1500 பள்ளிகள் மூடப்படும் அபாயம்?
ஆ. பழனியப்பன்
கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்த பிறகு, தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளிகளின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் பெருமளவில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் செயல்படும் 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உட்பட சுமார் 1,500 பள்ளிகளின் அங்கீகாரம் நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு, தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு அப்பள்ளிகளில் இல்லாததே முக்கியக் காரணம்.
கும்பகோணம் பள்ளி, தீவிபத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் 2004ல் நிகழ்ந்தது. அது குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான பல விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கியது. பள்ளிகளில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும், கான்கீரிட் கட்டிடங்களில் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்பதுடன், பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்பதையும் அரசு வரைமுறைப்படுத்தியது.
2005ம் ஆண்டு மெட்ரிகுலேஷன், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளுக்கு உட்படாத 1,500 பள்ளிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு இல்லாத பள்ளிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், 2009ம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் வந்தது. அச்சட்டத்தின்படி, ஏற்கெனவே அரசு உருவாக்கிய விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். எனவே, அடிப்படை வசதிகள் இல்லாத 2,500 பள்ளிகளுக்கு 2011ல் நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசு. போதுமான நிலப்பரப்பு அல்லாத பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது, பள்ளிகளை தொடர்ந்து நடத்தக்கூடாது, அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற விதிமுறைக்கு உட்பட்ட பள்ளிகளில் சேர்க்க வேண்டும், முறையாக அரசு அனுமதி பெற்ற பிறகே பள்ளிகளை நடத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டது. தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் கோரின. எனவே, போதிய இடவசதி இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் வரும் கல்வியாண்டு தொடங்குவதற்குள் இப்பிரச்சினையில் ஓர் முடிவை தமிழக அரசு எடுத்தாக வேண்டியிருக்கிறது.
நிலம் தொடர்பான அரசின் விதிமுறையைப் பின்பற்றுவதில் பல சிரமங்கள் இருப்பதாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.
நிலம் தொடர்பான அரசின் விதிமுறைகள் நியாயமானது. ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான அளவுக்கு விளையாட்டு மைதானம் இருப்பது அவசியம். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்த நிலப்பரப்பில் பள்ளியை ஆரம்பித்தவர்களால் இப்போது நிலம் வாங்க முடியாது. நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. லீஸுக்கு இடம் வாங்கலாம் என்றால், எதிர்காலத்தில் சிக்கல் வரும் என்ற பயத்தில், லீஸுக்கு நிலம் கொடுக்க யாரும் தயாரில்லை. விதிமுறைகளை கறாராக அமல்படுத்துவது என்று அரசு முடிவு செய்தால், போதிய நிலமில்லாத பள்ளிகளை மூடுவதைத்தவிர வேறு வழியில்லை" என்கிறார் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் க.ராஜேந்திரன்.
நில அளவு காரணமாக பள்ளிக்கான அங்கீகாரம் பெற முடியவில்லை. அங்கீகாரம் இல்லாததால், பல பிரச்சினைகள் வருகின்றன. பள்ளி வாகனங்களுக்கு பெர்மிட் கூட வாங்க முடியவில்லை. நிலத்தின் மதிப்பு 20 மடங்காக அதிகரித்து விட்டது. எனவே, பள்ளியை ஒட்டி, நிலம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு அருகாமையில் இடம் வாங்கினால், அது ஏற்கப்படுவது இல்லை. பள்ளிக்குப் பக்கத்திலேயே வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அது சாத்தியம்தானா என்பதை அரசு உணர வேண்டும். பள்ளி இயங்கும் இடத்திற்கு ஏற்ப மாணவ, மாணவியர் படிக்கும் வகையில் அனுமதி அளித்து, அரசு உத்தரவிட வேண்டும். ஒரு மாணவருக்கு 10 சதுர அடி வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால், 6 சதுர அடி போதும் என்பது எங்கள் கருத்து. எனவே, 20 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட பள்ளிகள், புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து, அரசு சுமுகமாக ஒரு முடிவை எடுத்து வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்கு, முன்பாக அறிவிக்க வேண்டும்" என்று கூறுகிறார், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன்.
