பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு கட்டாயமாக தற்காப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் கல்வியாண்டிலிருந்து அமலுக்கு வருகிறது. புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு
தற்காப்பு பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்காக நேரம் ஒதுக்கீடு செய்து விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதே போலவே தற்காப்பு பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக நடத்த வேண்டும். ஆபத்து நேரங்களில் மாணவிகள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளும் வகையிலான தற்காப்பு பயிற்சிகள் இந்த வகுப்புகளில் நடத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கான மானிய குழு (யு.ஜி.சி) ஜனவரி மாதத்தில் செயலாக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவினர் கல்வி நிறுவன வளாகங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா என்பது குறித்தும் பாலினம் குறித்தும் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் தற்காப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படுகிறது. இந்த பயிற்சியால் சம்பந்தப்பட்ட மாணவி தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும், சமுதாயத்துக்கும் உதவி செய்ய முடியும். இந்த உத்தரவை வரும் கல்வியாண்டிலிருந்து அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment