "சூப்பர் பார்" ஆக பயன்படுத்தப்படுகிறது.
தொண்டாமுத்தூர் ஒன்றியம் பச்சாபாளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். சிறுவாணி மெயின்ரோடு, பச்சாபாளையம் பிரிவிலிருந்து 1 கி.மீ தொலைவில், ரோட்டோரத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. இரவு நேரங்களில், இப்பள்ளி கட்டடத்தின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழையும் சமூகவிரோதிகள் மதுஅருந்துவது, சீட்டாடுவது உள்ளிட்ட சமூகவிரோத காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் ரோந்து வரும்போது, பள்ளியின் தெற்கு பகுதி வழியே உள்ள பள்ளத்தில் குதித்து அங்கிருந்து தப்பியோடி விடுகின்றனர். இதுதவிர, பள்ளி எதிரே சரியான பராமரிப்பற்ற நிலையிலுள்ள பொதுகழிப்பிடம் மற்றும் குப்பை குவியல்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பள்ளி எதிரே குவியும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் எழும் புகையால், மாணவர்களும் அவ்வழியே செல்வோரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
வாரநாட்கள் விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை வரும்போது, பள்ளி மைதானம், சாக்கடை வடிகால் பகுதிகளின் ஓரங்களில் மதுபாட்டில்கள் சிதறி கிடக்கிறது. என்ன செய்வதென தெரியாமல் பள்ளி நிர்வாகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாடம் படிக்கும் பள்ளிக்குள் சட்டவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க, போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment