ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு நெஞ்சு வலி, மயக்கம் : கிராமத்தினர் முற்றுகை
கமுதி: கமுதி அருகே தனியார் பள்ளியில், ஆசிரியர் தாக்கியதில், மாணவனுக்கு மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமுதி அருகே நீராவியில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவர் கோபாலகிருஷ்ணன்,12. இவர் வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை கண்டித்து, வகுப்பாசிரியர் பாலமுருகன்,27, அடித்துள்ளார். இதற்கு மாணவன் கோபால கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று, ஆசிரியர் கம்பால் தாக்கியுள்ளார். இதில் மாணவனின் முகம், தாடை, நெஞ்சு பகுதியில் வீக்கமும், காயமும் ஏற்பட்டது. மயங்கிய மாணவனை, கிராமத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம், கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் இல்லாததால், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்த கிளாமரத்துபட்டியினர், கும்பலாக வந்து பள்ளியையும், மருத்துவமனையையும் முற்றுகையிட்டனர். மாலை 6 மணிக்கு மேல், டாக்டர் வந்தவுடன் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கமுதி தாசில்தார் குருசாமி சமரசம் செய்தார். பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "" நடந்தது என்ன என, தெரியவில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.
No comments:
Post a Comment