அரசு விதிப்படி குறைந்தபட்ச நிலப்பரப்பை உறுதி செய்ய, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை தமிழக அரசு பல முறை நீடித்துவிட்டது. நடப்பு கல்வி ஆண்டுடன் அப்பள்ளிகளுக்கான அங்கீகாரம் முடிவடைகிறது. இவ்விஷயத்தில் தமிழக அரசு கறாரான முடிவை எடுக்குமானால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகள் மிஞ்சும் என்பது தெரியாது. சென்னையில் உள்ள பிரபலமான, பெரிய பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கிடையாது. ஆண்டுக்கு ஒருநாள் நேரு விளையாட்டரங்கம் போன்ற இடங்களில் விளையாட்டு தினம் நடத்துவதோடு சரி. அதுபோன்ற பெரிய பள்ளிகள் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. சாதாரணப் பள்ளிகள் நிலைதான் கேள்விக்குறியாக உள்ளது" என்கிறார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இதற்கான மாற்று வழிகள் குறித்து யோசிக்க வேண்டும்" என்று கூறுகிறார், கல்வியாளர் அருணா ரத்னம்.
நிலம் தொடர்பான பிரச்சினை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் உள்ளது. விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகள், அரசுக்குச் சொந்தமான விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தலாமா என்பது குறித்த விவாதம் கேரளாவில் நடைபெறுகிறது. அங்கு மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு போதிய நிலம் கிடைக்காது. எனவே, மாற்றுவழிகள் குறித்து அங்கு, யோசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓசூர் மாதிரியான திடீர் வளர்ச்சி கண்ட நகரங்களில் இடமே கிடையாது. அதுபோன்ற இடங்களில் உள்ள பள்ளிகளை என்ன செய்யப்போகிறார்கள்? இப்பிரச்சினைக்கு பயனாளிகள் பார்வையில் இருந்து தீர்வுகளைத் தேடுவதுதான் சரியானதாக இருக்கும். இது குறித்து வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்" என்கிறார், அருணா ரத்னம்.
நிலம் இருக்கட்டும், அதைக்காட்டிலும் இன்னொரு முக்கியப் பிரச்சினையை எழுப்புகிறார் பிரின்ஸ். கல்வி உரிமைச்சட்டம் அமலுக்கு வந்து, 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது கட்டாயம். சட்டம் அமலுக்கு வந்து இதுவரை 20,000 பேர் மட்டுமே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர். ஆகையால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்தான் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். 5 ஆண்டுகள் முடிவதற்குள் எல்லா ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றிபெறுவது சாத்தியமில்லை" என்கிறார், பிரின்ஸ் கஜேந்திரபாபு.
என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
அரசுப் பள்ளிகளின் அவலம்
மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், குடிநீர், நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசுப் பள்ளிகளுக்கும் பொருந்தும். அரசுப் பள்ளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது?
பெரும்பாலும் அரசுப் பள்ளிகள் போதுமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் விஸ்தாரமான விளையாட்டு மைதானங்கள் உள்ளன. பெரும்பான்மையான மாணவர்கள் இன்றைக்கும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனர் என்றாலும், அரசுப் பள்ளிகள் பலவற்றில் மாணவர்கள் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. குழந்தைகள் கல்வி உரிமை குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சம கல்வி இயக்கம் என்கிற தன்னார்வ அமைப்பு கடந்த டிசம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 100 பள்ளிகளில் ஆய்வு நடத்தினோம். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சரியில்லை. பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, எங்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, இராமநாதபுரம் மாவட்டம், வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் ஒரு மாணவர் மட்டுமே படிக்கிற பள்ளியைக் கண்டறிந்தோம். சேலத்தில் ஆய்வு செய்தபோது, 20 பள்ளிகளில் கழிப்பறையே இல்லை. நான்கிற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 64 பள்ளிகளைக் கண்டறிந்தோம். ஒரேயொரு மாணவர் கூட இல்லாத ஆரம்பப் பள்ளி ஒன்றை, இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கண்டறிந்தோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழையனூர் பள்ளியில் 187 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர்" என்று ஆச்சரியமூட்டும் புள்ளி விவரங்களை அடுக்கினார், சம கல்வி இயக்கத்தின் பொதுச்செயலாளர் செல்ல செல்வக்குமார்.
கோவில்பட்டி அருகே என்.சுப்புலாபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஒரு மாணவர் கூட கிடையாது. 1963ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு, 7 மாணவர்களாக குறைந்தனர். கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அவர்களுக்கு 2 ஆசிரியர்கள். அந்த குடும்பமும் வெளியூர் சென்றுவிட்டதால், இப்போது அங்கு ஒரு மாணவர்கூட இல்லை. ஒரு மாணவர் கூட இல்லாமல், 2 ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார்களாம்.
இந்தப் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பள்ளி நிர்வாகக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கல்வி உரிமைச்சட்டம் கூறுகிறது. அக்குழுவில் 75 சதவிகிதம் பெற்றோர்களும் 25 சதவிகிதம் உள்ளாட்சி அமைப்பு மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும். பள்ளியில் கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலும் இக்குழு அமைக்கப்படவில்லை.
பள்ளிகள் தரம் பிரிப்பால் கல்விச் சூழல் தரமாகுமா?
தமிழகத்தில் செயல்படும் நர்சரி பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள்வரை, மொத்தமுள்ள 12,500 பள்ளிகளையும் தரம் பிரிப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம், வகுப்பறை-மாணவர் விகிதாச்சாரம், ஆசிரியர்களின் தகுதி, ஆசிரியர்களின் சம்பளம், விளையாட்டு மைதான நிலப்பரப்பு, நூலகத்தரம் மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கை, பசுமைச்சூழல், சொகுசு வசதிகள், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, பள்ளி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகளைத் தரம் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. A,B,C,D எனப் பள்ளிகள் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன.
கட்டண நிர்ணயம் குறித்து 2009ல் கருத்தறிய விடப்பட்ட கேள்வித்தாளில் (questionnaire), பள்ளிகளால் அளிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் பள்ளியின் தரம் நிர்ணயிக்கப்படும்.
மரங்கள் சூழ பசுமையாகக் காட்சியளிக்கும் வளாகம் கொண்ட பள்ளிகள் மட்டுமே, ‘பசுமைச் சூழல்’ கொண்ட பள்ளிகள் என்று கருதப்படும். அழகுக்காக வளர்க்கப்படும் மரங்கள், அல்லது சின்னச்சின்ன செடிகள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிகள் ‘பசுமைச் சூழல்’ கொண்ட பள்ளிகளாகக் கருதப்படாது. மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் 24 மணிநேரமும் மருத்துவ வசதிகள் கொண்ட பள்ளிகளுக்கு, ‘வசதிமிக்க’(sophisticated) பள்ளிகள் என்ற அந்தஸ்து வழங்கப்படும்.
மாநகராட்சி அல்லது நகராட்சி போன்ற அமைப்புகளுக்குச் சொந்தமான விளையாட்டு மைதானங்களை வாடகைக்கு எடுக்கும் பள்ளிகள், விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளிகளாகக் கருதப்படாது. செயல்பாடு மற்றும் நிர்வாகம் குறித்த விவரங்களை பெற்றோர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
மாணவர்-பெற்றோர் குறைதீர்ப்புப் பிரிவு, கட்டண விவரங்களை தகவல் பலகையில் தெரிவித்தல், பள்ளியின் இணையதளத்தில் பள்ளியைப் பற்றிய விவரங்களை வெளியிடுதல், குறித்த காலங்களில் பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றுக்கு மதிப்புப் புள்ளிகள் (Points)வழங்கப்படும். ஆசிரியர்களுக்கான பயிற்சி, வகுப்பறைச் சூழல், சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் போன்ற அளவுகோல்களின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இந்தச் செயல்பாடுகள் உதவும் என்று அரசு கருதுகிறது.
மாணவர் சேர்க்கையைப் பொருத்தளவில், பெரும்பாலான மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. ஆனால், அந்த மாணவர்கள் கற்றுக்கொண்டது என்ன என்பதைப் பார்க்கிறபோது, பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நல்ல மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் ‘சி’ அல்லது ‘டி’ கிரேடு பள்ளியிலிருந்து வந்தவராக இருந்தால், அவர் தரம் குறைந்த பள்ளியிலிருந்து வந்தவர்தானே என்று பார்க்கப்படமாட்டாரா? அரசுப் பள்ளிகளில் எத்தனை ‘ஏ’ அல்லது ‘பி’ கிரேடு பெறும்? அரசு நிர்வாகங்களில் ஊழல் மலிந்து கிடக்கும் சூழலில், என்ன விலை கொடுத்தாவது, ‘ஏ’ கிரேடு வாங்கிவிட வேண்டும் என்று பள்ளிகள் முயற்சிக்காதா? சி, டி கிரேடு பள்ளி மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை ஏற்படாதா? பள்ளிகளின் தரத்தை உயர்த்த, வேறு சரியான முறைகளை அரசு கையாள முடியாதா? அரசுப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை விரைவுபடுத்தாதா என அரசின் இந்த முயற்சி பல கேள்விகளை எழுப்புகிறது.
No comments:
Post a Comment