கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் 26 மாதிரி பள்ளிகள்மார்ச் 06,2013,07:27 IST
மத்திய அரசு, நாடு முழுவதும், கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒரு மாதிரிப் பள்ளியை நிறுவி, இலவசமாக, தரமான ஆங்கில வழி கல்வியை அளித்து வருகிறது.சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக, கல்வியில் பின்தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள், வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளன. கட்டடப் பணிகள் இன்னும் துவங்காததால், தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 44 ஒன்றியங்கள், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 18 ஒன்றியங்களில், மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள், முடியும் தருவாயில் உள்ளன.
தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.மாதிரிப் பள்ளிகளில் சேர, கிராமப்புற மாணவ, மாணவியர், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 18 பள்ளிகளிலும், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக, மீதியுள்ள, 26 ஒன்றியங்களில், தலா ஒரு மாதிரிப் பள்ளி வீதம், 26 மாதிரிப் பள்ளிகளை, வரும் கல்வி ஆண்டு முதல் துவக்க, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு பள்ளியும், 3 கோடி ரூபாய் செலவில், கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, கூடுதலாக, 25 முதல், 50 லட்சம் ரூபாய் வரை தேவை. கூடுதல் தொகையை, தமிழக அரசிடம் இருந்து பெற்று, கட்டுமானப் பணியை துவக்க உள்ளோம்.
வரும் ஜூன் மாதம் முதல், கட்டுமானப் பணிகள் துவங்கும். தற்காலிகமாக, 26 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டில் இருந்து, பள்ளியை துவக்கவும், முடிவு செய்துள்ளோம். ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாணவர் சேர்க்கை நடக்கும்.
ஒவ்வொரு வகுப்பிலும், தலா, 40 மாணவர் வரை சேர்க்கப்படுவர். 2014-15ம் கல்வி ஆண்டில் இருந்து, கூடுதலாக, மேலும் ஒரு வகுப்பு துவங்கப்படும்.கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள உள் கட்டமைப்பு வசதிகளைப் போல், அனைத்து வசதிகளையும், இந்த பள்ளிகள் உள்ளடக்கி இருக்கும்.
ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, 30 பேர் வரை, நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment