பள்ளி மாணவர்களுக்கு காப்பீட்டு திட்டம் கிடைக்குமா?மார்ச் 11,2013,08:41 IST
சென்னை: கேந்திர வித்யாலயா பள்ளிகளை போல், தமிழக பள்ளி மாணவர்களுக்கும் காப்பீடு (இன்சூரன்ஸ்) திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற, எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக பள்ளி மாணவ, மாணவியர், விபத்தில் சிக்கி காயமடைவதும், உயிர்ப்பலி ஆவதும், தினந்தோறும் நடக்கும் நிகழ்வாக மாறியுள்ளது. பல பள்ளி வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதாலும், அதிகமான வேகத்தில் இயக்கப்படுவதாலும், தமிழகத்தின் ஏதாவது ஒரு இடத்தில், தினமும் விபத்து நடப்பது வாடிக்கையாகி விட்டது.
விபத்தில் சிக்கி காயமடையும் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளியாக இருந்தால், பள்ளி நிர்வாகமே மருத்துவ செலவை பார்க்க வேண்டும். அதுவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியராக இருந்தால், கண்டிப்பாக மாணவரின் பெற்றோர் தான், மருத்துவ செலவை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால், பல ஏழை மாணவர்கள், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அங்கு எப்படிப்பட்ட சிகிச்சை கிடைக்கும் என்பது உலகறிந்த விஷயம்.
அந்த மாணவர்கள் தரமான சிகிச்சை பெற முடியாமல், தங்களின் வாழ்நாள் முழுவதும் ஊனத்துடன் எதிர்காலத்தை தொலைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.அப்படிப்பட்ட சூழல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றால், அதை தடுக்க ஒரே வழி, பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் காப்பீடு செய்வது தான்.
தமிழக பள்ளிகளில், பல லட்சம் மாணவர்கள் படிக்கும் நிலையில், அரசு தரப்பில் காப்பீடு செய்வது சாத்தியமா? தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களின் மேம்பாட்டுக்காக, தமிழக அரசு பட்ஜெட்டில், 14 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கும் நிலையில், காப்பீடு திட்டத்துக்கு பணம் கட்டுவது என்பது சாத்தியமான விஷயமே என்று, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள, 1,080க்கும் மேற்பட்ட, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, வரும் கல்வியாண்டு முதல் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்ய, அப்பள்ளிகளின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாணவர்கள் விபத்தில் சிக்கினால், 2 லட்சம் ரூபாய் வரை சிகிச்சையும், விபத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், 3 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகையும், பெற்றோருக்கு கிடைக்கும்.
இதற்காக, ஒரு மாணவருக்கு, 70 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை மட்டுமே ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட காப்பீடு திட்டம், தமிழக பள்ளி மாணவ, மாணவியருக்கு கிடைக்க செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
அ.தி.மு.க., அரசு, மாணவர்களின் நலனுக்காக, இலவச பாடபுத்தகம், நோட்டு, ஜாமின்ட்ரி பாக்ஸ், லேப்-டாப், சீருடை, கல்வி கட்டண சலுகை என்று, ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.அதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்தினால், அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏழை பெற்றோருக்கும் உதவினார் போல இருக்கும் என்று கல்வியாளர்களும், மாணவர்களின் பெற்றோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment