வாங்கய்யா வாத்தியாரய்யா!
எம்.செந்தில்குமார்
தேனியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம் துரைச்சாமிபுரம். சுமார் 1,800 பேர் வசிக்கும் இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகள். இந்த ஊரின் வசதி படைத்த மாணவர்கள் டவுனில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படிப்பதால், விவசாயக்கூலிகளின் பிள்ளைகள் மட்டுமே துரைச்சாமிபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
காலையில் கட்டாயத்தின் பெயரில் பள்ளிக்குச் சென்று வந்த பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வமில்லை.வீட்டில் சண்டை, ஊரில் தண்ணீர் வரவில்லை என்றால் அன்று பள்ளிக்கு மாணவர்கள் விடுமுறை எடுத்துவிடுவார்கள். படிப்பில் ஆர்வமில்லாததால், தமிழ் எழுத்துக்கள் கூட மாணவர்களை தலைசுற்றச் செய்தன.இந்தச் சூழலை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த செல்லப்பாண்டியன், தான் துரைச்சாமிபுரம் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதும் ஏழை மாணவர்களுக்கான இலவச டியூசனை தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் யாரும் எட்டிப் பார்க்காத மாலை நேர டியூசன், தற்போது மாலை 5 மணியானதும் 40 மாணவர்களுடன் களைகட்டுகிறது.
நான் ஒரு எம்.ஏ.,எம்.பில்., பி.எட் பட்டதாரி. பல வருடங்களாக நான் விவசாயம் செய்து வந்தாலும் இடையில் 3 வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். அந்த மூன்று வருடங்கள் நான் பார்த்த ஆசிரியர் பணி எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. கல்வி மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை கொண்ட எனக்கு, என் ஊர் மாணவர்களின் நிலையைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. பெற்றோர்களின் அறியாமையும், ஏழ்மையும் இனியும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக நான் ஊராட்சித் தலைவராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே மாலை நேர டியூசனை ஆரம்பித்தேன்" என்கிறார் செல்லப்பாண்டியன்.
தொடக்கத்தில் டியூசன் பக்கம் எட்டிப்பார்க்காத மாணவர்களை வரவைக்க மாணவர்களுக்கு தேவையான நோட்டு,பேனா, புத்தகம் போன்ற உபகரணங்களை வாங்கிக்கொடுத்து டியூசன் பக்கம் இழுத்துள்ளார்.
மாணவர்களுக்கு டியூசன் மட்டுமல்லாது, மாதம் இருமுறை யோகா வகுப்பு, எங்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கணினியைக் கொண்டு கணினி வகுப்பு, நன்னெறி வகுப்பு, நூலக வகுப்பு போன்றவற்றை நடத்தி வருகிறேன். எனக்கு அலுவலக வேலை இருக்கும் நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்காக எங்கள் ஊரில் உள்ள பட்டதாரி ஒருவரை பணியமர்த்தியுள்ளேன்.இவ்வளவு செய்தும் மாணவர்கள் சில நேரம் நம்மை ஏமாற்றிவிட்டு விளையாடப் போய் விடுவார்கள், அவர்களை மறுபடியும் டியூசனுக்கு இழுக்க வாரம் ஒரு முறை பென்சில், பேனா போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்" என்கிறார், செல்லப்பாண்டியன் சிரித்துக் கொண்டே.
தமிழ் எழுத்துகள் கூட வாசிக்கத் தெரியாத துரைச்சாமிபுரம் ஏழை மாணவர்கள், தற்போது படிப்பில் ஓரளவு வளர்ச்சியடைந்து வருகின்றனர். இவரின் டியூசனில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் மிகவும் வறுமையிலுள்ள தலித் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும் இலவம் பஞ்சு பொறுக்கப் போவோம்.கிலோவுக்கு 25 ரூபாய் குடுப்பாங்க.அதை வச்சு பேனா, பென்சில், மிட்டாய் வாங்கிப்போம்.இப்ப டியூசன்ல எல்லாம் கிடைக்கிறதால சாயங்காலம் ஆச்சுனா எங்கேயும் போகாம டியூசனுக்கு வந்துடுவோம்"என்று கூறும் 4ம் வகுப்பு மாணவி பிரியா, தற்போது படிப்பில் படுசுட்டி மட்டுமல்லாமல் டியூசனின் ரெகுலர் ஸ்டூடண்ட்.
கற்ற கல்வியும், பெற்ற செல்வமும் பிறருக்குப் பயன்படாவிட்டால் வீண்" எனக் கூறும் இவர், ஊர் மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர் சாக்கடைகள், கழிப்பறைகளை ஒற்றை மனிதராகப் போய் சுத்தம் செய்திருக்கிறார். அதன் விளைவு, இப்போது ஊர் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து, மேற்கண்ட வேலைகளைப் பொறுப்புடன் செய்துவருவதால், ஊரே பளிச்சென்றிருக்கிறது.
நாம் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என நினைப்பதை விட, நாமே அந்த வேலையைச் செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்களுக்கும் தங்கள் தவறு புரியும். தற்போது நான் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் ஆகின்றது. மீதமுள்ள என் பதவிக்காலத்திற்குள் துரைச்சாமிபுரத்தை தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றிக் காட்டுவேன்" என உறுதிபடப் பேசுகிறார் செல்லப்பாண்டியன்.
எனக்கென்ன லாபம் அல்லது தனக்கென்ன வந்தது என்று கணக்குப் போட்டு நழுவிக் கொள்ளும் பலருக்கு நடுவே, பதவிக்காலம் முழுக்க ஊருக்கு உதவி செய்யத் துடிக்கும் செல்லப்பாண்டியன் ஒரு முன்னோடித் தலைவர்தான்.
தொடர்புக்கு: 97877 81444
No comments:
Post a Comment