பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் முறைகேடு
நாமக்கல் ஆசிரியர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:4/5/2013 12:19:34 PM
நாமக்கல்: பிளஸ் 2 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக, நாமக்கலில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாமக்கல் அருகே உள்ள பொம்மக்குட்டை மேடு தனியார் பள்ளியில், மார்ச் 11ம் தேதி நடந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விக்கான விடைகளை கார்க் அட்டையில் மாணவர்களுக்கு எழுதி காட்டி முறைகேடு நடந்தது. இதுகுறித்து தேர்வு துறை இயக்குனர் வசுந்தரா தேவி அளித்த புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் பி.டி. ஆசிரியர் யுவராஜ் (33), அலுவலக உதவியாளர் ஓ.ஏ. செல்வகுமார், வாட்ச்மேன் முருகேசன் (41) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் மாணவர்கள் காப்பி அடிக்க 3 பேரும் உதவியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கூறியதாவது: பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியபடி, விடைகளை பள்ளி வளாகத்துக்கு கொண்டு சென்றதாக 3 பேரும் கூறுகின்றனர். கேள்வித்தாள் எங்கிருந்து கிடைத்தது, விடைகள் எங்கு தயார் செய்யப்பட்டன போன்றவை குறித்து விசாரணை நடக்கிறது. தேர்வு பணியில் ஈடுபட்ட அனைத்து அறை கண்காணிப்பாளர்களிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
இணை இயக்குனர் கார்மேகம் பள்ளிக்கு சென்ற போது, கேட் பூட்டப்பட்டிருந்தது. அவர் சத்தம் போடவே, வாட்ச்மேன் முருகேசன் ஓடிவந்து கதவை திறந்துள்ளார். கதவை பூட்டியதற்கான காரணத்தை அவரால் சொல்ல முடியவில்லை. இதையடுத்து அவருடைய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்வு அறைகளின் பின்பக்கம் சோதனையிட்ட போது, 5 அடி உயரம், 1.5 அடி அகலமும் கொண்ட அட்டையில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகள் ஒட்டப்பட்டிருந்தன. அங்கிருந்த ஓ.ஏ. செல்வகுமார், பள்ளி நிர்வாகி கூறியபடி விடைகள் எழுதிய அட்டையை, ஆசிரியர் யுவராஜிடம் ஒப்படைத்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தெரிவித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
.
No comments:
Post a Comment